

கோடை காலம் துவங்கி விட்டதற் கான அறிகுறிகள் தெரிய ஆரம் பித்து விட்டன. குளிர்பான நிறு வனங்களும் ஐஸ்கிரீம் நிறுவனங்களும் உத்தி களை வகுக்க தொடங்கிவிட்டன. பொதுவாக கோடைகாலத்தில்தான் ஐஸ்கிரீம் விற்பனை அதிகமாக நடைபெறும். விற்பனை அதிகப் படுத்துவதற்காக ஐஸ்கீரிம் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரிக்கும்.
ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்ள இந்தக் காலகட்டத்தில் புதிய ஐஸ்கிரீம் வகைகளை அறிமுகப்படுத்தும். இந்த மாதமே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டதால் ஐஸ்கிரீமுக்கான தேவை அதிகரிக்கும் என்று அமுல், மதர் டெய்ரி, ஹட்சன், பிரபாத் டெய்ரி போன்ற நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
மேலும் புதிய வகைகளை அறிமுகப்படுத்தவும் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. பொதுவாக வெனிலா, ஸ்ட்ராபெரி, சாக்லெட் மற்றும் மேங்கோ சுவை கொண்ட ஐஸ்கிரீம் வகைகளையே இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மேலும் இந்தியாவின் பழமையான ஐஸ்கிரீம் வகைகளான கேசர் பிஸ்தா, பிஸ்தா, குல்பி ஆகியவையும் அதிகளவில் விற்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பழைய ஐஸ்கிரீம் வகைகளிலேயே சிறு, சிறு மாற்றங்களைச் செய்து புதிய வகைகளை அறிமுகப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்தியாவில் ஆறு முக்கிய நிறுவனங்களை தவிர 8,000 சிறு ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவன பிராண்டுகளும் இந்தியாவில் களமிறங்கி விட்டன. தற்போதைய தகவல்கள்படி இந்தியாவில் வருடத்திற்கு 10 கோடி டன் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் ஐஸ்கிரீம் உற்பத்தியை 15 டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை ஐஸ்கிரீம் துறையின் ஆண்டு வருமானம் 1.6 பில்லியன் டாலராக உள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் இது 3.5 பில்லியன் டாலராக உயரும் என டெக்சயின்ஸ் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
முன்பெல்லாம் கோடைகாலம் மட்டுமே ஐஸ்கிரீம் விற்பனை நடக்கும். ஆனால் தற்போது அனைத்து பருவங்களிலும் ஐஸ்கிரீம் விற்பனை நடந்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு 300 எம்எல் ஐஸ்கிரீம் உண்பதாக அந்த ஆய்வு கூறியுள்ளது. இது அமெரிக்காவில் 22 லிட்டராகவும் சீனாவில் 3 லிட்டராகவும் இருந்து வருகிறது. முன்பு இருந்ததை விட இந்தியாவில் தனிநபர் ஐஸ்கிரீம் நுகர்வு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கோடைக்காலத்தில் 40 சதவீதம் ஐஸ்கிரீம் விற்பனை நடைபெறுகிறது. ஆனால் மீதம் 60 சதவீத விற்பனை மற்ற பருவத்தில்தான் நடக்கிறது. அதாவது குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு விழாக்கள், திருவிழாக்கள் நடைபெறுவதால் அந்தக் காலக்கட்டத்திலும் விற்பனை அதிகம் நடைபெறுவதாக இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐஸ்கிரீம் என்பது முன்பெல்லாம் வசதி படைத்தவர்களின் உணவாகக் கருதப்பட்டது. ஆனால் காலங்கள் மாற மாற வாடிக்கையாளர்கள் ஐஸ்கிரீமின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பது, வாடிக்கையாளர்களின் ரசனை மாறியிருப்பது போன்றவற்றால் ஐஸ்கிரீம் துறை நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது.
காரியம் ஆக `ஐஸ்’ வைக்கிறாயா என்பார்கள் ஆனால் அந்த ஐஸ் இன்று கோடிகளைக் குவிக்கும் தொழிலாய் வளர்கிறது.