

பேட்டரி கார் என்றாலே சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனத் தயாரிப்புகள் இந்த ஆண்டில் இந்தியச் சந்தைக்கு வர உள்ளன. சாதாரண கார் மட்டுமின்றி பந்தய கார்களை கூட பேட்டரியில் இயங்கும் வகையில் தயாரித்ததுதான் இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தன.
இப்போது இந்நிறுவனம் பேட்டரியில் இயங்கும் கனரக லாரிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே இதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த ஆண்டு செப்டம்பரில் பேட்டரி டிராக்டர் சந்தைக்கு வரும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விவரத்தை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள மஸ்க், கூடுதல் விவரங்களை அதில் குறிப்பிடவில்லை.
டெஸ்லா கார்களில் ஆட்டோ பைலட் எனும் ஒரு வசதி உள்ளது. இதை இயக்கிவிட்டால், கார் தானாக செயல்படும். அதாவது குறிப்பிட்ட வழித்தடத்தில் அது ஓடும்.
அதைப்போல இந்த லாரிகளும் பகுதியளவில் தாமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா என்ற எதிர்பார்ப்பு இத்துறையினரிடையே மேலோங்கியுள்ளது.