

52 வயதாகும் படேல், கென்யாவில் பிறந்தவர். யேல் பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலையில் எம்ஃபில் பட்டமும் பெற்றவர். லண்டன் பொருளாதாரக் கல்வி மையத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவையனைத்தும் இவரது நியமன நாளில் இவரைப் பற்றி வெளியான தகவல்களின் சுருக்கம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் தேர்வாக, படேல் இருந்துள்ளார்.
1990-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை சர்வதேச செலாவணி நிதியத்தில் (ஐஎம்எப்) பணியாற்றியுள்ளார். ஐஎம்எப்-பில் நியமிக்கப்பட்ட உடன் இரண்டு ஆண்டுகளுக்கு இவரை இந்திய நிதி அமைச்சகத்தின் ஆலோசகராக நியமிக்க அனுமதிக்குமாறு அப்போதைய ஐஎம்எப் தலைவரிடம் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டதிலிருந்தே பொருளாதாரத்தில் இவரது நிபுணத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
2013-ம் ஆண்டு ஆர்பிஐ துணை கவர்னராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு இவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்தவரே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான். ``இவர் இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் பொருளாதார நிபுணர்’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
கட்டமைப்புத் துறை வளர்ச்சியடைந்தால்தான் இந்தியாவின் பொருளாதாரம் வளரும் என்பதை 1990-களிலேயே உணர்ந்தவர் படேல். கட்டமைப்பு நிதி மேம்பாட்டு நிறுவனம் (ஐடிஎப்சி) உருவாக்கத்தின் முக்கியப் பிதாமகனே இவர்தான் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஐடிஎப்சி-யிலிருந்து உலக வங்கியில் முக்கியப் பொறுப்பை ஏற்க அழைப்பு வந்தபோது, தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மின் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க அழைப்பு விடுத்தார். அதன் பேரில் இரண்டு ஆண்டுகள் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். அப்போதுதான் குஜராத் முதல்வராயிருந்த நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
படேலின் மூதாதையர் வாழ்ந்த கிராமம் பலானா. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான் ஆர்பிஐ-யின் முதல் கவர்னராயிருந்த ஐ.ஜி படேல்.
ஆர்பிஐ கவர்னர் பொறுப்புக்கு பலரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோது தேர்வுக்கு ஒவ்வொருவராக பரிசீலிக்கப்பட்டனர். பிரதமரின் அரசு இல்லமான ரேஸ் கோர்ஸ் பங்களாவில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் படேலின் பதில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
ராஜனுக்கு அடுத்து படேலை நியமித்ததன் மூலம் ராஜன் மேற்கொண்ட நிதிச் சீர்திருத்தங்கள் தொடரும் என்பதை அரசு அந்நிய முதலீட்டாளர்களுக்கு உணர்த்திவிட்டது. புதியவரைத் தேர்வு செய்து விஷப்பரிட்சை செய்யாமல் மிகவும் புத்திசாலித்தனமாக படேலை நியமனம் செய்து பிரச்சினைக்கு அரசு தீர்வு கண்டுவிட்டது.
அதிகம் பேசாதவர், துணை கவர்னராயிருந்த 43 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார். ஒரு முறை டி.வி.யில் அப்போதைய யுபிஏ அரசு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்கிடும் 81 ஆண்டுக்கால ரிசர்வ் வங்கி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தவர் படேல்தான் என்பது தனிச் சிறப்பு. நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்கிடும் வழியைக் கொண்டுவந்தவர்.
பொதுவாகவே ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் அரசுக்கும் எப்போதும் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ரகுராம் ராஜனும் பாஜகவினரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் படேல் விஷயத்தில் அப்படி நிகழ்வதற்கான வாய்ப்பு குறைவு. இவர் ஏற்கெனவே அனைத்து அதிகாரிகளுடனும் சுமுகமான உறவை மேற்கொண்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதற்கும் மேலாக பிரதமரால் தேர்வு செய்யப்பட்டவர் என்பது இவருக்குக் கூடுதல் சாதக அம்சங்களாகும். துணை கவர்னராய் மூன்று ஆண்டு பதவிக் காலத்துக்குப் பிறகும் இவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இப்போது கவர்னராகவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அரசின் ஆதரவு இவருக்கு உள்ளது புரியும்.
சவால்கள்
துணை கவர்னராக இருந்தவரை, பின்னிருக்கையில் அமர்ந்தபடி ரிசர்வ் வங்கியை இயக்கி வந்த படேல், இனி கவர்னராக எப்படி செயல்படப் போகிறார் என்று பார்க்க வேண்டும். இவருக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வங்கிகள் அளிக்கும் வட்டிக்கான கடன் கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஆர்பிஐ வசம் இருந்தது. இதுவரை ரிசர்வ் வங்கி கவர்னரே இதைத் தீர்மானித்து வந்தார்.
‘ரெபோ ரேட்' அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் தருவது குறையும், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்பது ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு.
ஆனால் பொருளாதாரம் வளர்ச்சி பெற கடன்கள் மீதான வட்டியைக் குறைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் மட்டுமின்றி அரசும் வலியுறுத்துகிறது.
