

டயர் என்றால் பல பிராண்ட்களின் பெயர்கள் நினைவுக்கு வரும். ஆனால், பிகேடி என்ற பெயரில் ஒரு பிராண்ட் இருப்பது பற்றி பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இந்நிறுவனத்தின் டயர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த அளவுக்கு உலகத் தரமானவை.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் நகருக்கு அருகே பதார் கிராமத்தில் சுமார் 312 ஏக்கர் பரப்பளவில் பிகேடி தொழிற்சாலை வளாகம் அமைந்துள்ளது. கான்ட்லா மற்றும் முந்த்ரா துறைமுகங்கள் சுமார் 50 முதல் 60 கி.மீ. தொலைவில் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதவாறு உலக தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘இணைந்து வளர்வோம்’ (குரோயிங் டுகெதர்) என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் பிகேடி, வாடிக்கையாளர்களின் நலனுக்கும் தரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த வகையில், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு டயர்கள் தயாரிக்கப்படுகின்றன.
உற்பத்தியாகும் ஒவ்வொரு டயரும் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் டயர்களை சம்பந்தப்பட்ட வாகனங்களில் பொருத்தி, சமமான, கரடுமுரடான, மேடுபள்ளம் நிறைந்த என பல்வேறு வகையான ‘சோதனை சாலை’களில் இயக்கி பரிசோதிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலை வளாகத்தில் ஆராய்ச்சிமற்றும் வளர்ச்சிப் பிரிவு (ஆர் அன்ட் டி) செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் அதிகரிக்கும் தேவைக்கேற்ப, பல்வேறு வகையான வாகனங்களுக்காக புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய டயர்களை தயாரிப்பது குறித்து இங்கு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் இந்த வளாகத்தில் ரூ.450 கோடி முதலீட்டில், டயர் தயாரிப்பதற்கு தேவையான கார்பன் மூலப்பொருள் தயாரிப்பு தொழிற் சாலையை நிறுவப்போவதாக பிகேடி இணை நிர்வாக இயக்குநர் ராஜீவ் பொடார் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது இந்நிறுவனம். இந்த தொழிற்சாலை வளாகத்திலேயே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், சுகாதார மையம், குழந்தைகளுக்கான பள்ளி என அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைந்துள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், பிகேடி போன்ற பல நிறுவனங்கள் இப்பகுதியில் தொடங்கப்பட்டதால் கணிசமாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவர்களது வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது.
சொந்த மின் உற்பத்தி
இந்த வளாகத்தில் 20 மெகா வாட் திறனுள்ள 2 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதில் ஒன்று மட்டும் செயல்படுகிறது. மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. இதுதவிர, தொழிற்சாலை மேற்பரப்பில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு சூரிய மின்சாரமும் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகள் உட்பட அனைத்து மின்சார தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
நீர் தேக்கங்கள்
இதுபோல, தொழிற்சாலைக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். ஆனால் இந்தப் பகுதியில் மழை குறைவான அளவிலேயே பெய்யும் என்பதால், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 3 நீர் தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் பெய்யும் மழை நீர் அனைத்தும் இந்த நீர்தேக்கங்களில் சேமிக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் பிரச்சினை இல்லை.
60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்கப்படுவதால் பசுமையான சூழல் நிலவுகிறது. கழிவு நீரையும் வெளியேற்றுவது இல்லை. அதை சுத்திகரித்து மரம், செடிகளுக்காக பயன்படுத்துகின்றனர்.
பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (பிகேடி) மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு முதல் டயர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இத்தாலி, அமெரிக்கா (ஓஹையோ, டென்னிசி), கனடா ஆகிய நாடுகளில் 4 துணை நிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனம் வேளாண்மை, கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட தொழிலில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான டயர்களை பிகேடி என்ற வணிக முத்திரையின் பெயரில் சர்வதேச தரத்தில் தயாரித்து வருகிறது. இதுதவிர, 2, 3 சக்கர வாகனங்களுக்கான டயர்களும் தயாரிக்கப்படுகின்றன. 9 முதல் 49 அங்குலம் விட்டம் வரையிலான அளவுள்ள டயர்கள் தயாரிக்கப்படுகின்றன.
அவுரங்காபாத் (மகாராஷ்ட்ரா), பிவாடி (ராஜஸ்தான்), சோபங்கி (ராஜஸ்தான்), டோம்பிவிலி (மகாராஷ்ட்ரா) மற்றும் புஜ் (குஜராத்) ஆகிய 5 இடங்களில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன. இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் மூலம் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சர்வதேச அளவிலான முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு அவற்றுக்கு தேவையான டயர்களை தயாரித்து வழங்கி வருகிறது பிகேடி. இந்நிறுவனத்தின் மொத்த டயர் உற்பத்தியில் டிராக்டர், அறுவடை இயந்திரம் உட்பட வேளாண் துறை தொடர்பான டயர்கள் மட்டும் 64 சதவீத பங்கு வகிக்கின்றன.
இதுதவிர, மண் அள்ளும் இயந்திரங்கள் உட்பட சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான டயர்கள் 17 சதவீதமும் கட்டுமான இயந்திர வாகன டயர்கள் 17 சதவீதமும் பிற வாகன டயர்கள் 2 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
85 சதவீதம் ஏற்றுமதி
பிகேடி நிறுனத்தில் மொத்தம் சுமார் 7,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மொத்தம் 2,700 வகையான டயர்கள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டின் உற்பத்தி 1,99,483 டன்னாகவும் வர்த்தகம் ரூ.4,800 கோடியாகவும் இருந்தது. இந்நிறுவனத்தின் டயர்களில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மொத்தம் 160-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. குறிப்பாக மொத்த உற்பத்தியில் 52 சதவீத டயர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதியாகின்றன. அமெரிக்காவுக்கு 20 சதவீதமும் மற்ற நாடுகளுக்கு 13 சதவீதமும் ஏற்றுமதியாகின்றன. 15 சதவீத டயர்கள் உள்நாட்டில் விற்பனையாகின்றன. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கே.ஆனந்தன், anandhan.k@thehindutamil.co.in