Last Updated : 17 Jun, 2019 11:12 AM

 

Published : 17 Jun 2019 11:12 AM
Last Updated : 17 Jun 2019 11:12 AM

இந்தியா வளர்கிறது,  ஆனால்...

ஏகோபித்த ஆதரவுடன் அரியணையில் ஏறியிருக்கிற பாஜகவின் புதிய அமைச்சரவைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு.

இந்தியாவில் வேலைவாய்ப்பையும் திறன் வளர்ப்பையும் அதிகரிப்பதே நோக்கம் என்ற முழக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய அமைச்சரவையின் முன் உள்ள சவால்களின் பட்டியல் ரொம்பவே நீளம். அதில் முக்கியமானவை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் வேலையின்மையும்.

ஒருபக்கம் தொடர்ந்து இந்திய ஜிடிபி புள்ளி விவரங்கள் பொய்யானவை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபடி இருக்கின்றன. மறுபக்கம் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது என்ற செய்தி வெளியாகிறது. இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் அடைந்த அபரிமிதமான வளர்ச்சியில், ஜிடிபி வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லையே ஏன்?

1991-லிருந்து அதே நிலை

இந்தியா உற்பத்தி துறையை முற்றிலுமாக மறந்துவிட்டதே இதற்கு முக்கிய காரணம். ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் இன்றியமையாதது உற்பத்தி துறை. உற்பத்தி துறையின் வளர்ச்சிதான் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும், அதே சமயம் உலக அரங்கிலும் குறிப்பிடத்தக்க வர்த்தக சந்தையை பிடிக்க உதவும்.

ஆனால், 1991 முதல் இன்று வரையிலும் இந்திய ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்களிப்பு 16 சதவீதம் என்ற அதே நிலையிலேயே தொடர்கிறது. இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் அடைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு வழிவகுத்தது நுகர்வு. இந்தியாவில் நுகர்வு வளர்ந்த வேகத்துக்கு இங்கே உற்பத்தித் துறையும் வளர்ந்திருக்க வேண்டும்.

அதற்கேற்ப அரசுகள் தொழில் கொள்கைகளை வகுத்திருக்க வேண்டும். இதில் கோட்டை விட்டதால் ஏற்பட்ட விளைவு இன்று இந்தியாவில் விற்பனையாகும் பொருட்களில் பெரும்பான்மையானவை வெளிநாட்டு தயாரிப்புகள்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மோடி பிரதமர் ஆனபோது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் அறிவித்தார். அதற்கு நாடெங்கும் அபரிமிதமான ஆதரவு கிடைத்தது. ஏனெனில் அப்படியான ஒரு கொள்கை நாட்டுக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லோரும் உணர்ந்திருந்தார்கள்.

ஆனால், அந்தத் திட்டத்தினால் இந்தியாவுக்கு கிடைத்தது என்ன? கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடங்கப்பட்ட உற்பத்தி ஆலைகளைப் பட்டியலிடலாம் என்று தேடினால் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றும் இல்லை. (சில எலெக்ட்ரானிக் நிறுவனங்களின் ஆலைகள்தான் இத்திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன. அவையும் பெரும்பாலும் அசெம்பிள் யூனிட்டுகள் மட்டுமே) ஏற்கெனவே உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள்கூட விரிவாக்கம் என எதையும் செய்யவில்லை.

உற்பத்தி துறையை வீழ்த்திய சேவைத் துறை

தாராளமயக் கொள்கையின் விளைவாக உள்ளே நுழைந்த தகவல் தொழில்நுட்பத் துறை கணிசமான வேலைவாய்ப்புகளைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அது ஏற்படுத்திய மாயையால் இன்று ஒட்டுமொத்த இந்தியாவுமே சேவைத் துறை பொருளாதாரமாக மாறி கிடக்கிறது.

இந்தியாவில் ஒருகாலத்தில் உற்பத்தி துறைக்காக தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், சேவைத் துறையின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பசுமைப் பூங்காக்கள்தான் பெருமளவில் ஆரம்பிக்கப்பட்டன. போகப் போக முற்றிலுமாக உற்பத்தித் துறையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது அரசு.

தொழில்முனைவோரும் எளிதில் பணம் ஈட்ட வசதியாக இருக்கும் சேவைத் துறையையே தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமா, இளைஞர்களின் வாழ்க்கை போக்கையே முற்றிலுமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது சேவைத் துறையின் ஆதிக்கம்.

1991-ல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த பொறியியல் கல்லூரிகள் இன்று திரும்பிய பக்கம் எல்லாம் முளைத்திருக்கின்றன. இந்தியாவில் ஒராண்டுக்கு உற்பத்தி ஆகும் பொறியாளர்களின் எண்ணிக்கை 15 லட்சம். இவர்களுக்கான வேலைவாய்ப்பு எங்கே இருக்கிறது என்று பார்த்தால்...

நாள் முழுக்க வாடிக்கையாளர் சேவையில் பேசிக்கொண்டிருப் பதில் ஆரம்பித்து, ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்யும் வேலை வரை படிப்புக்குத் துளியும் தொடர்பில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஸ்விக்கியில் வேலை பார்க்க பொறியியல் பட்டம் எதற்கு, வாகனம் ஓட்டத் தெரிந்தாலே போதுமே? வேலை வாய்ப்பு உருவாக்கம் என அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களும் இத்தகைய வேலைவாய்ப்புகளாகவே இருக்கின்றன.

