குறள் இனிது: வேலை நடக்கனும்னா... பக்குவமாகப் பேசணும்!

குறள் இனிது: வேலை நடக்கனும்னா... பக்குவமாகப் பேசணும்!
Updated on
2 min read

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் (குறள் 648)

ஒரு முறை மயிலாப்பூரில் இருக்கும் நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் பெரிய அதிகாரி. ஆனால் அதிகாரத் தொணியில் பேசுவது அவர் மனைவிதான். பெயரா? தேவியம்மா என்றால் பொருத்தமாக இருக்கும்!

காலையில் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து காபி அருந்தும் பொழுது சாந்தம்மா எனும் பணியாளர் வந்து தரையைக் கூட்ட ஆரம்பித்தார்

உடனே தேவியம்மா வேகமாக எழுந்து ‘இப்ப பெருக்க வேண்டாம், முதலில் பாத்திரங்களைக் கழுவு' என்றார். சாந்தம்மா துடைப்பத்தை ஓரமாக வைத்துவிட்டுச் சென்றார்.

ஐந்தே நிமிடங்களில் துள்ளியெழுந்த தேவியம்மா ‘முதலில் இட்லிப் பாத்திரத்தையும் மிக்ஸியையும் கழுவிக் கொடு' எனச் சத்தமிட்டார்.

அவைகளை எடுத்துச் சென்றதும் ‘விருந்தினர் வந்திருக்கும் வேளையில் இப்படி ஆடி அசைந்து அன்ன நடை போட்டால் ஆகாது, சமையல் காரரையும் காணவில்லை, வெங்காயம் உரித்துக் கொடு' என்றார்.

சளைக்காமல் கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருந்த சாந்தம்மா ‘நேற்று மாலை சொல்லி இருந்தால் சீக்கிரம் வந்திருப்பேனே' எனச் சொன்னது தேவியம்மாவுக்கு அதிகப்பிரசங்கித்தனமாகப்பட்டது.

ஐயா, வீட்டு வேலைக்காரி என்றில்லை.அலுவலகப் பணியாளர்களிடம் கூடச் சில முதலாளிகள் மற்றும் உயரதிகாரிகள் பேசும் தோரணை இதுதான்.

‘நான் சம்பளம் தருகிறேன். சொன்னதைச் செய்' எனச் சொல்லாமல் சொல்வார்கள்.

நீங்கள் சம்பளம் அதிகம் கொடுக்கலாம். விடுமுறையும் தீபாவளி போனசும் கொடுக்கலாம். அதற்காக சிறப்பாகப் பணிசெய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.

சராசரிப் பணியாளர்கள் தங்கள் திறமையில் 40% தான் பயன்படுத்துவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன! நல்ல பணியாளர்களே 60% தான் பயன்படுத்துகிறார்களாம்! இதை 80% முதல் 90% ஆக்கிவிட்டால் வெற்றி தான்!

முக்கியமான அல்லது அவசரமான பணியைக் கொடுக்கும் பொழுதும் அதற்கான காரண காரியங்களைச் சொல்லி ஊக்கப்படுத்தினால் தான் பணியாளர் உடலும் உள்ளமும் ஒரு சேர வேலை செய்வார். பணத்திற்காகப் போருக்குப் போகிறவர்களை எங்காவது பார்த்திருக்கின்றீர்களா?

அலுவலகங்களில் நடக்கும் வருடாந்திர வர்த்தக இலக்குகள் நிர்ணயிக்கும் கூட்டங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். சில உயரதிகாரிகள் ஏதோ கோயில் பிரசாத விநியோகம் போலத் தனக்குக் கிடைத்ததை ஒவ்வொருவருக்கும் சமமாக வகுத்துக் கொடுத்து விட்டு நிம்மதியாய் உட்கார்ந்து விடுவர்.

கெட்டிக்கார அதிகாரிகள் 'நமது நிறுவனம் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. விற்பனை வளர்ச்சியை உயர்த்தினால் இரண்டாம் இடத்திற்கு வந்து விடலாம்.

நாம் விளம்பரத்தை அதிகப்படுத்த உள்ளோம். உங்கள் யோசனைகளைக் கூறுங்கள். நீங்கள் மனதுவைத்தால் இது சாத்தியமே' என்கிற ரீதியில் பேசி ஒவ்வொருவருக்குமுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அதற்கேற்ற இலக்குகளை நிர்ணயிப்பார்கள்.

‘இலக்குகள் என்பவை கட்டளைகள் அல்ல. அவை இருதரப்பும் எடுத்துக்கொள்ளும் உறுதிகள்' என்கிறார் பீட்டர் டிரக்கர்!

கொடுக்கும் பணியைச் சவாலாக்குங்கள். அதை முடிக்கும் மகிழ்ச்சியை பணியாளருக்கு சொந்தமாக்குங்கள். வேலை வாங்குவது எளிதாகிவிடும்!

முறையாக இனிமையாக எடுத்துச் சொன்னால், உலகம் அதனை உடனே கேட்டு நடக்கும் என்கிறார் வள்ளுவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in