வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம்
Updated on
2 min read

கபாலி ஜூரம் இன்னும் போகவில்லை என்பதால் ரஜினி பட உதாரணத்தில் இருந்தே தொடங்குவோம். 1980களில் `தம்பிக்கு எந்த ஊரு’ படம் வெளியானது. இதில் ரஜினியின் அப்பா வி.எஸ்.ராகவன் ரஜினியிடம் சிறிதளவு மட்டுமே பணம் கொடுத்து கிராமத்தில் உள்ள தனது நண்பர் செந்தாமரை வீட்டுக்கு அனுப்பி எளிய வாழ்க்கைக்கு பழக்குவார். இதுபோல இன்னும் சில படங்களில் அப்பாக்கள் மகன்களுக்கு வாழ்க்கைப் பாடம் எடுப்பார்கள். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஒரு அப்பா மகனுக்கு பாடம் எடுத்திருக்கிறார்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தது ஹரே கிருஷ்ணா டைமண்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ரூ.6,000 கோடி நிறுவனமான இது 71 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 1200க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு தீபாவளிக்கு ஊழியர்களின் போனஸுக்கு மட்டும் 45 கோடி ரூபாய் செலவிட்டது. 424 ஊழியர்களுக்கு பியட் கார், 207 நபர்களுக்கு ஒரு படுக்கை அறை அடுக்குமாடி வீடு, 570 நபர்களுக்கு தலா தலா ரூ.3.6 லட்சம் மதிப்பிலான நகைகளை பரிசாக வழங்கியது.

இந்த நிறுவனத்தின் உரிமை யாளர் சவ்ஜி தொலாகியா, இவர் தான் தனது மகன் திராவ்யா தொலாகி யாவுக்கு வாழ்க்கைப்பாடம் எடுத்திருக்கிறார். ஊழியர்களுக்கே கோடிக் கணக்கில் செலவு செய்யும் நிறுவனமாக இருந்தாலும் தனது மகனுக்கு பணத்தின் அருமையை உணர வைக்க ஒரு மாதம் துணைக்கு யாரும் இல்லாத ஊருக்கு அனுப்பத் திட்டமிட்டார். அமெரிக்காவில் எம்பிஏ படிக்கும் மகனும் இதற்கு ஒப்புக்கொண்டார். எந்த பல்கலைக்கழகமும் இந்த அனுபவ பாடத்தை கொடுக்காது என்பதுதான் அப்பாவின் நம்பிக்கை.

3 ஜோடி உடைகள், கையில் 7,000 ரூபாய் பணம், தவிர மூன்று நிபந்தனைகளுடன் திராவ்யா கிளம்பினார். கையில் பணம் இருந்தாலும் தனது செலவுக்கு தேவையானதை தானே சம்பாதிக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே கையிலிருக்கும் தொகையை பயன்படுத்த வேண்டும். எங்கேயும் ஒரு வாரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது. அப்பாவின் பெயரையோ, செல்போனையோ பயன்படுத்தகூடாது.

இதுதவிர அந்த இடம் புதிதாக இருக்க வேண்டும் உள்ளூர் மொழி தெரியாமல் இருக்க வேண்டும் என்ற உப நிபந்தனைகளுடன் கேரளா (கொச்சி) கிளம்பினார் திராவ்யா.

முதல் ஐந்து நாட்களுக்கு வேலையும் தங்குவதற்கு இடமும் கிடைக்கவில்லை. வேலை கேட்டு 60 இடங்களில் விசாரித்தும் வேலை கிடைக்கவில்லை. குஜாரத்தில் பிறந்த ஏழை, 12-ம் வகுப்பு மட்டுமே தெரியும் என்று ஹிந்தியில் சொன்னால் எப்படித்தான் வேலை கிடைக்கும். இறுதியாக ஒரு பேக்கரியில் வேலை கிடைத்தது. கால்சென்டர், மெக்டொனால்ட் உள்ளிட்ட சில இடங்களில் வேலை செய்திருக்கிறார். ஜூன் 21-ம் தேதி கிளம்பிய திராவ்யா சில நாட்களுக்கு முன்பு சூரத் சென்றுவிட்டார்.

ஆரம்பத்தில் சில நாட்களில் விரக்தி அடைந்தாலும், வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு புரிந்தது என்று திராவ்யா தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் படிப்பை தொடர மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். இருந்தாலும் இந்த வாழ்க்கைப்பாடம் அவர் வாழ்க்கை முழுவதற்கும் மறக்காது.

திராவ்யா கஷ்டப்பட்டார் என்பதை விட அவர் தந்தை எடுத்த இந்த முடிவுதான் கஷ்டமானது. ஆனால் இங்கிருக்கும் பல தந்தைகள் செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் குறியாக இருக்கிறார்களே தவிர வாழ்க்கை பாடத்தை பற்றி யோசிப்பது கூட இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in