

விமானத்தில் பறப்பவர்கள் பணக்காரராக இருப்பார்கள். ஆனால் விமான நிறுவனம் வைத்திருப்பவர்கள் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்னும் சொற்சொடர் பிரபலம். விமானத்துறை தோல்விக்கு உலகம் முழுவதும் பல உதாரணங்களை சொல்லலாம். இந்தத் துறையின் பிஸினஸ் மாடல் சிக்கலானது என்பதால் பல நிறுவனங்கள் தோல்வியடைகின்றன.
விமான நிறுவனங்களை ஊக்குவிக்கவேண்டும், சாதாரண மக்களையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் உடான் திட்டம். `ரப்பர் செருப்பு பயன்படுத்துபவர்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதே என் ஆசை’ என இந்த திட்டத்தை அறிமுகம் செய்யும்போது பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டம் என்ன, எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பதற்கு முன்னர் விமான போக்குவரத்து துறையின் தற்போதைய நிலையை பார்ப்போம்.
தற்போதைய நிலை!
ஒருபுறம் இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. கோ ஏர் நிறுவனம் பட்டியலிட தயாராகி வருகிறது. ஆனால் மண்டல விமான நிறுவனங்கள் சிக்கலில் இருக்கின்றன. இந்தியாவில் தற்போது நான்கு மண்டல விமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் ட்ரூ ஜெட் நிறுவனத்தை தவிர மற்ற மூன்று நிறுவனங்களுக்கு பறக்கும் அனுமதியை விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்திருக்கிறது. ஏர் கோஸ்டா, ஏர் பெகாசஸ் ஆகிய இரு நிறுவனங்களின் அனுமதி சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஏர் கார்னிவெல் நிறுவனத்தின் அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, ஏர் இந்தியாவுக்கு ரூ.50,000 கோடி கடன் என்பதே போதுமானது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த இந்திய விமான சந்தை சிறப்பாக இருப்பதாகவும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. புதிய விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளன. இந்திய நிறுவனங்கள் புதிதாக 1080-க்கும் மேற்பட்ட விமானங்களை அடுத்த சில ஆண்டுகளில் வாங்க திட்டமிட்டுள்ளன. (இதற்கான கட்டுமானம் தயாராக இருக்கிறதா என்பது வேறுவிஷயம்) அடுத்த பத்தாண்டுகளில் (2026 வரை) உள்நாட்டு விமான போக்குவரத்து துறை ஆண்டுக்கு 13 சதவீத வளர்ச்சி அடையும் என்றும், 10 ஆண்டுகளில் 2,500 கோடி டாலர் முதலீடு வரும் என்றும் மார்கன் ஸ்டான்லி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ஒரு பக்கம் உடான் திட்டத்தை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்கள் சிரமத்தில் இருக்கும் போது உடான் திட்டம் வெற்றி அடையுமா?
உடான் திட்டம் என்ன?
தற்போது நடுத்தர பிரிவு மக்களும் விமானத்தில் பறக்கின்றனர். இதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது உடான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு பல வகையான சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது. உதாரணத்துக்கு பயணிகளுக்கு, ஒரு மணிநேர பயணத்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,500 மட்டுமே.
விமான நிறுவனங்களுக்கு விமான எரிபொருளில் வரிச்சலுகை, விமான நிலையங்களில் தரையிறங்கும் மற்றும் நிறுத்தும் கட்டணம் கிடையாது. குறிப்பிட்ட வழித்தடத்தை ஏலத்தில் எடுத்துக்கொண்டால் மூன்று ஆண்டுகளுக்கு அந்த வழித்தடம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது. அதாவது வேறு எந்த நிறுவனங்களுடனும் போட்டியிடத்தேவையில்லை. தவிர விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்வதற்காக நிதியம் (விஜிஎப்) ஒன்று அமைக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இந்த மானியத்தை இணைந்து வழங்கும். மற்ற விமான நிறுவனங்களும் இந்த நிதியத்துக்கு நிதி வழங்கவேண்டும். மேலும் மற்ற வழித்தடத்தில் செல்பவர்களுக்கு விஜிஎப் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. இதில் 70 விமான நிலையங்கள் இந்த உடான் திட்டத்தின் மூலம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. 128 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும்.
ஏர்டெக்கான், ஏர் ஒடிஷா, அலையன்ஸ் ஏர்(ஏர் இந்தியாவின் துணை நிறுவனம்), டர்போ மெகா ஏர்வேஸ் மற்றும் ட்ரூஜெட் ஆகிய நிறுவனங்கள் புதிய வழித்தடங்களைப் பெற்றுள்ளன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் புதுடெல்லி, சிம்லா இடையே மார்ச் மாதம் விமான போக்குவரத்து தொடங்கியது.
வெற்றியடையுமா?
அடுத்தடுத்த வழித்தடங்களுக்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூலை 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி வழித்தடங்களும் விமான நிறுவனங்களும் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் 50 விமான நிலையங்களை சீரமைக்க மத்திய அரசு ரூ.4,500 கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
மண்டல விமான நிறுவனங்கள் தோல்வியடைந்திருந்தாலும், உடான் திட்டத்தில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சலுகைகளினால் ரிஸ்க் குறைவதால், விமான வாடகை நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தை மட்டுமே விமான நிறுவனங்களிடம் வசூலிக்கும். அதனால் உடான் திட்டம் வெற்றியடையும் என விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்திருக்கிறார். மேலும் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனைகளில் உடான் திட்டமும் ஒன்று என குறிப்பிட்டிருக்கிறார்.
ஏர் கோஸ்டா, ஏர் கார்னிவெல், ஏர் பெகாசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எந்தவிதமான சலுகையும் வழங்கப்படவில்லை. அதனால் அந்த நிறுவனங்கள் தோல்வியடைந்துவிட்டன என்று கூறினாலும், சலுகைகளுடன் அனுமதி பெற்ற நிறுவனங்கள் இன்னும் விமான போக்குவரத்தை தொடங்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. முதல் கட்டத்தில் ஏர் டெக்கான் மற்றும் ஏர் ஒடிஷா ஆகிய நிறுவனங்களுக்கு அதிக வழித்தடங்களுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் இதுவரை அந்த நிறுவனங்கள் தங்களின் திட்டம் குறித்து அறிவிக்கவில்லை. இந்த நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
விமானங்கள், பைலட்கள், பணியாளர்கள், விமான நிலைய அனுமதி உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 75 நாட்கள் ஆகும் என விமான ஒழுங்குமுறை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு தொழிலிலும் வெற்றியடைய பிரத்யேக வழிமுறைகள் இருக்கும். ஆனால் விமான போக்குவரத்து துறையை பொறுத்தவரை தொடர்ச்சியான சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் நீடிக்க முடியும். ஞாயிற்றுக்கிழமையோ, புதன்கிழமையோ விமானம் இயக்கப்பட வேண்டும்.
அந்த வாய்ப்பு உடான் திட்டத்தில் இருக்கிறது. நிறுவனங்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை, போட்டி இல்லை என்பதால் சிறப்பான தொடர் சேவை வழங்க முடியும். கச்சா எண்ணெய் விலை இன்னும் சில ஆண்டுகளுக்கு பெரிய அளவில் உயராது என்னும் கணிப்பு இருக்கும் நிலையில், சிறிய நகரங்களில் விமானங்களுக்கான தேவை இருக்கிறதா? உள்நாட்டு விமான போக்குவரத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் உடான் திட்டம் வெற்றியடையுமா? காத்திருப்போம்!
- karthikeyan. v@thehindutamil. co. in