

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பயன்படுத்திய காரை புதுப்பிக்கும் பணியை ஆடி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனத்திடம் இந்தப் பணியை நேதாஜி ஆய்வுக் குழு (என்ஆர்பி) அளித்துள்ளது.
1941-ம் ஆண்டு அவரை அப்போதைய பிரிட்டிஷ் அரசு வீட்டு காவலில் சிறை வைத்தபோது, இந்த காரின் உதவியோடுதான் தப்பிச் சென்றார்.
நான்கு கதவுகளைக் கொண்ட ஜெர்மன் வான்டரர் செடான் கார் தற்போது நேதாஜியின் மூதாதையர்கள் வாழ்ந்த இல்லத்தில் உள்ளது. இந்தக் காரின் பதிவு எண் பிஎல்ஏ 7169 ஆகும். 1941-ம் ஆண்டு ஜனவரி மாதம இந்தக் காரில்தான் நேதாஜி கொல்கத்தாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோமஹிற்கு பயணம் செய்தார். அப்போது இந்த காரை அவரது உறவினர் சிசிர் குமார் போஸ் ஓட்டியுள்ளார். கடைசியாக இந்தக் கார் 1971ம் ஆண்டு திரைப்படத் துறை தயாரித்த ஆவணப் படத்துக்காக நேதாஜியின் மூத்த சகோதரர் சரத் சந்திர போஸால் ஓட்டிப் பார்க்கப்பட்டது.
அதற்கு பிறகு சாலைகளில் இயக்கப்படாமல், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. எனவே இந்த காரின் ஆயுளை அதிகரிக்கும் வகையில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணி டிசம்பருக்குள் முடிவடையும் என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.