

ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் திகழும் மஹிந்திரா குழுமம் பேட்டரியில் ஓடக்கூடிய ரிக்ஷாக்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
பேட்டரி கார் தயாரிப்பு நிறுவனமான மொய்னி குழுமத்தைக் கையகப்படுத்திய பிறகு பேட்டரி கார்களை மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது ரூ. 600 கோடியை முதலீடு செய்து மேலும் பல பேட்டரி வாகனங்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. மொத்தம் ரூ. 1,200 கோடியை ஒட்டுமொத்தமாக இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் விரைவிலேயே பேட்டரி பஸ்களை அறிமுகப்படுத்தும் திட்டமும் நிறுவனம் வசம் உள்ளது.
அதிக மின் திறன் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான பவர்டிரைன்களுக்கான டிசைன்களை இத்தாலிய நிறுவனமான பிரினின்பரினா வடிவமைத்துத் தருகிறது. இந்நிறுவனத்தை 2015-ல் மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மொய்னி குழுமத்திடமிருந்து ரேவா பேட்டரி கார் தயாரிப்பைக் கையகப்படுத்தியபிறகு அந்நிறுவனத்தின் பெங்களூர் ஆலையிலேயே தொடர்ந்து பேட்டரி வாகனங்களை மஹிந்திரா தயாரித்து வருகிறது.
உயர் திறன் மிக்க பேட்டரி வாகனங்களுக்கான பவர் டிரைன் வடிவமைக்கப்பட்ட பிறகு அதிலேயே அனைத்து வாகனங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா எலெக்ட்ரிக் ஆலை தற்போது 48 வோல்ட் மற்றும் 72 வோல்ட் இன்ஜின்களை தனது பேட்டரி வாகனங்களுக்கென தயாரிக்கிறது. தற்போது 360 முதல் 600 வோல்ட் வரையிலான பவர்டிரெய்ன்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் சொகுசு பேட்டரி வாகனங்களைத் தயாரிக்க முடியும். சிறிய ரக பஸ்கள் மற்றும் சொகுசு வாகனங்களை இந்த பவர்டிரெய்னில் தயாரிக்க முடியும்.
உடனடியாக 9 மீட்டர் நீளமுள்ள பஸ்ஸை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது இன்னும் ஓராண்டுக்குள் சந்தைக்கு வரும் என்று கோயங்கா கூறினார்.
தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள பேட்டரி ரிக்ஷாக்களில் பெரும்பாலும் அமில பேட்டரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் லித்தியம் அயன் மற்றும் மாற்றத்தகுந்த பேட்டரிகளை பயன்படுத்துவது குறித்து தீவிரமாக ஆராயப்படுகிறது. இது தவிர சக்கன் ஆலையில் 60 ஆயிரம் பேட்டரி வாகனங்களைத் தயாரிப்பதற்கான வசதிகளை உருவாக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். புணே அருகில் உள்ள சக்கன் ஆலையில் தயாரிக்கப்படும் பேட்டரி வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரிகளை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சூழல் காப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் இவற்றில் கவனம் செலுத்தி பேட்டரி வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா தயாரிப்புகள் சந்தையில் முன்னோடியாகத் திகழும் என்று நம்பலாம்.