உலக அளவில் இந்தியாதான் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால், இந்த இளைஞர் சக்தியை இந்தியா ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள எந்தத் திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. உலகம் முழுவது முள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில், முக்கியப் பதவிகளில் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். இது பெருமைப்படத்தக்க விஷயம்தான்.

ஆனால், இந்தப் பெருமையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

இங்கு கல்வியும், வழங்கப்படுகிற வேலைவாய்ப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இன்றைய சந்தை பெரும்பாலும் நவீன அடிமைத்தன வேலைகளையே உருவாக்கி வைத்திருக்கிறது. இங்கு படிப்பும் பட்டமும் சம்பிரதாயமாகவே மாறிவிட்டது என்றுகூட சொல்லலாம்.

ஓராண்டுக்கு இந்தியாவில் உருவாகும் 15 லட்சம் பொறியாளர்களில் 80 சதவீதம் பேர் வேலைக்குத் தகுதியில்லாதவர்கள் என ஒரு ஆய்வறிக்கைச் சொல்கிறது. 7 சதவீத பேருக்கு மட்டுமே படிப்புக்கான வேலை கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

புறக்கணிக்கப்பட்ட சிறு, குறு தொழில்கள்

இந்தியாவில் உற்பத்தி துறையை இன்றும் சாகாமல் வைத்திருப்பவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் என்ற எம்எஸ்எம்இ துறைதான். நாட்டின் 5000 மண்டலங்களில் எஸ்எம்இ நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை நாட்டின் ஜிடிபியில் 40 சதவீதமும், ஏற்றுமதியில் 50 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.

வேலைவாய்ப்பையும் இவையே அதிகம் வழங்குகின்றன. ஆனால், இந்தத் துறைக்காக அரசு செய்தது என்ன? அப்படி எதாவது செய்திருந்தால் கடந்த 20 ஆண்டுகளில் எம்எஸ்எம்இ துறை நிறுவனங்கள் அளவில் பெரிதாகி இருக்கும். இந்திய உற்பத்தி துறையைப் பொருத்தவரை வெகு சில பெரு நிறுவனங்கள் ஒருபக்கம், மறுபக்கம் மிகவும் சிறிய அளவிலான எஸ்எம்இகள் ஆயிரக்கணக்கில் ஒருபக்கம், இடையில் நடுத்தரமான நிறுவனங்கள் என்ற அளவில் பெரிய வெற்றிடம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் சிறு, குறு

நிறுவனங்களுக்குச் சரியான ஆதரவு அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருந்தால் அவையெல்லாம் உற்பத்தியில் ஓரளவேனும் வளர்ந்து அந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கக் கூடும். ஆனால், நடந்ததெல்லாம் வேறு. அந்நியப் பொருட்களின் ஆதிக்கம், இ-காமர்ஸ் வர்த்தகம் என தங்

களுக்கான சந்தையை உள்நாட்டில் கணிசமாக இழந்தன. மேலும், டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி காரணமாக நெருக்கடிகளைச் சந்தித்தன. இதனால் பல சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. எஞ்சியிருக்கும் நிறுவனங்கள் கூட பெரும்பாலும் ஏற்றுமதியால் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

சீனாவைப் பாருங்கள் ஒரு நாடு தனக்கான தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவில் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும். பின்னர்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால், நாம் உள்நாட்டில் தரமான பொருட்களை உற்பத்தி செய்து முழுவதுமாக ஏற்றுமதி செய்துவிட்டு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதைத்தான் பயன் படுத்திக்கொண்டிருக்கிறோம். சீனாவைப் பாருங்கள். 1980களுக்குப் பிறகு சீனப் பொருளாதாரத்

தில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் இன்று அந்நாட்டை உலக அரங்கில் தவிர்க்க முடியாத வர்த்தக நாடாக மாற்றியிருக்கிறது. வெளிநாடுகளின் பொருட்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிப்பதிலிருந்து, உலக நாடுகளுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது வரை என அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்குகிறது. அதனால்தான், அது வலிமை மிக்க பொருளாதார சக்தியாக வளர்ந்து அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறிக்

கொண்டிருக்கிறது. சீனாவுக்கு நிகரான மனித வளம், நில அமைப்பு, வளங்கள் என அனைத்தும் இந்தியாவிடம் இருந்தாலும் இந்தியாவால் சீனாவைப் போல் மாற முடியவில்லை.

இப்போதும் தாமதம் இல்லை

இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்றாம் ஐந்தாண்டு திட்ட காலகட்டத்தை தவிர வேறு எப்போதுமே உற்பத்தி துறை பொருளாதாரத்தின் முன்னணி துறையாக இருந்ததில்லை. உற்பத்திதுறைக்கு முக்கியத்துவம் தராத நாடுகள் எதுவுமே

வறுமையை ஒழிக்கவோ, நீடித்த வளர்ச்சியை அடையவோ இல்லை என்பதை நாடுகளின் பொருளாதார வரலாறுகள் சொல்கின்றன. எனவே, இந்தியா இதுவரை இல்லாத வகையில் ஒரு புதிய தொழில் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லை யெனில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் கடிவாளம் அந்நிய நாடுகளின் கைகளுக்குப் போய்விடும்.

இனியேனும் அரசு உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உலக நாடுகள் எல்லாம் என் நாடு, என் மக்கள் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டன. இந்தியா எப்போது

தன் நாட்டு மக்களுக்காக யோசிக்கப்

போகிறது?

-saravanan.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x