

அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகைஅறியார் வல்லதூஉம் இல் (குறள்: 713) |
சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். மறுநாள் பைபாஸ் அறுவை சிகிச்சை என்று சொல்லி இருந்தார்கள். நண்பர் மிகவும் ஆடிப் போய் இருந்தார். தனக்கு இதெல்லாம் வரும் என அவர் நினைத்ததே இல்லை. யார் தான்அப்படி நினைக்கிறார்கள்?
‘தனக்கு ஏதாவது ஒன்று என்றால், பிள்ளைகள் மனைவியைக் காப்பாற்றுவார்களா? வங்கிக் கணக்கில் நாமினேசன் செய்தோமா' என்கிற மாதிரியான எண்ண ஓட்டங்களில் பிதற்றிக் கொண்டே இருந்தார்! சொந்த பந்தங்கள், நண்பர்கள் என நிறையப் பேர் பார்க்க வந்தனர். பலரும் தைரியம் சொன்னார்கள். ஆனால் சிலர் இங்கிதமின்றிப் பேசியவை மிகவும் வருத்தமளித்தன.
‘இந்த மருத்துவமனை ஏதோ பரவாயில்லை. ஆனால் இந்த மாதிரி வைத்தியத்திற்கெல்லாம் ‘சென்னைதான் சிறந்தது' என்கிற ரீதியில் ஒரு ஒப்பீட்டில் இறங்கி நண்பர் சேர்ந்து இருந்த இடம் சரியில்லை என்று ஒருவர் சொல்ல மற்றொருவரோ அடுத்த முறை அங்கேயே போய்விடுங்கள் என்றார்!
நண்பரை ஒரு நாள் முழுக்கச் சாப்பிடக் கூடாது என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் வந்தவர்களோ தேங்காய் போளியும், தயிர் வடையும் உணவகத்திலிருந்து வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு அதற்காகவே அங்கே வரலாம் என்றனர்!
அடுத்து வந்தவர் பைபாஸ் அறுவை சிகிச்சையில் எத்தனை சதவீதம் வெற்றி் பெறுகிறது என்று இணையத்தில் படித்தாராம். அதன்படி நண்பருக்குப் பிழைத்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் 91% என்றார்! அத்துடன் பல போலி ‘ஸ்டன்ட்கள்' நாட்டில் இருப்பதாகவும் அவருக்குத் தெரிந்தவர் ஒருவர் இதில் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகவும் நிறுத்தாமல் விவரித்தார்.
இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்கக் கேட்க நண்பர் மேலும் பயந்து போனார். அவர்கள் வந்ததற்கு வராமலேயே இருந்திருக்கலாம் என்றே தோன்றியது. தைரியம் சொல்லி நண்பரை சமாதானம் செய்தது பின்கதை! அண்ணே, தேர்வுக்குச் செல்பவனிடமும் தேர்வை எழுதியவனிடமும் ஒரே மாதிரி பேசலாமா? அதைப் போல வெற்றி பெற்றவனும் தோல்வியுற்றவனும் வெவ்வேறு மனநிலைகளில் அல்லவா இருப்பார்கள்? அவரவர்க்குத் தகுந்தவாறல்லவா பேச்சு அமைய வேண்டும்?
எங்கும் பேசும் முன்பு கேட்பவர்களுக்குப் புரியும் மொழி, சொற்கள், பாணி முதலியவற்றைத் தெரிந்து கொள்வது போலவே, அவர்களது அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் அறிந்து கொள்வதும் அவசியம் இல்லையா?
ஓர் அலுவலகக் கூட்டத்தில் பேசப் போகின்றீர்கள். அங்கே மேலதிகாரியை வெகுவாக மதிப்பவர்கள் இருந்தால் பேசுவதற்கும், மேலதிகாரியைக் குறை சொல்பவர்களே அதிகம் இருந்தால் பேசும் அணுகுமுறைக்கும் வேறுபாடு வேண்டுமில்லையா?
ஒருவர் மேதாவியாக இருக்கலாம். புள்ளி விபரங்களில் ஊறி இருக்கலாம். இணையத்தில் நீந்துபவராக இருக்கலாம். ஆனால் கேட்பவரின் மனநிலைக்கேற்றவாறு பேசாவிட்டால் எல்லாம் வீண் தானே? கேட்பவரின் நிலைமையை அறியாது பேசுபவர், எவ்வளவு அழகாகப் பேசினாலும் பேசத் தெரியாதவரே, அவரால் எதுவும் சாதிக்கவும் முடியாது என்கிறார் வள்ளுவர்!
- somaiah.veerappan@gmail.com