Published : 03 Sep 2018 11:41 AM
Last Updated : 03 Sep 2018 11:41 AM

விவசாயிகளைக் காக்கும் தேவைக்கேற்ற உற்பத்திமுறை!

இந்த ஆண்டிற்கான குறுவை பருவத்தின் 14 விவசாய உற்பத்திக்கு பொருளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவிப்பு வழக்கமானதுதான் என்ற போதிலும், இந்த ஆண்டின் அறிவிப்பு கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்துவதற்கான மத்திய அரசின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆதரவு விலையில் உற்பத்திச் செலவுடன் 50% சேர்த்து 150% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது!

இதை வரவேற்கும் அதே சமயத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலையினால் மட்டுமே பெருவாரியான பயன்கள் விளைவதில்லை என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.  அதாவது, சந்தை விரிவாக்கம் மற்றும் சந்தைகளை செம்மைப்படுத்துதல், விற்பனைக்கு ஏதுவாக போக்குவரத்து மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள், பொருள் விற்பனைக்குத் தேவையான தகவல்களை விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் அளிப்பது  மற்றும் சரியான முறையில், சரியான தருணத்தில் விளை பொருள்களை அரசாங்கமே கொள்முதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை செய்தால்தான்  குறைந்த பட்ச ஆதரவு விலையின் பயனை விவசாயிகள் பெற முடியும் என்பது அவர்களின் வாதம்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச விலையை உயர்த்தி அறிவிப்பதன் மூலம், பொருளாதாரத்தில் வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.  அதில் முக்கியமான ஒன்று, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம்! இந்த விலை ஏற்றம் என்பது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கக்கூடியது. இருப்பினும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை மட்டுப்படுத்த உணவு பொருட்களை வாங்கி விநியோகிப்பதில் அரசாங்கத்தின் தலையீடு தேவையாகிறது.

சந்தை விலை குறைந்த பட்ச ஆதரவு விலையை விட குறையும்போது, அரசாங்கம் கூடுதலாக செலவிட்டு உணவுப்பொருளை வாங்கி குறைந்த விலைக்கு விநியோகிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் அதிகப்படியான நிதிச் சுமையை வரி செலுத்தும் சாதாரண மக்களே ஏற்க வேண்டும்.  ஆகவே, குறைந்த பட்ச ஆதரவு விலை உயரும்போது அது சாதாரண நுகர்வோரையும் மற்றும் வரி செலுத்துவோரையும் கணிசமாக பாதிக்கச் செய்கிறது!

குறைந்த பட்ச ஆதரவு விலை உயரும்போது ஏற்படும் மற்றொரு பொருளாதார பாதிப்பு, மிகை உற்பத்தி! ஒரு பொருளின் விலை உயரும்போது, உற்பத்தியாளர் அந்த பொருளை அதிகப்படியாக உற்பத்தி செய்வார். ஒவ்வொரு உற்பத்தியாளரும் இதைப் பின்பற்றும் பட்சத்தில் தேவைக்கதிகமான உற்பத்தி நடைபெறும்! இதனால் அப்பொருளின் விலை கணிசமாக வீழ்ச்சி அடையும். இதனால் நஷ்டம் ஏற்படவாய்ப்புகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக நமது விவசாய பெருமக்கள் பாதிக்கப்படுவது மிகை உற்பத்தியினால் ஏற்படும் விலை வீழ்ச்சியினாலேயே! மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளை ஆதரவு விலை சார்ந்த பயிர்களையே பயிர் செய்யத் தூண்டுவதால் பயிரிடுதலின் பன்முகத் தன்மை பாதிக்கப் படுகிறது! இதன் மூலம், ஒரு சில பயிர்கள் மிகை உற்பத்தி மற்றும் விலைச்சரிவையும் வேறு சில பயிர்கள் குறைந்த உற்பத்தி மற்றும் அதிகப்படியான விலையையும் சந்திக்க நேரிடுகிறது!

குறைந்த பட்ச ஆதரவு விலை கொண்ட பயிர்களில், நெல் மற்றும் கரும்பு பயிர்கள் முக்கியமானவை. இப்பயிர்கள் அதிக நீரை உட்கொள்ளும் பயிர்களாதலால், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது போன்ற நிகழ்வுகள் நடை பெற்று சமூக பொருளாதார இழப்பிற்கு வழிகோலுகிறது!

குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப் பட்டபோதிலும், அது சரியாக நடைமுறைப் படுத்தப்படாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றமாகவே உள்ளது! குறிப்பாக, பெருவாரியான விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி போதிய விழிப்புணர்வே இல்லாமல் உள்ளனர். ஆராய்ச்சி கட்டுரைகளின் முடிவுகளின்படி, 7 சதவீதத்திற்கு குறைவான விவசாயிகளே குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி அறிந்துள்ளனர் என்பது வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது!

இவ்வாறு இருப்பின், விவசாயிகள் எப்படி குறைந்த பட்ச ஆதரவு விலை கொண்ட பயிர்களை மிகை உற்பத்தி செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஒருசில விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட பயிரை பயிர் செய்யும்போது, அதையே மற்ற விவசாயிகளும் பின்பற்றுவது இதற்கு ஒரு காரணமாக அமையும்.

சில பயிர்களை பொறுத்தவரை, விவசாயிகள் சமீபத்திய அல்லது நடப்பு விலையை பின்பற்றியே தங்களது பயிர் செய்யும் முடிவை மேற்கொள்கிறார்கள் என்பது கண்கூடு. உதாரணமாக, தக்காளி அல்லது வெங்காயம் அதிக விலைக்கு விற்கும்போது பெருவாரியான விவசாயிகள் வரும் போகத்தில் இந்த பயிர்களையே பயிரிட விழைவர்.

ஆனால், அறுவடை காலத்தில் மிகை உற்பத்தியினால் விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். அடுத்த போகத்தில் பெருவாரியான விவசாயிகள் இப்பயிர்களை கை விட்டு வேறு பயிர்களுக்கு தாவும்போது, வெங்காயம் மற்றும் தக்காளியின் உற்பத்தி குறைவதால் அவற்றின் விலை பெரு வாரியாக உயரும். விவசாயிகள் இப்போதும் ஏமாற்றத்தை உணருவர்.

இப்போது, மறுபடியும் இந்த பயிர்களுக்கு பெருவாரியான விவசாயிகள் தாவும்போது அறுவடை காலத்தில் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து மறுபடியும் நஷ்டம் ஏற்படும்! இது பன்னெடுங்காலமாக ஒரு சுழற்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு சில பொருட்களின் விலை அதிகமாகும்பொழுது, விவசாயிகளிடம் அப்பொருட்கள் இருப்பதில்லை! அப்பொருட்கள் அவர்களிடம் இருக்கும்போது, அவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை!

இந்திய விவசாய துறையில் ஏற்படும் பெருவாரியான பிரச்சினைகளுக்கு விவசாய பொருட்களின் விலையே முக்கிய காரணமாக அமைகிறது. அந்த விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதன்மூலம், விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் வாழ்வில் ஒருங்கே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர முடியும்! அது எவ்வாறு சாத்தியம்?

தனியார் ஒப்பந்த விவசாயத்தில் உள்ள முக்கிய கூறுகள் விவசாயத் துறையில் விலையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அளிக்கின்றன. ஒப்பந்த விவசாயத்தில் தேவைக்கேற்ற உற்பத்தியை பயிர் செய்வதற்கு முன்னரே நிர்ணயம் செய்கின்றனர்.

ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் பயிருக்கான கொள்முதல் விலையும் பயிர் செய்வதற்கு முன்னரே நிர்ணயம் செய்யப்படுவதால், அறுவடை காலத்தில் ஏற்படும் விலை வீழ்ச்சி அல்லது அதிகப்படியான விலை ஏற்றம் என்பதற்கான வாய்ப்பே இல்லை. ஆக, பயிர் செய்வதற்கு முன்பே எதிர்காலத்திற்கான விலை சமன் செய்யப்படுவதால் விவசாயி மற்றும் வாங்குபவர் இருவரும் மிக்க பயனடைகின்றனர்.

ஆனால், தற்போதைய இந்திய விவசாயம் தேவையையும் உற்பத்தியையும் நிகராக ஆக்கி விலையை சமன் செய்யும் தன்மையைக் கொண்டதாக இல்லை! உற்பத்தி செய்தபின், எந்த சந்தையில் அதிக விலை கிடைக்கும் என்பதற்கான தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்க ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றனவே தவிர, பயிர் செய்வதற்கு முன்னரே தேவைக்கேற்ப எவ்வாறு உற்பத்தியை நிர்ணயிப்பது என்பது பற்றிய நடவடிக்கைகள் நம்மிடம் இல்லை! தேவைக்கேற்ப உற்பத்தியே விலையை நீண்டகால அடிப்படியில் சமன் செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வல்லது!

