சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கைநழுவிப் போனது எப்படி?

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கைநழுவிப் போனது எப்படி?
Updated on
2 min read

எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் ஐபிஒ கடந்த வாரம் வெளியானது. ரூ.1,200 கோடி திரட்ட முடிவெடுத்திருந்த சூழ்நிலையில், 11.67 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரையானது.

ஐபிஓ வெளியீட்டின்போது எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் ஏ.எம் நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்கள் நிறுவனத்துக்கு இந்த சமயத்தில் ஒரு வருத்தம் இருப்பதாகக் குறிப்பிட்டார். 2009-ஆம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தை (மஹிந்திரா சத்யம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பிறகு டெக் மஹிந்திராவுடன் இணைக்கப்பட்டது) வாங்க திட்டமிட்டோம். ஆனால் அந்த நிறுவனத்தை வாங்க முடியாதது வருத்தம் அளிப்பதாக கூறினார்.

இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு பல வகைகளிலும் முக்கியமானது. இந்த முறைகேடு நடந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருந்தாலும், ஏ.எம்.நாயக்கின் வருத்தம் இன்னும் குறையவில்லை.

வருத்தத்துக்கு என்ன காரணம்?

கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். கடிதம் மூலம் முதலீட்டாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசுக்கு இதை அனுப்பினார். அதில் நிறுவனத்தின் கணக்குகளில் ரூ.7,136 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருக்கிறது. சட்டத்தின் முன் அனைத்து எதிர்விளைவுகளையும் தான் சந்திக்கத் தயாராகி விட்டதாகக் கடிதம் எழுதினார்.

சத்யம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவை மத்திய அரசு கலைத்து, புதிய இயக்குநர்களை நியமனம் செய்தது. இந்த பங்கின் விலை கடுமையாக சரிந்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி பட்டியலில் இருந்து இந்த பங்கு நீக்கம் செய்யப்பட்டது. 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 226 ரூபாயில் வர்த்தகமான பங்கு, தொடர்ந்து சரிந்து வந்தது. ராமலிங்க ராஜூ கடிதம் அளித்த ஜனவரி 7-ம் தேதி அந்த பங்கு விலை 39 ரூபாயாக சரிந்தது. அடுத்த சில நாட்களில் இந்த பங்கு 6 ரூபாய் அளவுக்கு சரிந்தது. ஆனால் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்த பங்கு 525 ரூபாய் அளவில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

சரி விஷயத்துக்கு வருவோம்.

சத்யம் பிரச்சினை ஒரே நாளில் வெளிவரவில்லை. ராமலிங்க ராஜூ ஒப்புதல் கொடுத்தது என்பது இறுதி நிகழ்வுதான். அதற்கு முன்பான சில மாதங்களிலேயே நிறுவனத்தில் பிரச்சினை இருக்கிறது என்பது வெளியே தெரிய ஆரம்பித்தது. அதனால் பங்குகளின் விலை மெல்ல சரியத் தொடங்கின.

அதனால் சத்யம் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக அந்த நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் வாங்க ஆரம்பித்தது எல் அண்ட் டி. 210 ரூபாய், 125 ரூபாய் என பல விலைகளிலும் இந்த பங்கினை எல் அண்ட் டி வாங்கியது. சராசரியாக ஒரு பங்கு 80 ரூபாய் என்ற அடிப்படையில் சத்யம் நிறுவனத்தின் 12 சதவீத பங்குகளை எல் அண்ட் டி வைத்திருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு ஏல முறையில் நிறுவனத்தை மாற்றும் நட வடிக்கையில் ஈடுபட்டது. நிறுவனம் என்பது கமாடிட்டி அல்ல என்று இந்த முறையை எல் அண்ட் டி நிறுவனம் எதிர்த்தது. ஆனால் ஏலம் நடத்தப்பட்டது.

நிறுவனத்தை தணிக்கை செய்ததில் ஒரு பங்கு 55-60 ரூபாய் என்பது நியாயமான விலை என்பது தெரிய வந்தது. ஆனால் எல் அண்ட் டி வசம் 12 சதவீத பங்குகள் 80 ரூபாய் அளவில் இருப்பதால் 46 ரூபாய்க்கு ஏலம் கேட்டது. ஆனால் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் வசம் ஏற்கெனவே எந்த பங்குகளும் இல்லை என்பதால் 58.90 ரூபாய்க்கு ஏலம் கேட்டது. நிறுவனம் கைமாறியது. இத்தனை வருடங்களுக்கு பிறகும் நாயக்கிற்கு வருத்தம் தரக்கூடிய நிகழ்வு இதுதான்.

முன் கூட்டியே தயாராக இருப்பது என்பது நல்லதுதான் என்றாலும், சில சமயங்களில் நமக்கு கூடுதல் சுமையாகிவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு மிகச் சிறந்த உதாரணமாகும்.

இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு பல வகைகளிலும் முக்கியமானது. இந்த முறைகேடு நடந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருந்தாலும், ஏ.எம்.நாயக்கின் வருத்தம் இன்னும் குறையவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in