வெற்றி மொழி: கௌதம புத்தர்

வெற்றி மொழி: கௌதம புத்தர்
Updated on
1 min read

கி.மு. 563-க்கும் கி.மு 483-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கௌதம புத்தர் என்னும் சித்தார்த்தர் ஒரு மதகுரு ஆவார். புகழ்பெற்ற புத்த மதத்தை உருவாக்கியவர் இவரே. தனது இளமைப்பருவத்தை செல்வச் செழிப்புடன் கழித்த புத்தர், பின்னர் துறவறம் மேற்கொண்டு, போதி மரத்தடியில் ஞானம் பெற்று மகா ஞானியானார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற மாபெரும் தத்துவத்தைப் போதித்தவர். மேலும், மனித வாழ்க்கை மற்றும் சிந்தனை குறித்த கருத்துகளைப் பறைசாற்றியவர். சீனா, திபெத், ஜப்பான், இலங்கை உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புத்தரின் போதனைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் எனப்படுகின்றனர்.

# கடந்த காலத்தில் வாழாதே, எதிர்காலத்தைப்பற்றி கனவு காணாதே, தற்போதைய தருணத்தில் மனதைக் கவனம் செலுத்து.

# ஒரு மெழுகு வர்த்தியிலிருந்து ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகளுக்கு ஒளியூட்ட முடியும், அதன் வாழ்க்கை குறைக்கப்படாது. பகிர்ந்துகொள்வதன் மூலமாக மகிழ்ச்சி ஒருபோதும் குறைவதில்லை.

# உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஒரு கடமை, இல்லையென்றால் நமது மனதை வலிமையாகவும் தெளிவாகவும் வைக்கமுடியாது.

# என்ன செய்துமுடிக்கப்பட்டது என்பதை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை; இன்னும் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டுமே பார்க்கிறேன்.

# அமைதியற்ற எண்ணங்கள் இல்லாதவர்கள், நிச்சயமாக அமைதியை கண்டறிவார்கள்.

# உடல்நலம் என்பது உயரிய பரிசு, மனநிறைவு என்பது உயரிய செல்வம், விசுவாசம் என்பது சிறந்த உறவு.

# மூன்று விஷயங்களை நீண்ட நேரத்திற்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.

# விவேகமாக வாழ்ந்த ஒருவன் மரணத்தைக் கண்டும்கூட பயப்பட வேண்டியது இல்லை.

# மனமே எல்லாமுமாக இருக்கின்றது. நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

# நெருப்பில்லாமல் ஒரு விளக்கைக்கூட ஏற்ற முடியாது, ஆன்மீக வாழ்க்கை இல்லாமல் மனிதர்களால் வாழமுடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in