

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு (குறள் 502) |
‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ ராமனுடன் போரிட்ட ராவணனுடைய மனநிலையை விளக்குவதற்குக் கம்பர் சொல்லும் உவமானம் இது! அவமானத்திற்கு அஞ்சும் மனிதர்கள் இருந்த நாடுதான் இது.
ஆனால் அதெல்லாம் அந்தக் காலம்! ஒருவரைப் பணியில் அமர்த்து வதற்கு முன்பு அவர் நல்ல குடும்பத்தை சேர்ந்தவரா, குற்றங்கள் செய்யாதவரா பழிச்சொல்லுக்கு அஞ்சுபவரா என்பவற்றை ஆராய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
‘பணி ஒப்படைப்பு’ (delegation) என்பதே மேலாண்மையின் மிக முக்கிய அங்கமாக, சாராம்சமாகக் கருதப்படுகிறது. உங்கள் அனுபவத்திலேயே பார்த்திருப்பீர்கள். ஒருவர் எவ்வளவு கெட்டிக்காரராக இருந்தாலும் இரண்டு அல்லது நான்கு பேர்களின் வேலையைச் செய்ய முடியுமே தவிர 10 அல்லது 100 பேர்களின் பணிகளைச் செய்ய முடியாது.
மேலும் வெவ்வேறு செயல்களுக்கு வேறுவேறு திறமைகள் தேவைப்படுகின்றன. எனவே பணி ஒப்படைப்பு தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் முடிவெடுக்கும், செலவிடும் அதிகாரங்களை வேண்டுமானால் பகிர்ந்தளிக்கலாமே தவிர, பைரன் டார்கன் சொல்வது போல, பொறுப்பை மற்றவர்களிடம் பகிர்ந்தளிக்க முடியாது.
வேலையை முடிக்கவேண்டியதும், அது சரிவர நடைபெறாவிட்டால் பதில் சொல்ல வேண்டியதும் தலைவர்தான். எனவே யாரையும் பணியமர்த்தும் முன், அவரது திறமைகளுடன் குணத்தையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
நல்ல குடும்பம் பல்கலைக்கழகமாக நல்லவற்றைக் கற்றுக் கொடுக்கும் இல்லையா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதும் உண்மை தானே. சரித்திரத்தில் படித்திருப்பீர்கள். ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சு நாட்டினருக்கும் அடிக்கடி போர்கள் நடக்கும். ஆனால் பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டது வாட்டர்லூவில்தான்! அதனால் பெருமையும் கர்வமும் அடைந்த ஆங்கிலேயர்கள் சொல்வதைப் பாருங்கள்.
‘வாட்டர்லூவின் போர், ஈடன் பள்ளிகளின் விளையாட்டு மைதானங்களிலேயே வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது!’ ஐயா, வளர்ப்பும் பயிற்சியும்தானே ஒருவனை உருவாக்குபவை! அதுசரி, குற்றம் செய்வதையே வாடிக்கையாக உள்ளவனை எப்படி உயர் பதவியில் அமர்த்த முடியும்? எடுத்ததெற்கெல்லாம் கோபப்படுபவன், ஆணவம் உடையவன், எல்லோரிடமும் பகை பாராட்டுபவன் முதலானோரிடம் பொறுப்பைக் கொடுத்தால் தலைவலியும், திருகுவலியும்தானே மிஞ்சும்!
வள்ளுவர் சொல்லும் மூன்றாவது விதி ஆழமாகச் சிந்திக்க வேண்டியது. பணியில் அமர்த்தப்படுபவன் பழிச்சொல்லுக்கு அஞ்சுபவனாகவும் இருக்கவேண்டும் என்கிறார்!. ஆமாங்க. கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று இருப்பவன் எப்படிங்க நல்லவனாக இருப்பான்? செய்திகளில் படித்திருப்பீர்கள். ஒரு பெரும் தொழிலதிபர். பல வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி. ஆனால் கோவாவில் கோலாகல பிறந்தநாள் விழா.
வேறொரு பீடித்தொழிலதிபர். எக்கச்செக்கப் பணம். நடுஇரவில் தன் குடியிருப்புக்குத் திரும்பினார். காவலாளி கேட்டைத் திறக்கத் தாமதமாகிவிட்டது. கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் மேலேயே காரை ஏற்றிக் கொன்றும் விட்டார்!
ஐயா, யாருக்கும் பயம் வேண்டும். கடவுளிடமோ, பாவ புண்ணியத்திற்கோ அல்லது தர்ம, நியாயத்திற்கோ. இல்லையா, கெட்ட பெயருக்காவது பயப்படவேண்டும். அதற்கும் பயப்படாதவன் மிகவும் ஆபத்தானவன்!
தொடர்புக்கு - somaiah.veerappan@gmail.com