`மேக் இன் இந்தியா’, உயரே... உயரே...!

`மேக் இன் இந்தியா’, உயரே... உயரே...!
Updated on
3 min read

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இத்திட்டம் அவசியமா, இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில் இப்போதுதான் இத்திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பெங்களூருரில் கடந்த வாரம் தொடங்கிய வான் கண்காட்சியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கைகோர்த்து தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளதைத் தொடர்ந்து இத்திட்டம் தற்போது துளிர்க்கத் தொடங்கியுள்ளது.

2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம். தொழில் உற்பத்தியில் இந்தியாவை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். அதாவது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து பொருள்களைத் தயாரித்து அவற்றை வெளிநாட்டுக்கு அனுப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ராணுவ விமானங்களைத் தயாரிக்கும் அக்யுஸ் நிறுவனம் கோவாவில் உள்ள டுயெம் எனுமிடத்தில் பன்முக விமான உற்பத்தி மையத்தைத் தொடங்கப் போவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆலையில் முதல் கட்டமாக ரூ.500 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் பன்முக பிரிசிசன் இன்ஜினீயரிங் நுட்பம் கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்கும் இயந்திரங்கள் மற்றும் வடிவமைப்புக்கான புதிய தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்டவை இந்திய ராணுவத்துக்குத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இந்தியாவையும் இடம்பெறச் செய்துள்ளது. இத்துடன் மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டமான ஸ்கில் இந்தியா திட்டத்துக்கு உதவும் வகையில் பிரிசிசன் உற்பத்தியில் கருவி தயாரிப்பை இளைஞர்களுக்கு கற்றுத் தரவும் திட்டமிட்டுள்ளது.

விமான உதிரி பாகங்களைப் பொறுத்தமட்டில் இந்தியா பெரும்பாலும் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. இந்நிறுவனம் அமைவதால் இறக்குமதி குறையும். உதிரிபாகங்களுக்கு வெளி நாட்டு நிறுவனங்களைப் பெரிதும் சார்ந்திருக்கும் சூழல் குறையும்.

இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் மெலிகெரி தெரிவித்துள்ளார்.

பேட்டரி கார் தயாரிப்பில் முன்னோடியாகத் திகழ்ந்த மெய்னி குழுமம் பெங்களூருவை அடுத்த பொம்பசந்திரா எனுமிடத்தில் சர்வதேச விமான உற்பத்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரிவைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. விமான வடிவமைப்பு, மின்னுற்பத்தி மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட மூன்று துறைகளில் கவனம் செலுத்தப் போவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கவுதம் மெய்னி தெரிவித்துள்ளார.

கல்யாணி ஸ்டிரேடஜிக் சிஸ்டம் (கேஎஸ்எஸ்எல்) நிறுவனத்துடன் இஸ்ரேல் ஏரோஸ்போஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து விமானப் படைக்குத் தேவையான பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும். தரையிலிருந்து மற்றொரு இலக்கைத் தாக்குவது மற்றும் தரையிலிருந்து கடல் இலக்கைத் தாக்குவது போன்றவற்றிலிருந்து காக்கும் நுட்பமான பாதுகாப்புக் கருவிகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேல் நிறுவனம் சர்வதேச அளவில் இத்தகைய கருவி தயாரிப்பில் மிகவும் பிரபலமானதாகும். வெகு சில நிறுவனங்களே இத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் இரு நிறுவனங்களும் கூட்டாக சேர்ந்திருப்பது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது என்று கல்யாணி குழுமத் தலைவர் பாபா கல்யாணி தெரிவித்துள்ளார்.

