

முதலிடத்தை பிடிப்பது கடினம், அதை விட அதனை தக்க வைத்துக் கொள்வது அதை விடக் கடினம். இந்த விதிக்கு ஒவ்வொரு சமயத்திலும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இதற்கு சமீபத்திய உதாரணங்கள் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகள். ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த இந்த வங்கிகளின் சந்தை மதிப்பு இப்போது முதல் 10 இடங்களுக்குள் கூட இல்லை.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்த கத்தின் முடிவில் (17/06/2016) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சந்தை மதிப்பு பட்டியலில் 11-வது இடத்திலும் ஐசிஐசிஐ வங்கி 13-வது இடத்திலும் உள்ளன.
கடந்த வருடத்தின் தொடக் கத்தில் இந்த வங்கிகள் முதல் 10 இடங்களுக்குள் இருந்தன. இந்த இரு வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்ததன் விளைவு காரணமாக இந்த பங்குகளின் விலை சரிந்து சந்தை மதிப்பும் சரிவடைந்தது.
வாராக்கடன் அளவு எவ்வளவு என்று பார்ப்பதற்கு முன்பாக இந்த வங்கிகளின் முந்தைய சந்தை மதிப்பு எவ்வாறு இருந்தது என்பதை பார்ப்போம்.
ஐசிஐசிஐ வங்கி
கடந்த 2007-ம் ஆண்டு பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்த சமயத்தில் ஐசிஐசிஐ வங்கி பங்கின் சந்தை மதிப்பு உச்சத்தை தொட்டது. ஒரு லட்சம் கோடி ரூபாய் என்னும் சந்தை மதிப்பை தொட்ட முதல் வங்கி ஐசிஐசிஐ வங்கி. தவிர இந்த இலக்கை தொட்ட எட்டாவது இந்திய நிறுவனமும் இதுதான்.
கடந்த 2015-ம் ஆண்டு கூட இந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ.2.2 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த சில காலாண்டுகளாக சரிந்து இப்போது ரூ.1.38 லட்சம் கோடியாக சந்தை மதிப்பு அடிப்படையில் 13-வது இடத்தில் இருக்கிறது.
தவிர கடந்த மே மாதத்தில் கோடக் மஹிந்திரா வங்கி, வர்த்தகத் தின் இடையே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பை விட உயர்ந்தது. இப்போது கோடக் மஹிந்திரா வங்கி ரூ.1.37 லட்சம் கோடி சந்தை மதிப் புடன் 15-வது இடத்தில் இருக்கிறது. கோடக் மஹிந்திரா, ஐசிஐசிஐ-யை முந்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது.
எஸ்பிஐ
வங்கிப் பங்குகளை பொறுத்த வரை ரூ.2.9 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் ஹெச்டிஎப்சி வங்கி முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வங்கி யின் சந்தை மதிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் எஸ்பிஐயின் சந்தை மதிப்பு ரூ.2.28 லட்சம் கோடி. ஆனால் அதன் பிறகு சீராக ஹெச்டிஎப்சி வங்கி பங்கு உயர்ந்தது, எஸ்பிஐ சீராக சரிந்து, இப்போது ரூ.1.6 லட்சம் கோடியாக இருக்கிறது.
மற்ற பொதுத்துறை வங்கி களுடன் ஒப்பிடும் போது எஸ்பிஐ வாராக்கடன் குறைவு என்றாலும் அதிகமே. இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் 6.5%. தனியார் வங்கிகளில் வாராக்கடன் குறைவு என்ற பிம்பம் இருந்தாலும் ஐசிஐசிஐ மொத்த வாராக்கடன் 5.8 சதவீதம். ஆனால் ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த வாராக்கடன் 0.94%
வேகமாக வளர்வது முக்கியம். அதை விட விவேகமும்.