இதுதான் அதிர்ஷ்டம்!

இதுதான் அதிர்ஷ்டம்!
Updated on
2 min read

கடந்த வாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை பே யூ நிறுவனம் கையகப் படுத்தியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. பேமெண்ட் நிறுவனமான சிட்ரஸ் பே நிறுவனத்தை ரூ.860 கோடிக்கு பே யூ நிறுவனம் கையகப்படுத்தி யுள்ளது. இந்திய நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தளத்தில் இந்த கையகப் படுத்துதல் மிகப் பெரியதாக பார்க்கப்படு கிறது. இந்த கையகப்படுத்துதல் மூலம் இந் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஆபிஸ் பாய்-க்கு 50 லட்ச ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.

ஜிதேந்திர குப்தா என்பவர் 2011-ம் ஆண்டு சிட்ரஸ் பே நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் பேமெண்ட் பல்வேறு தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். பணியாளர்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்தல் (இஎஸ்ஓபி) என்பதன் மூலம் சிட்ரஸ் பே நிறுவனத்தின் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆபிஸ் பாய் முதல் அனைத்து உயர் அதிகாரி உள்ளிட்ட அனைவ ருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் ஒவ்வொரு ஊழியரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

தற்போது இந்த இந்நிறுவனத்தை பே யூ நிறு வனம் 860 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி யுள்ளது. இதன் மூலம் மொத்த தொகையில் 43 கோடி ரூபாய் இஎஸ்ஓபிக்கு கிடைக்க இருக்கிறது. ஊழியர்கள் வைத்துள்ள பங்குகள் அடிப்படையில் இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்படும். சுமார் 15 ஊழியர்கள் 1 கோடி ரூபாயை பெறப் போகிறார்கள். மேலும் இந்நிறுவனத்தின் பணிபுரிந்த ஆபிஸ் பாய்க்கு 50 லட்ச ரூபாய் கிடைக்க இருக்கிறது. இதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று பிளிப்கார்ட் நிறுவனம் 2014-ம் ஆண்டு மிந்த்ரா நிறுவனத்தை 37.5 கோடி டாலருக்கு கையகப்படுத்தியது. குயிக்கர் நிறுவனம் ரியல் எஸ்டேட் ஸ்டார்ட் அப் நிறுவனமான காமன் புளோர் நிறுவனத்தை 11 கோடி டாலருக்குக் கையகப்படுத்தியது. ஸ்நாப்டீல் நிறுவனம் பிரீசார்ஜ் நிறுவனத்தை 45 கோடி டாலருக்கு கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்துதல் மூலம் ஊழியர்களுக்கு அதிக தொகை கிடைத்தது.

மிகக் குறைவான முதலீட்டிலேயே பெரும் பாலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. நிறுவனத்தின் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவீத பங்குகளை நிறுவனம் வழங்கும். வெறும் பேப்பரில் மட்டுமே இதற் கான ஒப்பந்தம் இருக்கும். இதனால் ஊழியர் களுக்கு எந்தவித பயனும் இல்லை. ஆனால் நிறுவனம் நன்றாகச் செயல்பட்டு மிகப் பெரிய தொகைக்கு நிறுவனம் கையகப்படுத்தும் போது ஊழியர்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும். ஆனால் பெரிய தொகையில் கையகப்படுத்துதல் என்பது மிகக் குறைந்த அளவே நடைபெறுகிறது.

இருந்தாலும் தற்போது தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பெரும் பாலும் முக்கிய மற்றும் ஆரம்ப கால பணியாளர்களுக்கு பங்குகளை வழங்குகின்றன. பங்குகளை சில வருடங்களுக்கு பிறகுதான் மாற்றிக்கொள்ள முடியும் என்றாலும் பணி யாளர்களுக்கு இது நம்முடைய நிறுவனம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. தற்போது சூழலில் பணியாளர்களை தக்கவைப்பதுதான் நிறுவனங்களுக்கு இருக்கும் முக்கியமான சவால். சில மாதங்களுக்கு முன்பு வளர்ந்த நிறுவனமாக இன்போசிஸ் கூட பணியாளர் களுக்கு பங்குகளை வழங்கியதில் இருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். சம்பளத்தை தாண்டி ஏதோ ஒன்றினை பணியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலும் வரலாம். பே யூ நிறுவனம் கையகப்படுத்தியதன் மூலம் சிட்ரஸ் பே ஊழியர்களின் வீடுகளில் கூரையைப் பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in