Last Updated : 16 May, 2016 01:13 PM

 

Published : 16 May 2016 01:13 PM
Last Updated : 16 May 2016 01:13 PM

குறள் இனிது: யாரிடம் என்ன பேசறதுன்னு...

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின்ஊங்கு இல் (குறள் 644)



இந்தக் குட்டிக் கதையைக் கேட்டு இருப்பீர்கள். முன்னொரு காலத்தில் மெத்தப் படித்த இள வயது ஞாநி ஒருவர் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியதாயிற்று. படகோட்டியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தார். என்ன படித்து இருக்கிறாய் என ஆரம்பித்தார்.

படகோட்டி பள்ளிக்கே சென்றதில்லை என்றதும் எத்தனை மொழிகள் பேசுவாய் எனக் கேட்டார். தாய்மொழி ஒன்றே என்று பதில் வந்தும் ஞாநி விடவில்லை.

வேதங்களின் பெயராவது தெரியுமா எனக்கேட்டார். அதற்கும் தெரியாதென்றே வருத்தத்துடன் பதில் வந்தது.

அப்பொழுது திடீரென ஆற்றில் பெரிய வெள்ளம் வரத் தொடங்கியது. படகு இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆடியதால் ஞாநி பீதியில் நடுங்கினார்.

படகோட்டி ஞாநியைப் பார்த்து நீச்சல் தெரியுமா எனக் கேட்க, இம்முறை தெரியாதென்று ஞாநி பதில் சொல்ல வேண்டியதாயிற்று! பின்னர் என்ன...எல்லாமறிந்தவரை ஏதுமறியாதவர் காப்பாற்றினார்!

இம்மாதிரியான கர்வம் சாதாரணமாக எல்லா படித்தவர்களிடமுமே காணப்படுகிறதில்லையா? 'எனக்குத் தெரிந்த அளவு உனக்குத் தெரியுமா?' எனும் ஏளனம்!

இது பணக்காரன் ஏழையிடம் காட்டும் திமிருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது மக்களிடம் காட்டும் ஆணவத்திற்கும், பார்க்க அழகாயிருப்பவர்கள் மற்றவர்களிடம் காட்டும் கர்வத்திற்கும் ஒப்பானது! அவற்றைப் போலவே நியாயமில்லாதது!! இவர்களுக்கெல்லாம் தேவைப்படுவது இருப்பவர்கள் இல்லாதவர்களிடம் காட்ட வேண்டிய புரிதல், பொறுமை, கருணை!

பேசும் பொழுது கேட்பவரின் திறனுக்கேற்றவாறு சொற்களைப் பயன்படுத்துவதை விடச் சிறந்த அறனோ பொருளோ இல்லையென்கிறார் வள்ளுவர். அதாவது அதுதான் முறையாகும்; அதுதான் பயன் தருவதாகவும் அமையும் என்கிறார்.

சொல்வன்மை என்பது சொல்லப்படும் சொல்லின், சொல்லைச் சொல்பவரின், அச் சொல்லைக் கேட்பவரின் ஆகிய மூன்று திறன்களைச் சார்ந்தது என்றும் சிலர் இக்குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.

நான் வங்கியில் பணியாற்றிய பொழுது நடந்தது இது. ஒரு கிராமத்துப் பெண் தனது தந்தை 10 தினங்களுக்கு முன் இறந்து விட்டதாகவும் கணக்கிலிருந்த 25,000 ரூபாயை எடுக்க வேண்டுமென்றும் கேட்டார்.

வங்கி அதிகாரியோ உடனே ‘அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை. நீங்கள் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் போன்ற ஆறேழு ஆவணங்கள் கொடுக்க வேண்டியதிருக்கும்' என்றதுடன் ஒருவர் உயில் எழுதாமல் இறந்தால் பணம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்துத் தனக்குத் தெரிந்த, சரியாக தெரியாத சிலபல சட்ட விதிகளைக் கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

அது Either or Survivor கணக்கு என்பதால் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தவருக்கு பணம் உடனே கிடைத்தது என்பது பின்கதை!

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். எளிமையாய்ப் பேசுவதுதான் உண்மையில் கடினமானது! மெத்தப் படித்திருக்கலாம். மேதாவியாக இருக்கலாம்.

ஆனால் கேட்கிறவன் பாமரனாய் இருந்தால் அவனுக்குப் புரிகிற மாதிரி இறங்கி வந்து பேசினால் தானே பலன்? Economics is nothing but common sense made difficult என்பார்களே!

சிலசமயம் ஊமைகளின் கைஜாடைப் பேச்சு புரியுமளவு கூடப் பலரின் வாய்ப்பேச்சு புரிவதில்லையே!

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x