

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் பஸ்களைத் தயாரித்து சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள சண்டீகரில் இந்த பேட்டரி பஸ் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது.
9 மீட்டர் நீளம் கொண்ட இந்த பேட்டரி பஸ்ஸில் 31 பேர் பயணிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. முதல் கட்டமாக 15 தினங்களுக்கு இந்த பஸ் சோதித்து பார்க்கப்பட்டது. சண்டீகர் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து மாநில போக்குவரத்துத்துறையின் ஒத்துழைப்புடன் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடத்திப் பார்க்கப்பட்டுள்ளது.
15 தினங்களும் வெற்றிகரமான பயணத்தை முடித்ததைத் தொடர்ந்து பர்வனூ எனுமிடத்திலிருந்து சிம்லாவுக்கு இந்த பேருந்து இயக்கிப் பார்க்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின்போது அனைத்து பயணிகளுடன் 160 கி.மீ தூரத்துக்கு வெகு சிறப்பாக செயல்பட்டதாக டாடா மோட்டார்ஸின் பொறியியல் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் ஏகே ஜிண்டால் தெரிவித்துள்ளார். இதேபோல நீண்ட தூர பயணத்தை சமீபத்தில் நாகபுரியிலும் இந்த பேட்டரி பஸ் மேற்கொண்டது. தொலைநோக்கு அடிப்படையில் பேட்டரி வாகன தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது.
சண்டீகரில் நடத்தப்பட்ட சோதனையில் 70 சதவீதம் பேட்டரி சார்ஜ்செய்த நிலையில் 143 கி.மீ. தூரம் ஓடி இந்த பஸ் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பொது போக்குவரத்தில் பேட்டரி வாகன பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் இலக்கை செயல்படுத்தும் விதமாக இந்த சோதனை ஓட்டத்தை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.
பொது போக்குவரத்து பஸ்கள் 9 மீட்டர் மற்றும் 12 மீட்டர் நீளம் கொண்டதாக தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் கட்டமாக 31 பேர் பயணிக்கும் வகையிலான பஸ்ஸை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தின் 12 மீட்டர் ஸ்டார் ஹைபிரிட் பஸ் ஏற்கெனவே தயாராகிவிட்டது. இது ஹைட்ரஜன் பியூயல் செல் மூலம் ஓடக்கூடியது. மாற்று எரிசக்தியில் இயங்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு பஸ்களும் ஸ்மார்ட் நகரங்களுக்கு ஏற்றவை என நிறுவனம் தெரிவித்துள்ளது.