

நம் ஊர் கோவில்களில் பிரார்த்தனை நிறை வேறியவுடன் சேவல், கோழி, மாடு என அவரவர் வசதிக்கேற்ப கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
இந்தியாவில் அதிக அளவில் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்யும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது ஹலோல் ஆலையில் தயாரான முதலாவது மோட்டார் சைக்கிளை சோமநாதர் ஆலயத்துக்கு காணிக்கையாக அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள ஹலோல் எனுமிடத்தில் மிகப் பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் நிறுவியுள்ளது. கிரீன்பீல்டு எனப்படும் பசுமை சூழும் இந்த ஆலை தனது உற்பத்தி பணிகளை கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.
இந்நிறுவனம் அமைத்துள்ள 6-வது ஆலை இதுவாகும். இந்த ஆலையிலிருந்து கடந்த வாரம் முதலாவது மோட்டார் சைக்கிள் ஸ்பிளெண்டர் புரோ வெளிவந்தது. இந்த மோட்டார் சைக்கிளை சோமநாதர் ஆலயத்துக்கு காணிக்கையாக அளிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் வங்கதேசத்தில் மிகப் பெரிய தொழிற்சாலையை நிறுவி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த ஆலை உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஆந்திர மாநிலத்திலும் ஒரு ஆலையை நிறுவி வருகிறது.
ஹலோல் ஆலையின் முதல் பிரிவு ஆண்டுக்கு 12 லட்சம் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஆலையில் உற்பத்தித் திறன் 18 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் ரூ.1,100 கோடியை நிறுவனம் முதலீடு செய்துள்ளது.