குறள் இனிது: ஆளைத் தெரிஞ்சுக்கனும்னா...

குறள் இனிது: ஆளைத் தெரிஞ்சுக்கனும்னா...
Updated on
1 min read

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல் (குறள் 505)



இன்று உலகிலேயே அதிகச் சம்பளம் பெறுபவர் யாரென்று தெரியுமா? கூகுள் செய்து பார்க்கத் தோன்று கிறதா? சிரமம் வேண்டாம்.

கூகுளின் தலைவருக்குத்தான் ஆண்டிற்கு ரூ.335 கோடியாம்! இது தவிர ரூ.1,406 கோடி மதிப்புள்ள ஆல்பபெட்ஸின் (கூகுளின் தாய் நிறுவனம் இது) பங்குகளையும் அவருக்குக் கொடுத்துள்ளார்கள்!! சும்மா வாயைப் பிளக்காமல், காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.

இவ்வளவும் வாங்குவது நம்ம ஊர்க்காரரான சுந்தர்பிச்சை தானுங்க!

அடேயப்பா, அப்படி என்ன திறமையைக் கண்டுவிட்டார்கள் அவரிடம் என்று கேட்கத் தோன்றுகிறதா? நம்ம ஆள் கூகுளில் 2004-ல் சேர்ந்தது முதல் சும்மா ஒவ்வொன்றாய் ஜமாய்த்திருக்கிறார்!

2006-ல் மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரளில் பிங்கை ஸர்ச் இன்ஜினாக்கியது. அவ்வளவுதான். உடனே உலகில் பலரும் கூகிளின் முடிவுகாலம் ஆரம்பித்துவிட்டது என நினைத்தனர். ஆனால் நம்ம ஹீரோ களம் இறங்கினார்.

கணினி உற்பத்தியாளர்களைப் பிடித்து கூகுளின் டூல்பாரை அக்கணினிகளில் நிறுவும்படி செய்து கூகுளுக்கு மறுவாழ்வு தந்தார்! மேலும் கூகுள் தனக்கென ஒரு பிரௌஸர் வைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி குரோமை அறிமுகப்படுத்தினார்.

இன்று அதன் உபயோகம் என்னவென்று தினம் தினம் பார்க்கின்றீர்களே!

திறமையுடன் அவரிடம் விசுவாசமும் இருந்தது. ட்விட்டர் முதலான நிறுவனங்கள் உயர்பதவி தருவதாக வலை விரித்த பொழுது மனிதன் விழவில்லை. இப்படி ஓர் ஆளை விடுவாரா கூகுளின் கெட்டிக்கார முதலாளியான லாரிபேஜ்.

கூகுளைத் தன் உயரிய இடத்திலிலிருந்து வழுவி விழாமல் சரியான நேரத்தில் மிகச் சரியான உத்திகளுடன் தாங்கிப்பிடித்த பிச்சையையே 2015-ல் அதன் தலைவராக்கினார்.

43 வயதில் 11 வருட சேவையில் அவர் முடிசூடப்பட்ட காரணம் என்ன? அவர் சாதித்துக் காட்டியவை தானே!

ஐயா, எங்கும் என்றும் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் அவர்களது செயல்களால், சாதனைகளால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள்.

வாய்ச் சொல்லில் வீரரை யாரும் விரும்புவதில்லை; நம்புவதுமில்லை.

ஒருவரது சுயரூபம் தெரிய வேண்டுமெனில் அவனுக்குச் சிறிய அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் என்பார்கள். சாமர்த்தியம் தெரிய வேண்டுமெனில் கொஞ்சம் பொறுப்பையும் கொடுத்துப் பாருங்கள். சாயம் வெளுத்து விடும்.

இன்றைய வலைதள உலகில் இது இன்னமும் எளிதாகிவிட்டது. பணியமர்த்துமுன் ஒருவரது பேஃஸ்புக், டுவிட்டர், லிங்க்டின் முதலியவை கூட ஆராயப்படுகின்றனவாம்.

இவற்றில் விண்ணப்பதாரரின் செயல்பாடுகள் எப்படி இருந்தன, சமூகப் பிரச்சினைகளில் அவரது அணுகுமுறை எப்படி இருந்தது என்பதை வைத்து அவரது குணத்தைப் புரித்து கொள்வார்களாம்.

ஒருவரது திறமைகளையும் குறைகளையும் தெரிந்து கொள்ள உதவும் உரைகல் அவரது செயல்கள் தாம் என்று அன்றே சொல்லிவிட்டார் வள்ளுவர்.

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in