

சொகுசு கார் தயாரிப்பில் ஜெர்மன் தயாரிப்புகளுக்கு இணையாக சர்வதேச அளவில் போட்டியிடும் ஸ்வீடனின் வோல்வோ நிறுவனத் தயாரிப்புகள் இந்திய சாலைகளில் அதிகம் வலம் வருகின்றன.
அதிகரித்துவரும் தேவையை உணர்ந்து இந்தியாவில் அசெம்பளி ஆலை அமைக்க வோல்வோ திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய கூட்டாளியை இந்நிறுவனம் தேடி வருகிறது. தற்போது வோல்வோ கார்கள் அனைத்துமே இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனையாகின்றன. இதனால் மிக அதிக அளவில் இறக்குமதி வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் வோல்வோ கார்களின் விலை அதிகமாக உள்ளது.
இறக்குமதி வரி 100 சதவீதம் முதல் 180 சதவீதம் வரை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் அசெம்பிளி ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் கார்களின் விலை குறையும். விற்பனை அதிகரிக்கும் என வோல்வோ உறுதியாக நம்புகிறது.
இந்தியாவில் விற்பனையைத் தொடங்கியதிலிருந்தே உள்ளூர் கூட்டாளியைத் தேடி வருவதாக வோல்வோ கார்ஸ் நிறுவனத் தலைவர் ஹகன் சாமேல்சன் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது இதைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் நிலைமையை நன்கு உணர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களை தாங்கள் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அசெம்பிளி ஆலை அமைப்பதற்கான முதலீடு, அதை செயல்படுத்தும் இந்திய கூட்டாளி ஆகியவற்றை பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியைத் தேடிவருவதாகத் தெரிவித்தார். ஸ்வீடன் தயாரிப்பாக இருந்து வந்த வோல்வோ நிறுவனத்தை இப்போது சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான ஷெஜியாங் ஜீலி ஹோல்டிங் குழுமம் சமீபத்தில் கையகப்படுத்தியுள்ளது.
வோல்வோ நிறுவனத் தயாரிப்புகள் மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய கார்களுக்குப் போட்டியாக விளங்குகிறது. அத்துடன் டொயோடாவின் லெக்ஸஸ், ஜாகுவார், லாண்ட் ரோவர் ஆகிய கார்களுக்குப் போட்டியாகவும் இது திகழ்கிறது. இந்தியாவில் சொகுசு கார்களின் சந்தை வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு 37 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் வால்வோவின் பங்கு 5 சதவீதமாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் சுங்க வரி அதிகமாக உள்ள நிலையிலும் மற்ற கார்களின் விலையுடன் போட்டியிடும் வகையில் வால்வோ காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்வோ இந்தியா நிறுவனத்தின் லாபம் அவ்வளவாக இல்லை. இதைத் தொடர்ந்தே இந்திய கூட்டாளியைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வால்வோ. இந்தியாவில் அசெம்பிளி ஆலை அல்லது உற்பத்தி ஆலை அமைக்கும்பட்சத்தில் வால்வோ காரின் விலைகள் மேலும் குறையும்.
ஆட்டோமொபைல் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆரம்பத்தில் இந்திய கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழிலைத் தொடங்கும். பிறகு இங்கு தங்களது இடம் ஸ்திரமானவுடன் இந்திய கூட்டாளியைக் கழற்றிவிட்டுவிட்டு சொந்தமாக தொழிலை நடத்தும். இது பெரும்பாலான நிறுவனங்களில் நிகழ்ந்துள்ளது. வால்வோவின் இந்திய கூட்டாளி தேடும் படலமும் இவ்வகையில் முடிந்துவிடாது என நம்புவோமாக.