அரசும், தொழில்துறையும் வட்டியைக் குறைக்க வேண்டும் என்ற போதிலும், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற் காக வட்டியைக் குறைக்காமலிருந்தார் ராஜன்.(கடந்த 3 ஆண்டுகளில் 1.50 சதவீதம் வரை ராஜன் வட்டி குறைப்பும் செய்தது பரவலாக போற்றப்படவில்லை என்பது வேறு விஷயம்).
அரசுத்துறை அதிகாரிகள் 3 பேர், ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர் மற்றும் ஒரு அதிகாரி என 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கலாம் என்ற பரிந்துரையை அளித்தவர் படேல். நிதிக் கொள்கை குழு உருவானது இவ்விதமே. ஆனால் இனி வரும் காலங்களில் அரசுத் தரப்பு அதிகாரிகள் வட்டி குறைப்பு செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்தால், அதைத் தடுக்க வேண்டும் என்பதில் வலுவான ஆதாரத்தோடு தனது கருத்துகளை கூட்டத்தில் எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம் படேலுக்கு உள்ளது.
அரசு தரப்பில் 3 பேர் வட்டிக் குறைப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும்போது, ஆர்பிஐ துணை கவர்னர், அதிகாரி ஆகியோரின் நிலை என்னவாக இருக்கும். குழுவுக்குத் தலைமை ஏற்கும் படேல் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார்.
ஒருவேளை ஆர்பிஐ அதிகாரிகளில் ஒருவர் அரசுத் தரப்பு நிலைக்கு ஆதரவாக வாக்களித்தால் கவர்னரின் நிலை என்னவாக இருக்கும்?
அடுத்ததாக ரிசர்வ் வங்கியிடம் உபரியாக பல லட்சம் கோடி ரூபாய் நிதி உள்ளது. இந்த நிதியைப் பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யலாம் என நிதி அமைச்சர் கூறியபோது அதை ராஜன் மறுத்துவிட்டார். பொதுத்துறை வங்கிகளில் ஆர்பிஐ முதலீடு செய்து பிறகு வாராக் கடனுக்காக வங்கிகளுக்கு விதிமுறைகள் வகுப்பது முரண்பாடாக இருக்கும் என்பது ராஜனின் வாதமாக இருந்தது.
இந்த நிதியை அரசு பெற்று வங்கிகளில் முதலீடு செய்யலாம் என்ற வாதத்தை ஏற்கவில்லை.
ஏனெனில் ரிசர்வ் வங்கியில் உபரியாக நிதி இருந்தால்தான், அதன் ஸ்திரத் தன்மையைக் காட்டி அந்நியச் செலாவணி நிதி உள்ளிட்ட பல சலுகைகளை சர்வதேச அளவில் மத்திய அரசு பெற முடியும்.
ஒருவேளை ரிசர்வ் வங்கி உபரி நிதியை வங்கிகளுக்கு அளித்துவிட்டால் நிதி நிலை மோசமாகி, திவாலாகும் சூழல் உருவாகலாம். அல்லது தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். இதனால் இந்த முயற்சியில் இறங்க அரசு தயக்கம் காட்டக்கூடும்.
மூன்றாவதாக பொதுத்துறை வங்கிகளில் அரசுக்குள்ள முதலீட்டு அளவை 49 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று துணை கவர்னரான முந்த்ரா சுட்டிக் காட்டியுள்ளார். இவ்விதம் அரசு தனது பங்கைக் குறைக்கும் பட்சத்தில் வங்கிகள் வெளிச் சந்தையில் கடன் திரட்டி தங்களது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். வாராக் கடன் வசூலையும் திறம்பட எதிர்கொள்ள முடியும். பேசல் 3 என்ற வங்கிகளின் மூலதன அளவை எட்ட ரூ. 1.70 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 70 ஆயிரம் கோடியைத்தான் மத்திய அரசு ‘இந்திர தனுஷ்’ என்ற திட்டத்தின் மூலம் வங்கிகளுக்கு அளிக்க உள்ளது. எஞ்சிய ரூ. 1 லட்சம் கோடிக்கு வங்கிகள் என்ன செய்யும்?
இந்த விஷயத்தை படேல் எப்படி அணுகப் போகிறார் என்பதும் பெரும் பிரச்சினையே. தனியார் வங்கிகள் தொடங்குவதற்கு விதிகளைத் தளர்த்தி அறிவித்துள்ளார் ராஜன். இது இனிவரும் காலங்களில் தொடருமா? இல்லை மாற்றங்கள் வருமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
மேலும் சிறிய வங்கிகள் மற்றும் பேமன்ட் வங்கிகள் தொடங்க லைசென்ஸ் அளிக்கப் பட்டுள்ளது. இவை இனி வரும்காலங்களில்தான் செயல்பட உள்ளன. இவற்றை ஊக்குவிக்கும் வகையில் படேல் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராஜனின் சமகாலத்தவர், அவரைப் போலவே பொருளாதார நிபுணர், சர்வதேச செலாவணி நிதியத்தில் பணி புரிந்த அனுபவம் மிக்கவர், அனைத்துக்கும் மேலாக அவரைப் போல பொது அரங்கில் அதிகம் பேசாதவர். இந்த ஒரு விஷயம் கூட அரசு இவரைத் தேர்வு செய்ய காரணமாக இருந்திருக்கக் கூடும்.
மோடியின் தேர்வு படேல். ஆனால் தன்னைத் தேர்வு செய்தது சரியே என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் படேலுக்கு உள்ளது.