

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற சிலசொல்லல் தேற்றா தவர் (குறள்: 649) |
உங்களுக்குச் சுற்றி வளைத்துப் பேசும் நண்பர்கள் உண்டா? நேராக விஷயத்திற்கு வரமாட்டார்களே! பால் கிடைக்கவில்லை என்று சொல்லாமல் ‘நான் கடைக்குப் போனேனா, அங்கு நல்ல கூட்டமா,நான் முண்டியடித்து முன்னே சென்றேனா...' என்று கதை சொல்வார்கள்.
அவர்கள் எப்போதும் இப்படித்தான்! உதாரணமாக ‘நீங்கள் முட்டாள் என்று நான் உங்களை அழைக்க நினைத்தால், அதைத் தவறென்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்..' என்று சொல்வார்கள்! நாமாக இருந்தால் ‘அட மடையா' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவோம்!
ஒருவர் நீட்டி முழக்கிப் பேசுவதால் நாம் பொறுமை இழப்பதுடன், அவர் சொல்வது நமக்குச் சட்டெனப் புரியவும் புரியாது.
சினிமாவில் பஞ்ச் வசனங்கள் விரும்பப்பட அவை சுருக்கமாக இருப்பதும் தானே காரணம்!
‘கபாலி என்றால் நெருப்பு மாதிரி ஆள் தெரியுமா, கிட்டப் போனால் அவ்வளவுதான், பொசுங்கிப் போவீர்கள்' என்று நீட்டிச் சொன்னால் ரசிப்பீர்களா? ‘கபாலிடா, நெருப்புடா' என்றால் தானே உடனே பத்திக்குது?
‘ஒரு வார்த்தையில் சொல்லக்கூடியதை இரண்டு வார்த்தைகளால் சொல்லாமல் இருப்பது தான் உண்மையான திறன்' என்கிறார் தாமஸ் ஜெபர்சன்!
ஆமாங்க. பலருக்கு அந்தத் திறமை இல்லாததால் தானே அவர்கள் வளவளன்னு பேசுகிறார்கள் ?பட்டி மன்றங்களில் , பாராட்டு விழாக்களில் பார்த்து இருப்பீர்கள். நட்சத்திரப் பேச்சாளர் பலப்பல விஷயங்களை மணிக்கணக்காய்ப் பேசுவார்.
ஆனால் நாம் வீட்டிற்கு வந்தபின் அவர் என்ன பேசினார் என்று சொல்ல முடியாமல் தடுமாறுவோம்!
சிலரோ நன்றி கூறிப் பேச வந்தால் கூட ஐந்தே மணித்துளிகளில் நறுக்கென்று ஓரிரு நல்ல கருத்துகளைச் சொல்லி நம் நினைவில் நிற்பார்கள்!
பேச்சின் நோக்கம் என்ன? கேட்பவர் புரிந்து கொள்ள வேண்டும்; ஏற்க வேண்டும்!சிறப்பான பேச்சின் தாக்கம், அடையாளம் என்ன? அது நினைவில் நீங்காதிருக்க வேண்டும்! அப்படியென்றால் சுருக்கமாய்ச் சொல்வது தானே சரி?
அதனால்தான் விளம்பர வாசகங்கள் ரத்தினச் சுருக்கமாக இருக்கின்றன.ஸர்ஃபின் ‘கறை நல்லது' போல!
நிறுவவனங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் எங்கும் குறைவாகவே பேசுவதைக் கவனித்திருப்பீர்கள். அதுவே அவர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்துகிறது அல்லவா?
சுருக்கமாய்ச் சொல்வது ஒன்றும் எளிது இல்லை! அதற்குச் சொல்லவந்த கருத்தின் ஆழமான புரிதலும், சொல்லும் மொழியில் அகன்ற சொல்லாட்சியும் , அக்கருத்தை வார்த்தைகளில் வடித்தெடுக்கும் திறனும் வேண்டும்!
‘இந்தக் கடிதம் நீளமாக இருப்பதற்குக் காரணம், அதைச் சுருக்கமாக எழுதுவதற்கு என்னிடம் அதிக நேரமில்லை' என்று பிளேஸி பாஸ்கல் கூறியதை நினைத்துப் பாருங்கள்.
இணையதள வேக உலகமிது.பேசுபவருக்கு ஆசை இருக்குமளவு கேட்பவருக்குப் பொறுமை இருக்காது. அலுவலகக் கடிதமோ,பேச்சோ நச்சுன்னு இருக்கட்டும்; பட்டுன்னு பிடிச்சுக்குவாங்க!
சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல்லத் தெரியாதவர்களே பல சொற்களால் விரித்துப் பேச ஆசைப்படுவார்கள் என்கிறார் வள்ளுவர்!