பேட்டரி பஸ் தயாரிப்பில் கவனம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ்

பேட்டரி பஸ் தயாரிப்பில் கவனம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ்
Updated on
2 min read

கனரக வாகனத் தயாரிப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இப்போது சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஸ்டார் பஸ் என்ற பெயரில் பேட்டரியில் ஓடும் பஸ்ஸை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. பொது போக்குவரத்தில் இத்தகைய பஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறது டாடா மோட்டார்ஸ்.

வர்த்தக ரீதியிலான வாகனத் தயாரிப் பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45% சந்தையை தன்னகத்தே பிடித்து முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே சூழல் பாதுகாப்புக்கென எல்என்ஜி-யில் செயல்படும் பஸ்களைத் தயாரித்து அளிக்கிறது. இப்போது பியூயல் டெக்னாலஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாடு விதிகள் கடுமையாக்கப்படும் என்பதால் மட்டுமல்ல, சூழல் பாதுகாப்பில் எங்க ளுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இத்தகைய வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸின் வாகனப் பிரிவின் செயல் இயக்குநர் ரவீந்திர பிஷ்ரோடி தெரிவித்துள்ளார். பெருநகரங்களில் பொது போக்குவரத்துக்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் நகரை பசுமை சூழ் நகராக பராமரிக்கும் முயற்சியில் மும்பை நகரம் 25 பஸ்களுக்கு முதல் கட்டமாக ஆர்டர் அளித்துள்ளது. இந்த பஸ்கள் 2017-18 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அளிக்கப்பட உள்ளன. இந்த பஸ் டாடா மோட்டார்ஸின் புணே, தார்வாட், பந்த்நகர் மற்றும் லக்னோ ஆலைகளில் தயாரிக்கப்பட உள்ளன.

இந்த பஸ் 9 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் நீளம் என இரண்டு அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த பஸ்ஸில் சிசிடிவி கேமரா மற்றும் டெலிமேடிக்ஸ் சாதனங்கள் உள்ளன. இதில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. இதனால் இந்த பஸ் எந்த இடத்தில் உள்ளது, எப்போது நீங்கள் நிற்கும் பஸ் நிறுத்தத்திற்கு வந்து சேரும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த பஸ்ஸின் விலை ரூ. 2.2 கோடி என்றாலும் மத்திய அரசு அளிக்கும் மானி யம் ரூ. 61 லட்சமாகும். இதனால் இந்த பஸ் ரூ. 1.6 கோடிக்குக் கிடைக்கும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. இதனால் இது நகரப் போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றதாகும். இந்த பஸ் இஸ்ரோ ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் ஹைட்ரஜன் பியூயல் செல் தொழில் நுட்பத்தில் இயங்குவதால் தண்ணீர் வெளியேறும். இந்த பஸ்ஸின் வெளிப் பகுதி கட்டமைப்புக்காக டாடா மோட் டார்ஸ் நிறுவனம் கோவாவைச் சேர்ந்த ஏசிஜிஎல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த பஸ் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு வருவதற்கு முன்பாக ஹைட்ரஜன் நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பசுமை சூழ் நகரை உருவாக்கும் முயற்சியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. இவற்றை வாங்கி பயன்படுத்துவது அந்தந்த மாநிலங்களின் முடிவில்தான் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in