

தலைநகர் டெல்லியில் 2000 சிசிக்கு மேலான டீசல் கார்களுக்குத் தடை நீடிப்பு, 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களை உபயோகத்திலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத அதாவது புகையில்லா போக்குவரத்தை சாத்தியமாக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டுதானிருக்கிறது.
1991-களின் பிற்பாதியில் தாராளமயமாக்கல் நடவடிக்கையின் பலனாக அதிவேக வளர்ச்சியடைந்த துறைகளில் மிக முக்கியமானது ஆட்டோமொபைல் துறைதான். அந்நிய முதலீடு 100 சதவீத அளவுக்கு கதவுகள் திறந்துவிடப்பட்ட நிலையில் ஏறக்குறைய பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலை அமைத்து உற்பத்தி செய்து வருவதன் காரணமும் இதுவே. ஆண்டுக்கு 17 சதவீத வளர்ச்சி எட்டப்படுவதும் இத்துறையில்தான். இந்தத் துறையின் ஆண்டு வருமானம் ரூ.1,65,000 கோடியாக உள்ளது. ஏறக்குறைய 1.31 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளதும் இத்துறைதான்.
வாகன பெருக்கம் அதிகரிக்கும் அதே சூழலில் எரிபொருள் தேவைக்காக அந்நியச் செலாவணி அதிகம் செலவிட வேண்டியுள்ளது.
இவற்றுக்கு மேலாக வாகன புகையால் சூழல் மாசு ஏற்படுகிறது. சூழலை பாதுகாப்பது, அந்நியச் செலாவணியைக் குறைக்க வேண்டிய கட்டாய சூழலில் அரசு உள்ளது.
சூழல் காப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பேட்டரி ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள், கார், பஸ் என ஆட்டோ மொபைல் துறையில் பல முன்னோடி தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. இவை அனைத்தும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையின் அம்சமே.
பொது போக்குவரத்தை புகையின்றி மேற்கொள்ளும் இலக்கை நோக்கி மத்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2020-ம் ஆண்டை இலக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கை எட்டுவற்கு ரூ.14 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்திரமான, கட்டுபடியாகும் விலை யில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வாகனம் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களை உருவாக்கத் தேவையான வசதிகளை செய்து தரும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதாவது 2020-ம் ஆண்டில் பேட்டரியால் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை எட்டும் என அரசு எதிர்பார்க்கிறது.
பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது ஆகியன இதில் அடங்கும்.
எரிபொருள் செலவு குறையும்
இந்த நடவடிக்கையைத் தொடர் வதன்மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) நுகர்வு 950 கோடி லிட்டர் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 62 ஆயிரம் கோடியாகும். இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் நுகர்வு குறைவதோடு அந்நியச் செலாவணி இறக்குமதி செலவு குறையும்.
தற்போது ஹீரோ எலெக்ட்ரிக், எலெக்ட்ரோதெர்ம், ஏவான் சைக்கிள்ஸ், ஆம்பிரே வெஹிக்கிள்ஸ், லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், டோர்க் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியன இரு சக்கர பேட்டரி வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதேபோல மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி, டொயோடா, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
அசோக் லேலண்ட் மற்றும் ஸ்கானியா நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் பஸ், கனரக வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
சில நிறுவனங்கள் சூரிய மின்னாற்ற லில் செயல்படும் வாகனங்களைத் தயா ரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.
வரவேற்பு எப்படி?
தொடக்க காலத்தில் அதாவது 2012-ம் ஆண்டில் பேட்டரி வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஓராண்டில் ஒரு லட்சம் வாகனங்கள் விற்பனையானதிலிருந்தே இவற்றுக்கு வரவேற்பு இருந்ததை உணர முடியும்.
ஆனால் பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள் செல்லும் வேகத்துக்கு இணையாக இவற்றின் செயல்பாடு இல்லை எனும்போதே இவற்றுக்கான வரவேற்பு குறையத் தொடங்கியது.
மேலும் பேட்டரியை சார்ஜ் செய்ய போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதி கள் செய்யப்படவில்லை. அனைத்துக் கும் மேலாக பேட்டரி அடிக்கடி பழுதானதும் இவற்றின் பராமரிப்புச் செலவு அதிகரித்ததும் இவற்றின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பேட்டரி வாகனங்களின் விற்பனை சரிந்தது. 2013-ம் ஆண்டில் 42 ஆயிரமாகக் குறைந்தது. 2014-ல் இது 14 ஆயிரமாக சரிந்து, பேட்டரி வாகன உற்பத்தியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
நம்பிக்கை
இதனிடையே புதிதாக பொறுப் பேற்ற மத்திய அரசு சூரிய மின்னாற்றல் திட்டங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டது. அத்துடன் மரபு சாரா எரிசக்தி திட்டங்கள், புகையில்லா மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டன. இதன் வெளிப்பாடாக இப்போது பல நிறுவனங்களும் பேட்டரி வாகனத் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.
தீர்வு என்ன?
அதிக எண்ணிக்கையில் பேட்டரி வாகனங்கள் புழக்கத்துக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேட்டரி வாகனங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும் வசதியை ஏற்படுத்துவதன் மூலம் பலரும் பேட்டரி வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும்.
மோட்டார் சைக்கிள், கார், பஸ் தவிர ஆட்டோக்களும் அதிக எண்ணிக்கையில் பேட்டரியால் இயக்கப்பட வேண்டும்.
பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான சூழல் அதிகரிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக் குட்பட்ட மோட்டார் சைக்கிள்களை மட்டுமே இயக்க அனுமதிக்க வேண்டும். பெட்ரோல் நிலையங்களில் பேட்டரியை மாற்றும் வசதி அதாவது சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல கார் நிறுத்துமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதி உருவாக்கப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக பேட்டரி வாகன உபயோகம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே செய்வதன் மூலம்தான் இலக்கை எட்ட முடியும்.
- எம். ரமேஷ் ramesh.m@thehindutamil.co.in