

ஒவ்வொருவருக்குமான அடிப்படை தேவையை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வருவாயை அரசே மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்ன என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு கொடுத்தால் அதனை அனைவருக்குமான அடிப்படை வருமானம் (Universal Basic Income - UBI) என்று கூறுகின்றனர். இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2016-17 ஆம் ஆண்டுக்கான பொருளா தார ஆய்வறிக்கையில் யுபிஐ பற்றி விரிவான அத்தியாயம் ஒன்று உள்ளது. அது பொருளாதார ஆய்வாளர்கள் மத்தி யிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் புதிய விவாதத்தை துவக்கியுள்ளது.
அனைவருக்குமான அடிப்படை வருமானம்
ஒருவர் தனது அடிப்படை தேவை களைப் பூர்த்தி செய்துகொள்ள, அவரின் வேலையின்மையோ அல்லது வறுமையோ தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் நேரடியாகக் கொடுப்பதே யுபிஐ- யின் சாராம்சம். இந்த யுபிஐ -க்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று, இது ஏழை-பணக்காரர், வேலையுள்ளவர்-வேலையில்லாதவர் என எவ்வகை பாகுபாடும் இன்றி அனைவருக்கும் தரப்படும். இரண்டாவதாக, உணவு, உடை, கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து போன்ற அடிப்படை தேவை களை மக்கள் பெறுவதற்கு உதவும் அடிப்படை ஊதியமாக இந்த தொகை இருக்கும்.
நவீன பொருளாதாரத்தில் மக்க ளிடையே பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது. இதனை சரி செய்ய செல்வந்தரிடம் அதிக வரியை வசூலித்து அதனை எளியவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில், வருமான மறுபகிர்வு மூலம் வருமான சமன்பாட்டை உருவாக்குவதைவிட, அனைவருக்கும் அடிப்படைத் தேவையை பூர்த்திசெய்வது மிக முக்கியமான கொள்கையாகப் பார்க் கும்போது, யுபிஐ திட்டம் உருவாகிறது.
நம் நாட்டில் பல மக்கள் நல திட்டங்களும் அதற்கான அதிக செலவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உள்ள குறைகளினால் அதன் பயன் மக்களை முழுவதும் சென்றடைவதில்லை என்றும், இத்திட் டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் போதுமான நிதி வருவாய் இல்லாததால் பெரிய அளவுக்கு மக்கள் நல திட்டங்கள் நிதி பற்றாக்குறையை உருவாக்குகிறது, எனவே அதனை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் உண்டு. மக்கள் நல திட்டங்களை செம்மையாக செயல்படுத்தவும், அதன் செலவைக் குறைக்கவும் யுபிஐ பயன்படுமா என்ற கேள்வி எழுகிறது.
யுபிஐ தொகை அளவு
இந்தியாவில் அரசு அறிவிக்கும் வறுமைக் கோடு அளவை எவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒருவர் வறுமைக் கோட்டை தாண்டவேண்டும் என்றால் அவருக்கு ஆண்டுக்கு ரூ. 7,620 வேண்டும் என்று கணக்கிடுகிறது இந்த ஆய்வறிக்கை. இந்தியாவில் சராசரி தனி நபர் வருமானம் ஒரு ஆண்டிற்கு ரூ. 93,231. இதைவைத்துப் பார்த்தால், அரசு கூறும் ரூ. 7,620 அடிப்படை வருமானம் தனி நபர் வருமானத்தில் 8.13 சதவீதமே ஆகும். இது போதுமானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, இந்த யுபிஐயை 75% மக்களுக்கு அளித்தால் அரசின் செலவு இப்போதுள்ள சமூக நல திட்டங்களைவிட குறைவாகவே இருக்கும். இதுவே அரசை இப்படி சிந்திக்க தூண்டுகிறதா என்றும் தோன்றுகிறது. யுபிஐ யை நிர்ணயிக்க வறுமைக்கோடு அடிப்படையாக இருக்கமுடியாது என்று தெரிகிறது. எனவே யுபிஐ அளவை நிர்ணயிக்க வேறு விரிவான ஆராய்ச்சியும் விவாதமும் தேவை.
வளங்களைத் திரட்டும் முறை
யுபிஐயை செயல்படுத்தும்போது மற்ற சமூக நல திட்டங்களை குறைத்து அதன் மூலம் பெரும் நிதியை யுபிஐ க்கு பயன்படுத்தலாம் என்ற சிந்தனையை சிலர் முன்வைக்கின்றனர். கல்வி, சுகாதாரம், போன்றவற்றில் அரசின் செயல்பாட்டை குறைத்துக்கொண்டால் அதனை UBI மூலம் பெரும் வருமானத்தைக் கொண்டு மக்கள் தனியார் துறையிடம் பெறமுடியாது.
விவசாயம், சிறு தொழில் போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் மானியங்கள் அந்த துறைகளின் குறிப்பிட்ட சிக்கல்களினால் தானே தவிர, அவை சமூக நல திட்டங்கள் அல்ல. எனவே அவற்றையும் குறைக்கக்கூடாது என்று ஒரு கருத்து உள்ளது. இதனால், வசதி படைத்தவர்கள் மீது அதிக நேர்முக வரிகள் போட்டு நிதி திரட்டுவது பகிர்வு நீதிக்குட்பட்டதாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு.
அரசின் கடமை
‘அடிப்படை ஊதியத்தை கூட்டுத் தொகையாக அளிக்க நிதிக் கோட் பாடுகள் அனுமதிக்காது; ஏற்கெனவே உள்ள நலத் திட்டங்கள் சிலவற்றை வெட்டிதான் ஊதியத் தொகையை அளிக்க முடியும்’ என்று ஆய்வறிக்கை குறிப்பிடுவதை சுட்டிக்காட்டி, அரசு தனது கடமைகளை சந்தையிடம் ஒப்படைத்து விலகிக்கொள்ள முயற் சிக்கிறதோ என்ற அச்சம் எழுகிறது. உணவு, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, கட்டமைப்பு, பல்வேறு பொதுப் பண்டங்களை அரசு தொடர்ந்து அளித்து வர வேண்டும் என்பதில் பலரும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். அரசு கொடுக்கும் யுபிஐ தொகையை மக்கள் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பையும், சூழலையும் உருவாக்கித் தரும் கடமை அரசிற்கு இருக்கிறது.
இதுவரை எல்லா நாடுகளிலும் அவ்வப்போது யுபிஐ பொது விவாதப் பொருளாக இருந்து வந்துள்ளது. இதில் யுபிஐயின் அளவை நிர்ணயிப்பது மிக பெரிய சவாலாக இருந்துவந்துள்ளது. யுபிஐ பரிட்சார்த்தமாக கொடுக்கப்பட்ட இடங்களில் மக்களின் பொருளாதார சுமையை ஓரளவிற்கு குறைத்தாலும், அரசின் மீதான நிதி சுமையை அதிகமாக்கி பின்பு யுபிஐ திட்டமே கைவிடப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் யுபிஐ ஏற்படுத்தக்கூடிய நிதிச் சுமை காரணமாக அத்திட்டம் துவங்கப்படவில்லை. எனவே இந்தியாவில் யுபிஐ போன்ற திட்டத்தை செயல்படுத்துவதைவிட அரசின் சமூக நலத் திட்டங்களை செம்மையாக, உழல் இன்றி நடத்தும் அரசியல் துணிவு மட்டுமே வேண்டும். இதுவே மிகப் பெரிய பொருளாதார சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
- raghind@gmail.com