இதேபோல ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடெட் (ஆர்டிஎல்) நிறுவனமும் பிஜேஎஸ்சி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இந்நிறுவனம் விமானதுறையில் அதிநவீன கருவிகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

மிகவும் வலுவான கார்பன் பைபர் கூட்டு பொருள் தயாரிப்பது, முப்பரிமாண ஏர் பிரேம் தயாரிப்பில் இவ்விரண்டு நிறுவனங்களும் கூட்டாக ஈடுபட உள்ளன. நாகபுரியில் உள்ள திருபாய் அம்பானி ஏரோஸ்பேஸ் பார்க்கில் இவற்றைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் என்றாலே பெரும்பாலானவர் களுக்கு சொகுசு கார்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் விமான இன்ஜின் தயாரிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மிகவும் பிரபலமானதாகும். இந்நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக சேவை மற்றும் விநியோக மையத்தை (எஸ்டிசி) தொடங்க முன்வந்துள்ளது. இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்படும் விமானங்களுக்கான சேவையை இந்த மையம் அளிக்கும்.

பெங்களூருவில் ஆண்டுதோறும் நடைபெறும் விமான கண்காட்சியில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் மிக்க ஆண்டாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 30 நாடுகளிலிருந்து விமான தயாரிப்பு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங் கேற்றுள்ளன. மொத்தம் 72 வகையான விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 2 லட்சம் வர்த்தக பார்வையாளர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 550 நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இவற்றில் 270 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களாகும்.

ராணுவ விமானங்களான ரஃபேல், ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் எப்-16 ஜெட் விமா னங்கள் காட்சியில் பங்கேற்றன. முதல் முறையாக சீனாவிலிருந்து 6 நபர்கள் கொண்ட குழு இக்கண்காட்சியில் கலந்து கொண் டது. அந்நாட்டு தயாரிப்புகள் எதுவும் இடம்பெற வில்லை. ஹெச்ஏஎல் நிறுவனத்தின் ஹாக் எம்கே 132 விமானம் முதல் முறையாக இங்கு காட்சிப் படுத்தப்பட்டது. இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானமாகும்.

பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் இந்திய விமான படையின் சூரிய கிரண் சாகசமும், பிரிட்டனின் எவோல்வோக்ஸ் ஹெலிகாப்டரும், ஸ்வீடனின் வான் சாகசமும் கண்காட்சியில் இடம்பெற்றன. மேக் இன் இந்தியா திட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகிறது. ராணுவம் சார்ந்த விமானங்கள், பிற பாகங்கள் தயாரிப்பு மட்டுமின்றி ஆட்டோமொபைல், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றிலும் பிற நிறுவனங்கள் இந்தியா வுடன் கூட்டு சேர ஆர்வம் காட்டுகின்றன.

ஜாகுவார்

டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்திய ஜாகுவார் நிறுவனம் தனது புணே ஆலையை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இங்கு ஜாகுவார் தனது 5 மாடல் கார்கள், எஸ்யுவி-க்களைத் தயாரிக்கிறது. ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்தின் தாயக ஆலை பிரிட்டனில் உள்ளது.

இந்நிறுவனத்தின் ஜாகுவார் எக்ஸ்இ, எக்ஸ்எப், லாண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர் எவோக் ஆகிய மாடல்களை இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் இதன் விலை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை குறையும். இதனால் ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிட முடியும் என்று ஜாகுவார் கருதுகிறது.

ஆப்பிள் ஐ போன்

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே கிடையாது. ஆனால் கவுரவத்தின் அடையாளமாகக் கருதப் படுவது ஆப்பிள் ஐ போன்கள்தான். காரணம் இதன் விலைதான். குறைந்தபட்ச விலையே ரூ. 40 ஆயிரம். இந்த நிலையை மாற்ற ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் ஐ-போன்களைத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூருவில் ஒப்பந்த அடிப்பையில் தங்களது தயாரிப்புகளை அசெம்பிள் செய்ய இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

அரசு வேலை வாய்ப்பு அருகி வருகிறது. தனியார் துறை முதலீடுகள் குறைந்து வருகின்றன. வேலை வாய்ப்பைப் பெருக்க ஒரே வழி தனியார் துறையும் வெளிநாட்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து ஆரம்பிக்கும் தொழிலை ஊக்குவிப்பதுதான். இதற்கு மேக் இன் இந்தியா ஓரளவு உதவியாக உள்ளது. இதை அரசு சரியான வழியில் கையாண்டால் இத்திட்டம் எதிர்பார்த்த வெற்றியை நிச்சயம் எட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in