பண்டிகைக் காலத்தை குறிவைக்கும் நிறுவனங்கள்!

பண்டிகைக் காலத்தை குறிவைக்கும் நிறுவனங்கள்!
Updated on
2 min read

பொதுவாக எந்த ஒரு பொருள் விற்பனை அதிகரிப்புக்கும் முக்கியக் காரணமாக இருப்பது பண்டிகைகளும், திருவிழாக்களும்தான். கோயில் சார்ந்த திருவிழாக்கள் அந்த குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும் விற்பனை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஆனால் பண்டிகைகள் குறிப்பாக இந்துக்களின் பண்டிகைகள் பெரும்பாலான பொருள் விற்பனைக்கு வழி வகுக்கிறது. பண்டிகை நாள்கள் புதிய பொருள்கள் வாங்க உகந்த நாளாக கருதப்படுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

இந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானது விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, அதைத் தொடர்ந்து நவராத்திரி, வட மாநிலங்களில் துர்கா பூஜை, தீபாவளி என தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அடுத்தடுத்து பண்டிகைகள்தான்.

பண்டிகைக் காலங்களில் செலவு அதிகரிக்கும் என குடும்பங்கள் நினைத்தாலும், குடும்பத்துக்கு குதூ கலம் அளிப்பவை பண்டிகைகளே என்பதால் பண்டிகைக் கொண்டாட் டத்தை எவரும் தடுப்பதில்லை.

மேலும் அந்த சமயத்தில் பண வரவுக்கு வழி வகுப்பது போல தீபாவளி போனஸ் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்கும்.

இந்த முறை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் நிலுவைத் தொகை (அரியர்ஸ்) வழங்கப்பட உள்ளது. இதனால் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. மக்கள் பொருள்கள் வாங்குவது மேலும் அதிகரிக்கும். இதை தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழாவே இந்த ஆண்டு அமோகமான தொடக்கமாக அமைந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியன்று கார்கள் வாங்குவதற்கான முன்பதிவு கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது ஆட்டோமொபைல் துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்த ஆட்டோமொபைல் துறை இந்த வளர்ச்சியில் துள்ளியெழுந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் கார் விற்பனை விநாயகர் சதுர்த்தியன்று 25 சதவீத அளவுக்கும், இரு சக்கர வாகன விற்பனை 30 சதவீத அளவிற்கும் அதிகரித்துள்ளன.

புணே மற்றும் நாசிக் பிராந்தியத்தில் உள்ள விற்பனையகங்களில் மட்டும் விநாயகர் சதுர்த்தியன்று 550 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 3.5 கோடியாகும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று 400 இரு சக்கர வாகனங்கள் விற்பனையானது.

கார்களைப் பொருத்தமட்டில் இப்பிராந்தியத்தில் மட்டும் 325 கார்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 13 கோடியாகும். கடந்த ஆண்டு இதே நாளில் 260 கார்கள் விற்பனையானது.

புணே, நாசிக், மும்பையில் தலா ஒரு விற்பனையகத்தைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் 170 கார்களை விற்பனை செய்துள்ளது. தசரா, தீபாவளி ஆகிய பண்டிகைக் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அந்த விற்பனையக அதிகாரிகள் உறுதியுடன் உள்ளனர்.

பொதுவாக கிராப்புற பொருளாதாரத்தை நம்பித்தான் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி உள்ளது. இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்பதால் வாகன விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் சுதிர் முதாலிக் தெரிவித்துள்ளார். தீபாவளி வரை விற்பனை அதிகரிக்கும் என்றிருந்தாலும் இந்த நிதி ஆண்டு இறுதி வரையிலும் வாகன விற்பனை ஏற்றமாகவே இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புணேயில் உள்ள ஒரு விற்பனையகத்தில் மட்டும் விநாயகர் சதுர்த்தியன்று 75 இருசக்கர வாகனங்கள் விற்பனையானதாக அதன் மேலாளர் பிபின் படாவியா தெரிவித்துள்ளார்.

இந்த பண்டிகைக் காலத்தில் தங்கள் நிறுவன விற்பனை வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என நம்புவதாக மாருதி சுஸுகி விற்பனைப் பிரிவு இயக்குநர் ஆர்.எஸ். கல்சி தெரிவித்துள்ளார். பணவீக்கம் சீராக இருப்பதும் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக உள்ளது. பெட்ரோல் விலை குறைவாக இருப்பதும் விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்க வசதியாக புதிய மாடல்களை பண்டிகைக் காலங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத் தலைவர் பவன் முன்ஜால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in