மேற்சொன்ன பரிந்துரையை சாத்தியமாக்க, முதலில் நாம் ஒவ்வொரு விவசாய பொருளுக்குமான தேவையை ஒவ்வொரு பருவத்திற்குமோ அல்லது ஒவ்வொரு ஆண்டுக்குமோ கணக்கிடவேண்டும். உதாரணமாக, அரிசிக்கான ஒரு ஆண்டின் மொத்த தேவையை மக்கள் தொகை மற்றும் அரிசி ஏற்றுமதி/இறக்குமதி ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட முடியும். இதுபோல், ஒவ்வொரு முக்கியமான வேளாண் விளை பொருளுக்குமான தேவையை சராசரியாக கணக்கிட வேண்டும். 

ஒவ்வொரு வேளாண் பொருளுக்கான தேவையை கணக்கிட்ட பின், ஒவ்வொரு பொருளும் எவ்வளவு உற்பத்தி செய்யப்படும் என்பதை கணக்கிட வேண்டும். இது சற்று கடினம். கிராமம் தோறும் விவசாயிகளிடம் ஒரு சிறிய கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் இதை நிர்ணயிக்கலாம்.

அதாவது, ஒவ்வொரு விவசாயியிடமும் ஒவ்வொரு பருவத்திற்கு முன்பும் (இரண்டு மாதங்களுக்கு முன்பு) இரண்டு கேள்விகள் கேட்கவேண்டும்:

1) வரும் பருவத்தில், என்ன பயிர்கள் செய்வீர்கள்?; மற்றும்,

2) எவ்வளவு ஏக்கரில் இந்த பயிர்களை செய்வீர்கள்? இந்த இரண்டு கேள்விகளிலிருந்தும், எவ்வளவு விவசாயிகள், எவ்வளவு ஏக்கரில் என்ன பயிர் செய்யப்போகிறார்கள் என்பதை கணக்கிடுவதன் மூலம் ஒவ்வொரு பயிரும் வரவிருக்கும் பருவத்தில் அல்லது ஆண்டில் எவ்வளவு உற்பத்தி செய்யப்படும் என்பதை சுலபமாக கணக்கிட முடியும்.

விவசாயிகளிடமிருந்து இந்த தகவல்களை பெற, முன்னரே உள்ள கட்டமைப்பு வசதிகள் போதுமானது. உதாரணமாக, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம நிர்வாக அதிகாரி இந்த தகவல்களை மிக சுலபமாக திரட்ட முடியும்! ஒவ்வொரு பயிரின் வருங்கால உற்பத்தியையும், முன்னரே கணக்கிடப்பட்ட தேவையுடன் ஒப்பிடும்போது எந்தப் பயிர் தேவைக்கு அதிகமாக மற்றும் எந்த பயிர் தேவைக்குக் குறைவாக உற்பத்திசெய்யப்படும் என்பதை அறிய முடியும்.

இதிலிருந்து எந்தப் பயிரின் விலை வீழ்ச்சி அடையும் அல்லது எந்தப் பயிரின் விலை அதிகப்படியாக உயரும் என்பதை பயிர் செய்வதற்கு முன்கூட்டியே கணக்கிட முடியும்.

இதனடிப்படையில், விவசாயிகளிடம் மிகை உற்பத்தி பயிர்களை தேவைக்கேற்ப குறைத்தும், குறைந்த உற்பத்தி பயிர்களை தேவைக்கேற்ப அதிகரித்தும் பயிர் செய்ய பரிந்துரைப்பதன் மூலம் தேவைக்கேற்ற உற்பத்தி செய்து, விலையை நீண்ட கால அடிப்படையில் சமன் செய்து விவசாயிகளையும் நுகர்வோர்களும் ஒருசேர ஏற்றமடையச் செய்யலாம்! இங்கே, வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் அரசின் புள்ளி விவர மையங்கள் விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து விவசாயிகளின் தேவைக்கேற்ப பயிரிடும் முறையில் சீர் திருத்தம் கொண்டு வருவதில் ஒரு பெரும் பங்காற்ற முடியும்.

குறுகிய காலத்தில் தேவை, உற்பத்தி மற்றும் விலையைக் கணக்கிடுவதில் சில குறைகள் இருப்பினும், தொடர்ந்து இவற்றை கணக்கிடும் பட்சத்தில் கணக்கிடுதலில் ஏற்படும் தவறுகளைக் களைந்து நீண்ட கால அடிப்படையில் துல்லியமான கணக்கீடுகளை தருவிக்க முடியும்! இந்த அணுகுமுறையே, வருகாலங்களில் விவசாயிகளையும் மற்றும் விவசாயத்தையும் காக்க வல்லது!

-venkatmids@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x