கடன் வழங்கும் கூகுள்

கடன் வழங்கும் கூகுள்
Updated on
1 min read

இன்றைய இணைய யுகத்தில் எத்தனையோ புதுப்புது நிறுவனங்கள் புதுப் புது சேவைகளுடன் வந்தாலும் கூகுளை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இணைய உலகத்தைப் புரிந்து வைத்துள்ளது கூகுள்.

எனவேதான் யாஹூ, ஆஸ்க் டாட்காம் என்று எத்தனையோ தேடுதல் பொறிகளையெல்லாம் தோற்கடித்து எப்போதும் முதலிடத்தை வகித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை கேட்டதைக் கொடுக்கும் தேடுதல் பொறியாகவும், ஜிமெயில், யு டியூப், கூகுள் பிளஸ், கூகுள் ட்ரைவ், கூகுள் மேப் என அனைத்திலும் முன்னணியில் கோலோச்சிக் கொண்டிருந்த கூகுள் இனி நமக்கு கடன் தரவும் தயாராகிவிட்டது.

இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் துறை சமீபகாலத்தில் மக்களிடையே அபரிமிதமான வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், பேடிஎம், ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப், ஜாக்மாவின் அலிபாபா வரை பல நிறுவனங்கள் டிஜிட்டல் பேமென்ட் செயலிகளை அறிமுகப்படுத்தி நிதி சேவையை வழங்கிவருகின்றன.

இந்நிலையில், இணைய உலகத்தில் இவர்களுக்கெல்லாம் முன்னணியில் இருக்கும் கூகுள் டிஜிட்டல் பேமென்ட்  துறையிலும் தனது சந்தை மதிப்பை அதிகரித்து முதலிடத்தைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்தியாவின் நான்கு முன்னணி வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா பேங்க், மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்குடன் டிஜிட்டல் நிதி சேவை வழங்கும் திட்டத்தைக் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது கூகுள் நிறுவனம் கடந்த வருடம் செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்திய கூகுள் டெஸ் என்ற செயலி ஏற்கெனவே சில அடிப்படை நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இந்த கூகுள் டெஸ் செயலியை கூகுள் பே என்று பெயர் மாற்றம் செய்து, இந்த செயலி மூலமாக, சில வங்கிகளுடன் இணைந்து உடனடி கடன்களையும், இன்னபிற நிதி சேவைகளையும் வழங்கவிருக்கிறது.

கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதில் கேட்கப்படும் மிகச்சில ஆவணங்களை மட்டும் வழங்கி வங்கியின் ஒப்புதல் பெற்றுவிட்டால் போதும், அடுத்த சில மணிநேரங்களில் கடன் தொகை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும் என்கிறது கூகுள் நிறுவனம். மேலும், இந்த செயலியில் 2000க்கும் அதிகமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், 15 ஆயிரம் சில்லறை வர்த்தக நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் இந்த செயலியைத் தற்போது 22 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பேடிஎம் 150 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் டிஜிட்டல் பேமென்ட் சந்தையில் முன்னிலையில் உள்ளது. பேடிஎம் இடத்தை கூகுள் பிடிக்குமா? டெலிகாம் துறையைத் தொடர்ந்து டிஜிட்டல் பேமென்ட் துறையிலும் போர் மூள ஆரம்பித்துவிட்டது.

எந்தச் செயலியில் எந்த சேவையைப் பெறுவது என்ற குழப்பம் மக்களுக்கு வராமல் இருந்தால் சரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in