

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் (ஆர்காம்) ஏர்செல் நிறுவனமும் கடந்த வருட இறுதியில் இருந்து இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்திய அதிர்வலை காரணமாக இந்த இணைப்பு உறுதியாகி உள்ளது. இணைப்பு என்பது ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்குவதாகவே இருக்கும். ஆனால் இந்த இணைப்பு கொஞ்சம் வித்தியாசமானது.
இரு நிறுவனங்களும் சரி சமமாக இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கப்போகின்றன. புதிய நிறுவனத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. புதிய நிறுவனத்தில் இரு நிறுவனங்களுக்கும் 50 சதவீத பங்குகள் இருக்கும். இயக்குநர் குழுவை இரு நிறுவனங்களும் சமமாக பிரித்துக்கொள்ளும். இரு நிறுவனங்களும் சேர்த்து புதிய தலைமைச் செயல் அதிகாரியை நியமனம் செய்யும். தவிர புதிய நிறுவனத்தில் அனில் அம்பானி மற்றும் மேக்ஸிஸ் குழும நிறுவனர் ஆனந்த கிருஷ்ணன் இருக்கமாட்டார்கள் என்றும் தெரிகிறது. ஒழுங்குமுறை ஆணையங்கள், பங்குதாரர்கள் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதிக்கு பிறகு 2017-ம் ஆண்டில் இந்த இணைப்பு முழுமையடையும். புதிய நிறுவனத்தின் சொத்துகள் ரூ.65,000 கோடியாகவும், அதன் சந்தை மதிப்பு ரூ.35,000 கோடியாகவும் இருக்கும். இந்த இணைப்பு காரணமாக சில சாதகங்களும் உள்ளன. அதே சமயத்தில் சில சவால்களும் இருக்கின்றன.
கடன் குறையும்
தற்போது ஆர்காம் கடன் ரூ.40,000 கோடியாக இருக்கிறது. புதிய நிறுவனம் அமைப்பதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கடன் குறையும். ஏர்செல் நிறுவனம் ரூ.14,000 கோடியும் ஆர்காம் ரூ.20,000 கோடி கடனையும் புதிய நிறுவனத்துக்கு மாற்றுகிறது. இந்த நிறுவனங்களுக்கும் கடன் குறைந்தாலும் புதிய நிறுவனத்தின் கடன் ரூ,34,000 கோடிக்கு மேல் இருக்கும். தவிர இரு நிறுவனங்களும் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.7,600 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.
இரு நிறுவனங்களும் இணைவதில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வைத்திருக்கும் இரண்டாவது பெரிய நிறுவனமாக புதிய நிறுவனம் இருக்கும். 448 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை உள்ளது. இவை 2033-35-ம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சந்தை நிலை
தற்போது ஆர்காம் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவன மாகும். 11 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏர்செல் நிறுவனத்துக்கு 8.4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த இரு நிறுவனங்களும் இணைவதால் வாடிக்கையாளர் அடிப்படையிலான சந்தை மதிப்பு 18 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இதன் மூலம் ஐடியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் புதிய நிறுவனம் இருக்கும். முதல் இடத்தில் 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் நிறுவனமும், 19.8 வாடிக் கையாளர்களுடன் இரண்டாமிடத்தில் வோடபோன் நிறுவனமும் இருக் கின்றன.
சவால்கள்
இதுபோல சில சாதகமான விஷயங்கள் இருந்தாலும் சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏர்செல் மற்றும் ஆர்காம் நிறுவனத்தின் முக்கியமான வருமானமே குரல் வழி அழைப்புகள்தான். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ குரல் வழி சேவைகளை இலவசமாகக் கொடுக்கும் போது, புதிய நிறுவனம் டேட்டாவை நோக்கி செல்ல வேண்டும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் கபூர் கூறியிருக்கிறார்.
இரு நிறுவனங்களும் இணைந்தது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், புதிய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எல்லை இருக்கிறது என ஐடிஎப்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் இணைப்பு
இந்த இரு நிறுவனங்களும் இணைந்தாலும் இதுவே இந்த துறையின் இறுதியான இணைப்பு அல்ல என வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். டெலிகாம் நிறுவனங்களின் செயல்பாட்டு கட்டணத்தில் 30-40 சதவீதம் வரை ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு போய்விடும். சிறிய நிறுவனங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம். அதனால் சிறிய நிறுவனங்கள் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாது. ஏற்கெனவே இருந்த எம்டிஎஸ், ஸ்வான், ஸ்பைஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வெளியேறி விட்டன. இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் அதிகபட்சம் 6 நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் என பிட்ச் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பேங்க் ஆப் அமெரிக்காவும் இதே கருத்தை கூறியிருக்கிறது.
மற்ற நிறுவனங்கள் என்ன செய்யும், எவை சந்தையில் நீடிக்கும் என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.