

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஜெர்மனியின் போர்ஷே ஏஜி நிறுவனம் இந்த ஆண்டு 4 சிலிண்டர் கொண்ட சிறிய ரக மெகான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டட்கார்டில் தலைமையகத்தைக் கொண்ட இந்நிறுவனத்தின் மெகான் கார் ஜெனீவா கண்காட்சியில் பலரது கவனத்தையும் கவர்ந்ததில் வியப்பில்லை.
5 கதகவுகளைக் கொண்ட இது சிறிய ரக எஸ்யுவி என்றால் அது மிகையல்ல. 4 சிலிண்டர் இன்ஜின் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 48,850 டாலராகும். இந்தியாவில் இதன் விலை ரூ. 76.84 லட்சமாகும். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மெகான் வி6 மாடலை விட இது 4,745 டாலர் விலை குறைவாகும்.
2 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு 252 ஹெச்பி திறன் கொண்ட இந்த கார் எரிபொருள் சிக்கனமானதாகும். மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சென்றால் கூட சாலையில் ஸ்திரமான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் கியர் பகுதியைச் சுற்றி 19 பொத்தான்கள் உள்ளன. இவை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், வாகனத்தின் செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்சி , பிஎம்டபிள்யூ எக்ஸ்3, ஆடி க்யூ 5, ஜாகுவார் எப், ரேஞ்ச் ரோவர் வெடார் உள்ளிட்ட மாடல்களுக்குப் போட்டியாக இது திகழ்கிறது. இந்த கார் உருவாக்கத்தின் போது இதற்கு காஜுன் என பெயர் சூட்டப்பட்டது. ஏற்கெனவே போர்ஷேயின் டீசல் டிராக்டர் இதே பெயரில் இருப்பதால் பிறகு இதற்கு மெகான் என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.
ஜாவா தீவு மக்கள் பேசும் ஜாவனீஸ் மொழியில் மெகான் என்றால் புலி என்று அர்த்தமாம். சாலையில் புலி போல சீறிவரும் மெகான், பெருமளவிலான ரசிகர்களைக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமில்லை.