

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது நாம் அறிந்த பழமொழி. ஆனால் அந்த கடுகை முன்வைத்து இந்தியாவில் எழுந்துள்ள பிரச்சினைதான் இப்போது காரசாரமான விவாதமாகியுள்ளது. பி.டி.பருத்தி, பி.டி.கத்திரிக்காயைத் தொடர்ந்து தற்போது மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை பரிசோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன. டெல்லி பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை உற்பத்தி செய்து அதற்கு ‘தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11' (DMH-11) என பெயர் சூட்டியுள்ளது.
இந்தக் கடுகை வர்த்தக ரீதியாக இந்தியாவில் சாகுபடி செய்ய அனுமதி தர வேண்டும் என சுற்றுச்சூழல் மற் றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டிலுள்ள மரபணு மாற்றுப் பயிர் களுக்கான அனுமதியளிக்கும் குழுவுக்கு (Genetic Engineering Approval Committee - GEAC) விண்ணப்பித் திருந்தது. இந்த குழுவில் அரசு உயர திகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு ஆகஸ்ட் 11-ம் தேதி அனுமதியை அளித் துள்ளது. இதற்கான அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகம் பிரதமருக்கு அனுப்பியுள்ளது. எந்த நேரமும் அறிவிக் கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்த மரபணு மாற்று கடுகுக்கு இப்போது அவசியம் என்ன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விவசாயிகளும் கேள்வி எழுப்புகின்றனர். கடுகு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சந்தையில் ஏற்கெனவே மரபணு மாற்றம் செய்யப்படாத உயர்ரக விதைகள் கிடைத்து வருகின்றன. தவிர மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடிக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் இந்தியாவில் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பு கின்றனர். மரபணு மாற்றம் செய்யப் பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப் பானதா என்பதற்கான உண்மையான ஆய்வுகளும் இதுவரை நடத்தப்பட வில்லை. விதையை விற்கும் மன் சாண்டோ நிறுவனமே அந்த ஆய்வை யும் மேற்கொண்டு வருகிறது என்பதும் அச்சத்துக்கு காரணமாக உள்ளது.
ஆனால் இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவை உள்நாட்டு உற்பத்தியை விடவும் அதிகமாக இருப்பதால், எண்ணெய் வித்துகளின் சாகுபடியை அதிகரிக்க இது போன்ற உயிரி தொழில்நுட்பம் வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவை பெரும்பாலும் இறக்குமதியை நம்பியே இருக்கிறது. 2014-15ம் ஆண்டில் 1.45 கோடி டன் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடுகு எண்ணெய் மட்டும் 4 லட்சம் டன். இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் உற்பத்தி 75 லட்சம் டன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இதுபோன்ற மரபணு மாற்ற தொழில்நுட்பங்கள் தேவையாக இருக்கிறது என்கின்றனர்.
ஆனால் உற்பத்தி அதிகரிக்கும் என்று நம்பிக்கையில்தான் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி ரகம் அனுமதிக்கப்பட்டது. அது மிகப் பெரிய ஏமாற்றத்தை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. அதிக விளைச்சலைக் கொடுக்கும், பூச்சிக் கொல்லி செலவுகள் இருக்காது, லாபகரமாக இருக்கும் என இந்திய விவசாயிகள் நம்ப வைக்கப்பட்டனர். இந்த பருத்தி விதை ஏற்படுத்திய நஷ்டத்தால் இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மான்சாண்டோ, பேயர், டூபாண்ட் போன்ற நிறுவனங்கள் விதை விற்பனை சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும் பருத்தி விதை சந்தையின் 95 சதவீதத்தை வைத்திருந்த மான்சாண்டோ நிறுவனத்தின் 2014ம் ஆண்டு வருவாய் மட்டும் 49 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பல காரணங்களால் இந்திய பருத்தி விதை சந்தையிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது இந்த நிறுவனம். இதேபோல ஏதோ ஒரு நிறுவனத்தின் பிடியில் கடுகு விவசாயிகளின் எதிர்காலமும் சிக்கி சின்னாபின்னமாகும் என்பதுதான் இப்போதைய எதிர்ப்புக்கு பின்னுள்ள அச்சம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதற்கிடையில் மரபணு மாற்ற கடுகு விதை சந்தையிலும் மான்சாண்டோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தலாம் என்கிற அச்சத்தையும் விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
2008ம் ஆண்டு, பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வந்த போது இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது முதல் முறையாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை அன்றைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நடத்தினார். ஒரு கட்டத்தில் சூழலியலாளர்கள், அறிவியலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பு எதிர்ப்பின் காரணமாக பி.டி. கத்தரிக்காய் ஆராய்ச்சி தடை செய்யப்பட்டது. அதே போன்றதொரு கருத்து கேட்பு கூட்டத்தை தற்போதைய அமைச்சரும் நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் அரசு ரகசியமாக இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் விவசாயிகள்.
உலகம் முழுவதும் ஒரு சில நாடு களில் மட்டுமே இது போன்ற மரபணு மாற்றப்பட்ட உயிரி தொழில்நுட்ப சோதனை முயற்சிகள் நடத்து வருகின் றன. இந்தியாவின் பெரும்பான்மை யான மக்கள் பயன்படுத்தும் ஒரு முக் கிய உணவு பொருளில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ள அனுமதிக்க படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலை யில் அதில் அதிகபட்ச வெளிப்படை தன்மை அவசியமாகிறது. உயிரி தொழில்நுட்பங்கள் குறித்து தெளிவான கொள்கைகள் வகுக்கப்படாத நாட்டில் புறவாயில் வழியாக ஒரு தொழில்நுட்பத்தை அனுமதிப்பது யார் நலனுக்கு என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.