

இந்தியாவிலிருந்து 20 நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது இஸுஸு மோட்டார்ஸ் நிறுவனம். ஜப்பானைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் ரூ. 3 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆலை அமைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த வாரம் டெல்லியில் தனது முதலாவது எஸ்யுவி ரக காரை `மியு எக்ஸ்’ அறிமுகப்படுத்தியது.
ஜப்பானில் தலைமையகம் இருந்த போதிலும், இந்தியாவை ஏற்றுமதி கேந்திரமாக மாற்றி இங்கிருந்து வாகனங்களை உற்பத்தி செய்து 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறு வனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் சில தயாரிப்புகள் நேபாளத்துக்கு இங்கிருந்து ஏற்றுமதி யாகிறது.
இந்நிறுவனத்தின் ஸ்ரீ சிட்டி ஆலை, ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது தேவைக்கேற்ற இந்த உற்பத்தித் திறனை 1.20 லட்சம் வரை விரிவுபடுத்திக் கொள்ளவும் முடியும் என்று இஸுஸு மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் ஹிடோஷி குனோ தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் ஏற்கெனவே டி-மேக்ஸ் வி-கிராஸ் வாகனங்களையும் டி-மேக்ஸ் பிக்-அப் வாகனங்களையும் தயாரிக் கிறது. வர்ததகப் பிரிவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம் தற்போது 7 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையிலான எஸ்யுவி கார் மியு-எக்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ரக காரின் உற்பத்தி, தேவைக் கேற்ப அதிகரிக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக மாதத்துக்கு 350 கார்களை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியச் சந்தையைப் பொறுத்த மட்டில் ஏற்கெனவே எஸ்யுவி ரகங்களை பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. எனவே இந்த சந்தையில் விரைவான வளர்ச்சியை எட்ட விரும்பவில்லை. ஸ்திரமான வளர்ச்சியை நீண்ட கால அடிப்படையில் எட்டவே விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
3 லிட்டர் இஸுஸு விஜிஎஸ் டர்போ ஹை பவர் இன்ஜினைக் கொண்டுள்ள இந்த எஸ்யுவி 130 கிலோவாட் (177 பிஎஸ்) திறன் கொண்டது. இதன் அதிகபட்ச டார்க் 380 நியூட்டன் மீட்டராகும். பின்புறத்தின் இரு சக்கர சுழற்சி மற்றும் 4 சக்கர சுழற்சி கொண்டதாக இரு மாடல்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இஎஸ்டி, டிசிஎஸ் மற்றும் ஏபிஎஸ் மற்றும் இபிஎஸ் (எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட்) ஆகிய வசதிகளை உள்ளடக்கியது.
தங்களது வாகனங்களில் உள்ளூர் தயாரிப்புகளின் அளவை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நிறுவனம் மியு-மேக்ஸ் காரில் 70 சதவீத அளவுக்கு உள்ளூர் உதிரி பாகங்கள் பயன்படுத்தப் படுவதாக கோனோ தெரிவித்தார்.
ஆட்டோமொபைல் துறையில் ஜப்பான் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் என்பதை இஸுஸுவின் புதிய வரவும் உணர்த்துகிறது.