Last Updated : 11 Jul, 2016 11:24 AM

 

Published : 11 Jul 2016 11:24 AM
Last Updated : 11 Jul 2016 11:24 AM

குளச்சல் துறைமுகத்தால் இழப்பா?

இந்திய கடற்கரை 7,516 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 12 பெரிய துறைமுகம் உட்பட மொத்தம் 200 துறைமுகங்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளன. கடந்த வருடத்தில் இந்த 12 பெரிய துறைமுகங்களில் இருந்து மொத் தம் 58,13,44,000 டன் சரக்குகள் கையாளப் பட்டிருக்கின்றன. இந்த வருடத்தில் இன்னும் அதிகமான சரக்குகள் கையாளப்படும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மொத்த இந்திய வர்த்தகத்தில் 70 சதவீத வர்த்தகம் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. இதனால்தான் மத்திய அரசும் கப்பல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து மிகப் பெரிய திட்டங்களையும் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நீண்ட நாளாக பேசப்பட்டு வந்த திட்டமும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கனவுத் திட்டமுமான குளச்சல் துறைமுகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு ஒருபுறம் பலத்த வரவேற்பும் மறுபுறம் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மேலும் கேரள முதல்வர் பினரயி விஜயன் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இப்படி பல்வேறு வகைகளில் இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்திற்கு நன்மை ஏற்படுமா? பொருளாதார ரீதியில் இந்தத் திட்டம் சாத்தியமானதா என்பதை பார்ப்போம்.

குளச்சல் துறைமுகத் திட்டம்

போர்ச்சுக்கீசிய காலத்திலிருந்து மிகப் பெரிய இயற்கை துறைமுகமாக இயங்கி வந்தது குளச்சல் துறைமுகம். மீன்வளமும், சங்கு, சிப்பி போன்றவையும் அதிகமாக கிடைக்கும் பகுதி. இந்த இயற்கை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றுவதற்கு நீண்ட காலமாகவே பல்வேறு தரப்பினர் முயற்சித்து வந்தனர். 1998, 2000 மற்றும் 2010-ம் ஆண்டுகளிலேயே வர்த்தக துறைமுகமாக மாற்றுவதற்கு ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்தத் திட்டத்தைக் கைவிட்டனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டி யிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதா கிருஷ்ணன் வாக்குறுதி கொடுத்தார். தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரான பிறகு துறைமுகம் அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வந்தார். குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வும் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் குளச்சலில் இருந்து இனையம் என்ற பகுதியில் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஜனவரி 19-ம் தேதி பார்வையிட்டு விரைவில் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார். கடந்த வாரம் மத்திய அரசு சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் குளச்சலுக்கு அருகே உள்ள இனையம் பகுதியில் மிகப் பெரிய பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்றும் மையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்துறைமுகம் அமைப்பதற்கு 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இயற்கை சமநிலை பாதிப்பு

இனையம் துறைமுகம் கடல் பகுதியில் 500 ஏக்கரில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த 500 ஏக்கர் முழுவதும் மணல் நிரப்பப்படும் பொழுது அந்தப் பகுதியின் சூழலியல் சமநிலை பாதிக்கப்படும் என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது துறைமுகம் அமைக்கப்படும் இனையம் பகுதி அதிக கடல் அலைகளையும் நீரோட்டத்தையும் கொண்டது. மிகப் பெரிய அலைகளைத் தடுப்பதற்கு குறைந்தது இரண்டு அலைமுறிகள் அமைக்கப்பட வேண்டும். ஐந்து கிலோ மீட்டருக்கு அலைமுறி அமைக்கப்படும் போது சிறு மீனவர்களும் பல பாரம்பரிய தொழில்களும் அழிந்துவிடும் என்கின்றனர். மேலும் இதற்கான செலவும் அதிகம். மேலும் இந்த சரக்கு முனையத்திற்குத் தேவையான சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்கு கடற்கரையிலிருந்து 1,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இனையம் பகுதி அதையொட்டிய மீனவ கிராமங்களில் கிட்டத்தட்ட 25,000 மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் போது இவர்கள் எங்கே போவார்கள்? இவர்களின் வாழ்வாதாரம் என்னாவது? என்ற கேள்விகள் எழுகின்றன.

பொருளாதார ரீதியில் நன்மையா?

மொத்தம் இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் இருக்கின்றன. அதில் 3 துறைமுகங்கள் தமிழ்நாட்டில் இருப்பது நமக்கு பெருமையான விஷயம்தான். 4-வதாக இனையம் துறைமுகமும் வர இருக்கிறது. ஆனால் பொருளாதார வகையில் இந்த துறைமுகம் நன்மையை ஏற்படுத்துமா என்றால் இல்லை என்றே சொல்லப்படுகிறது. இதுப்பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப் பின் பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசியபோது, ``தற்போது அமையவிருக்கும் இனையம் துறைமுகத்திற்கு அருகில் மூன்று துறைமுகங்கள் இருக்கின்றன.

இனையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகமும் 271 கிலோ மீட்டர் தொலைவில் வல்லர்பாதம் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் மற்றும் தூத்துக்குடியில் சர்வதேச துறைமுகமும் உள்ளது. மேலும் கொழும்பு துறைமுகமும் அருகே உள்ளது. இப்படி அருகருகே மிகப்பெரிய துறைமுகங்கள் இருக்கையில் நான்காவதாக இந்த துறைமுகத்தை அதிக முதலீட்டுத் தொகையில் அமைப் பதால் ஒரு நன்மையும் ஏற்படாது. ஏனெனில் அருகருகே மிகப் பெரிய துறை முகங்கள் இருக்கும் பொழுது கப்பல் கள் வருவது எண்ணிக்கை அளவில் மிக குறையும். இதனால் துறைமுகங் களுக்கிடையே சரக்குகளை கையாள் வதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். இந்த ஏற்றத்தாழ்வு அருகிலுள்ள துறைமுகங் களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்’’ என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் கொழும்புக்கு அதிகம் செல்கின்றன. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகத்திலும் மொத்தம் 30 லட்சம் டன் சரக்குகள்தான் கையாளப்பட்டு வருகிறது. ஆனால் கொழும்பு துறைமுகத்தில் மட்டும் 50 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இதை காரணமாக கொண்டுதான் குளச்சல் துறைமுகம் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் கொழும்பு துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் மிகக் குறைவு.

இதனால் பெரும்பாலும் சரக்குக் கப்பல்கள் கொழும்பை நோக்கி செல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கட்டணத்தை குறைத்தால் மட்டுமே இந்த துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் சரக்குக் கப்பல்கள் வருவதால் துறைமுகப் பகுதியை அதிகம் ஆழப்படுத்த வேண்டிருக்கும். இதற்கு மிக அதிக அளவில் செலவு ஏற்படும். இவ்வளவு தொகை செலவழித்து கொண்டு வரப்படும் இந்த திட்டம் பொருளாதார அளவில் பின்னடவைத்தான் ஏற்படுத்தும்.

நீண்ட நாட்களாக சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று நிதின் கட்கரி கூறி வருகிறார். ஒருவேளை சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட் டால் இந்த துறைமுகத்திற்கு சாதகமாக அமையும். ஆனால் சேது சமுத்திரத் திட்டமும் இயற்கை சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

தமிழகத்திற்கு இவ்வளவு பெரிய திட்டத்தை கொண்டு வந்த அளவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ண னுக்கு நிச்சயமாக பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதற்கான இடத்தை தேர்வு செய்ததில் மத்திய அரசு அவசரம் காட்டிவிட்டதோ என்றே தோன்றுகிறது.

devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x