

ஜப்பானைச் சேர்ந்த டொயோடா நிறுவனம் தனது பிரபல மாடலான அல்பார்ட் ரகக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனத்தின் இனோவா கிரைஸ்டா மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் புதிய மாடலை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
2002-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட இந்த வாகனம் தொடக்கத்தில் ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. குறிப்பாக ரஷியா, சிங்கப்பூரில் அல்பார்ட் மிகவும் பிரபலமான மாடலாகத் திகழ்கிறது.
இது ஐந்து கியர்களைக் கொண்டது. தானியங்கி கியர் வசதியுடன் 2.4 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. இதன் விலை ரூ. 50 லட்சம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது குறையக் கூடும் என தெரிகிறது.
தலைநகர் டெல்லியில் 2000 சிசி திறனுக்கு மேம்பட்ட டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் இந்தக் காரை அறிமுகப்படுத்த டொயோடா நிறுவனம் தயக்கம் காட்டி வந்தது. மேலும் இந்தத் தடையால் இந்நிறுவனத்துக்கு ரூ.1,700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது. 8,500 வாகனங்கள் அதாவது இனோவா, பார்ச்சூனர் விற்பனை பாதிக்கப்பட்டதாக விற்பனைப் பிரிவு இயக்குநர் என். ராஜா தெரிவித்திருந்தார்.
இதனால் அல்பார்ட் மாடல் காரை அறிமுகப்படுத்துவதை டொயோடா நிறுவனம் தாமதப்படுத்தி வந்தது. 6 பேர் முதல் 8 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையிலான இந்த எம்பிவி மாடலை டொயோடா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.