1962 மாடல் பெராரி ரேஸ் கார் 339 கோடி ரூபாய்க்கு ஏலம்

1962 மாடல் பெராரி  ரேஸ் கார் 339 கோடி ரூபாய்க்கு ஏலம்
Updated on
1 min read

ஒரு காரின் விலை 339 கோடி என்றால் நிச்சயம் நம்மில் பலர் மூர்ச்சையாகி விழத்தான் செய்வர்.  ஆனால் கலிபோர்னியாவில் சோத்பி நிறுவனம் நடத்திய ஏலத்தில்தான் இந்த அளவுக்கு கார் ஏலம் போயிருக்கிறது. இது புத்தம் புதிய காரும் அல்ல. 1962-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெராரி 250 ஜிடிஓ ரேஸ் மாடல் கார்தான் இது.

பழமையான கார் இந்த அளவுக்கு ஏலம் போனது இதுவே முதல் முறையாகும். 4 கோடி டாலருக்குத்தான் ஏலம் போகும் என்று நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் இந்த கார் 4.84 கோடி டாலருக்கு ஏலம் போயுள்ளது.

இதற்கு முன்பு 1963-ம் ஆண்டு மாடல் இதே ரகக் கார் 2014-ல் ஏலம் விடப்பட்டது. அப்போது அந்த கார் 3.81 கோடி டாலருக்கு ஏலம் போனது. இதுவரை இதுவே மிக அதிக தொகைக்கு ஏலம் போன காராக இருந்தது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் அந்த சாதனையை பெராரி 1962-ம் ஆண்டு மாடல் கார் முறியடித்துள்ளது.

இந்த காரின் உரிமையாளர் கிரெக் விட்டென் என்பவர். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர். இந்த காரை அவர் 2000-வது ஆண்டு வாங்கியுள்ளார். ஆனால் அவர் எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் அப்போது பெராரி காரின் சந்தை மதிப்பு ஒரு கோடி டாலராக இருந்தது என்று கணிக்கப்படுகிறது.

1953-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரையான காலத்தில் பெராரி நிறுவனம் 36 மாடலில் ரேஸ்களுக்கென கார்களை தயாரித்து விற்பனை செய்தது. இந்த கார்கள் மட்டும்தான்  வின்டேஜ் கார்களாக இப்போதும் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. இவைதான் சமீபகாலமாக அதிக தொகைக்கு ஏலம் போகின்றன. ஓல்ட் ஈஸ் கோல்ட் என்பதை பெராரி நிரூபித்துவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in