

திருச்சியைச் சேர்ந்த சந்திரமோகன் எம்பிஏ முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தவர். இப்போது தொழில்முனைவோராக 15 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறார். பிறந்த குழந்தைகளுக்கான பெட்களை ‘மாம்ஸ் லவ்’ என்கிற பெயரில் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.
சென்னையில் ஒரு நிறுவனத்தில் பத்தாண்டுகள் நிர்வாக பணியில் இருந் தேன். வேலைமாறுவது, பதவி உயர்வு என இதிலேயே சுற்றிக் கொண்டிருப்பதைவிட சொந்த தொழிலில் இறங்குவதற்கான யோசனை எழுந்தது. ஆனால் எந்த தொழில் என்று பிடிபடாமலேயே இருந்தது. என் நண்பர் ஒருவர் குழந்தைகளுக்கான பெட் தயாரிப்பு நிறுவனத்தில் மார்க் கெட்டிங் பணியில் இருந்தார். நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள் வோம்.
கோடைக்காலம், மழைக்காலம் என எல்லா நாட்களிலும் அவர் பிசியாக இருப் பார். ஏனென்றால் எப்போதுமே இதற்கான தேவை இருக்கும். விற்பனை குறைவதற் கான வாய்ப்பே இல்லாத தொழில். இது போன்ற விஷயங்கள் மனதில் எழுந்ததால் உடனடியாக சொந்த தொழிலுக்கான வேலைகளில் இறங்கினேன்.
இதை தயாரிப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக இயந்திரங்களைத் தேடி னேன். கோயம்புத்தூரில் கிடைப்பதற் கான வாய்ப்பு இருந்தது. கோவை சென்று தயாரிப்பாளர்களிடம் எனது தேவைகளைச் சொன்னதும் அதற்கேற்ப வடிவமைத்துக் கொடுத்தனர். இதற் கடுத்து பெட்டுக்குள் வைக்கப்படும் பஞ்சு எங்கு கிடைக்கும் என தேடியதில் குஜராத்தில் விற்பனையாளர்கள் கிடைத் தனர். அவர்களிடத்தில் ஆர்டர் கொடுக்க குஜராத் சென்றேன். ஆனால் அவர் களுக்கு தமிழ்நாட்டின் கரூரில் இருந்து தான் சப்ளை செய்கின்றனர் என்பது பிறகுதான் தெரிந்தது. அதன்பிறகு கரூரிலிருந்தே நேரடியாக வாங்கத் தொடங்கினேன். இந்த எல்லா வேலைகளும் எனது இண்டர்நெட் தேடல் மூலமாகவே இருந்தது.
ஆரம்பத்தில் 6 தையல் இயந்திரங் களைக் கொண்டு தொடங்கினேன். அதிக இயந்திரங்களோடு தொடங்கலாம் என்றால் இதற்கான ஆட்களைத் திரட்டுவது சிரமமாக இருந்தது. எனது ஆரம்ப கட்ட எல்லா வேலைகளுக்கும் மொத்த முதலீடு 5 லட்ச ரூபாய்தான் ஆனது.
ஆரம்பத்தில் சில தவறுகள், இழப்புகள் இருந்தாலும் தொடர்ச்சியாக இந்த தொழிலை கற்றுக் கொள்வதற்கான தேடலில் இருந்தேன். நமக்கு இதுதான் தொழில், இந்த முதலீட்டைக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு வளர வேண்டும். இந்த முயற்சியில் தோல்வியைச் சந்தித்தால் திரும்பவும் வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்கிற நெருக்கடி இருந்ததால் முழு நம்பிக்கை வைத்தேன். இந்த சூழலில் என் நண்பர் செந்தில்நாதனும் என்னோடு பிசினஸில் இணைந்து கொண்டார்.
தயாரிப்புகளை முதலில் சில்லரை விற்பனைக்கு அனுப்பவில்லை. இதனால் தொழில் முடங்கும் அபாயம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களின் உதவியுடன் மொத்த விற்பனையாளர்கள் தொடர்பை உருவாக்கினேன். தமிழ்நாட் டில் மூன்று மொத்த விற்பனையாளர் களுக்கும், கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் தலா ஒரு மொத்த விற்பனையாளருக்கும் இப்போது எனது தயாரிப்புகளை அனுப்புகிறேன்.
குழந்தைகளுக்கான பெட்களை பொறுத்தமட்டில் இப்போது 50க்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிக்கிறேன். ஆனால் மிகக் கவனமாக செய்ய வேண்டிய வேலை இது. பிறந்த குழந்தைக்கான தயாரிப்பு என்பதால் எந்த வகையிலும் தரத்தில் குறையிருக்கக்கூடாது. ஒரு சின்ன தவறு இருந்தால்கூட நமது தயாரிப்பை மக்கள் புறக்கணித்து விடுவார்கள்.
இந்த தொழிலில் கவனமாக இருக்க வேண்டிய விஷயம்; கடனுக்கு விறபனை செய்வது. மொத்த விற்பனையாளர்களுக்கு அளித்தாலும் 120 நாட்கள் கடன் என்கிற அடிப்படையில்தான் அனுப்பமுடியும். எனவே அதற்கிடையில் நமக்கு மூலதனம் தேவை. போட்டிகள் அதிகம் என்பதால் ஆர்டர்களை தேங்க விடக்கூடாது.
எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கும். ஒரு மருந்து கடைக்கு எப்படி ஆண்டு முழுவதும் தேவை இருக்கிறதோ அதுபோல நமக்கு வேலை இருக்கும். மழைக்காலம், வெயில்காலம், குளிர் காலம் என்கிற கணக்கு கிடையாது. அதனால் உற்பத்தியும் குறையாது. தற் போது 6 இயந்திரங்களுடன் பதினைந்து நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித் துள்ளேன். அடுத்ததாக 10 இயந்திரங்களை சேர்க்கும் வேலைகளில் இருக்கிறேன். இதன் மூலம் மேலும் 20 நபர்களுக்கு என்னால் வேலை கொடுக்க முடியும்.
நாம் என்ன செய்கிறோம் என்பதல்ல, எப்படி செய்கிறோம் என யோசிக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் அதில் நமது ஈடுபாடு எப்படி உள்ளது என தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்.
தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in