

தங்க நகை விற்பனையை அதிகரிக்க `அட்சய திருதியை’ என்ற நாளைத் தேர்ந்தெடுத்து அதை வர்த்தகர்கள் பிரபலப்படுத்திவிட்டனர் என்று கூறுவதுண்டு. அன்றைய தினத்தில் ஒரு கிராம் தங்கக் காசையாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக கூட்டம் அலை மோதும். ஆண்டு முழுவதும் நடைபெறும் தங்க நகை வர்த்தகத்தில் அதிகபட்ச விற்பனை இந்த ஒரே நாளில் நடைபெறும்.
இதேபோல ஆட்டோமொபைல் துறையின் அட்சய திருதியை கடந்த மாதம் வந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள்கள் (மார்ச் 30, 31). இரு நாள்களில் மட்டும் 8 லட்சம் வாகனங்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.
காரணம் என்ன?
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு தான் இந்த விற்பனை உயர்வுக்கு முக் கியக் காரணம். பிஎஸ் III வாகனங்களை ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து விற்கக் கூடாது என்று மார்ச் 29-ம் தேதி பிற்பகலில் உத்தரவு பிறப்பித்தது. ஆட்டோமொபைல் நிறுவனங் களுக்கோ இரண்டு நாட்கள்தான் அவ காசம். இரு நாளில் விற்றுத் தீர்க்க என்ன வழி என்று யோசித்ததில் விநி யோகஸ்தர்களுடன் சேர்ந்து இந்த தள்ளுபடி சலுகையை வாரி வழங்கி விட்டனர்.
இருசக்கர வாகனங்களுக்கு அதிக பட்சமாக ரூ. 22,500 வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி காலையில் விற்பனை நிறுவனங்கள் தள்ளுபடி சலுகையை அறிவித்தன. செவி வழி செய்தியாகப் பரவிய இந்த விஷயம் காட்டுத் தீயாகப் பரவி நாட்டின் பெரும்பாலான இரு சக்கர வாகன விற்பனை நிலையங்களின் முன்பாக மக்கள் திரண்டு விட்டனர்.
முதல் நாளன்றே அதிக அளவிலான விற்பனை நிறுவனங்களில் பெரும் பாலான வாகனங்கள் விற்பனையாயின. இதன் இடையே தள்ளுபடி சலுகை அறிவிப்பு மார்ச் 31-ம் தேதி பெரும்பாலான நாளிதழ்களில் முழுப் பக்க செய்தியாக வெளியானது. இதனால் கடைசி நாளன்று வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பதற்காக முற்றுகையிட்ட மக்களைக் கட்டுப்படுத்த சில விற்பனையகங்களில் காவல்துறை உதவியை நாட வேண்டியதாயிற்று.
ஆட்டோமொபைல் விற்பனையகங் களில் மக்கள் பெருமளவு திரண்டது இதுவே முதல் முறை என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உலகிலேயே இரண்டு நாளில் அதிகபட்சமாக 8 லட்சம் வாகனங்கள் விற்பனையானதும் இந்தியாவில்தான் என்று சர்வதேச ஆட்டோமொபைல் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு சில விற்பனையகங்கள் பிஎஸ் III வாகனங்கள் இருப்பில் இல்லை என்று போர்டு வைக்கும் நிலை உருவானது. சில நிறுவனங்களோ அரை நாள் விடுமுறைவிட்டு சென்றுவிட்டன.
உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான சமயத்தில் ஆட்டோமொபைல் நிறு வனங்கள் மற்றும் விற்பனையகங்களில் கையிருப்பில இருந்த பிஎஸ் III வாகனங்களின் எண்ணிக்கை 9 லட்சமாகும். இதில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 7.51 லட்சமாகும். மற்றவை இலகு ரக மற்றும் கனரக வாகனங்களாகும்.
பொதுவாக இரு சக்கர வாகன விற்பனை தீபாவளி, பொங்கல் உள் ளிட்ட பண்டிகைக் காலத்தில் அதிகமாக இருக்கும். வட மாநிலங்களில் தாந்த் ரியாஸ் தினத்தில் அதிக வாகனங்கள் விற்பனையாகும். குறிப்பிட்ட நாளில் வாகனத்தை டெலிவரி எடுப்பதற்காக முன்பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிகம். ஆனால் முதல் நாளில் (மார்ச் 30) மட்டும் 5 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஒரு ஸ்கூட்டர் மட்டுமே வாங்க வந்த சிலர், சலுகை அதிகமாக இருப்பதால் இரண்டு வாங்கிச் சென்றுள்ளனர்.
வாகன விற்பனை அதிகரித்துள்ள அதேசமயம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கூட்டம் அலை மோதியது. 8 லட்சம் வாகனங்களையும் இரண்டு நாளில் பதிவு செய்ய வேண்டியிருந்ததால் பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கூடுதல் நேரம் செயல்பட்டுள்ளன.
இழப்பு
ஒருவேளை பிஎஸ் III வாகனங்களை விற்கக் கூடாது என தடை விதித்திருந்தால் ஆட்டோமொபைல் துறைக்கு மொத்தமாக ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும்.
இரண்டு நாள் அவகாசம் கிடைத்ததால் இத்துறையினருக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2,500 கோடியாகும். வாகனங்களுக்கு தள்ளுபடி அளித்த வகையில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 1,200 கோடி. அதேசமயம் பிஎஸ் III வாகனங்களை பிஎஸ் IV என்ற நிலைக்கு மாற்ற ரூ. 1,300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலகு ரக வர்த்தக வாகனங்களில் மாற்றம் செய்ய ஒவ்வொன்றுக்கும் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரையாகும்.
தீர்ப்பின் பலன்
``புகை மாசால் மக்கள் அவதிக்குள் ளாவதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது, எனவே மார்ச் 31-க்குப் பிறகு பிஎஸ் III வாகன விற்பனையை அனுமதிக்க முடியாது’’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனால் 2 நாளில் அதிக தள்ளுபடி அளித்து வாகனங்களை விற்றுத் தீர்த்துவிட்டன ஆட்டோமொபைல் நிறுவனங்கள். ஒருவேளை இதற்கான கால அவகாசம் அளித்திருந்தால், மக்கள் கூட்டம் அலைமோதியிருக்காது. இவ்வளவு வாகனங்களும் விற்பனை யாகியிருந்திருக்காது.
தவிர மூன்று மாத கால அவகாசம் அளித்திருந்தால், அடுத்து பிஎஸ் IV வாகனம் சந்தைக்கு வர உள்ளதை வாடிக்கையாளர் உணர்ந்து இந்த வாகனங்களைப் புறக்கணித் திருப்பர். சலுகையும் இந்த அளவுக்கு மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள் அளிக்க முன் வந்திருக்காது. மேலும் சந்தைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் சீரானதாக இருந்திருக்கும். இப்போதே 8 லட்சம் வாகனங்கள் சாலைகளுக்கு வந்துவிட்டன. இது வெளியிடும் மாசு, உச்ச நீதிமன்றம் கவலைப்பட்டதைவிட அதிகமே என்று சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அட்சய திருதியை தினத்தில் தங்கம் சர்வதேச விலை நிலவரத்துக்கேற்பதான் விற்கப்படும். ஆனால் அதிகபட்ச தள்ளுபடி அளித்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டனர் ஆட்டோமொபைல் துறையினர்.