

ரேஸ் பைக் தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில் இத்தாலியில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ரேஸ் பைக்குகளில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த இந்நிறுவனம் ஒரு கட்டத்தில் ஸ்கூட்டர்களையும் தயாரிக்க தொடங்கியது.
ஏற்கெனவே ஸ்கூட்டர் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட அப்ரிலியா தற்போது ஸ்டார்ம் 125 என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை ரூ.65,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டில் அறிமும் செய்யப்பட்ட அப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டரைக் காட்டிலும் ஸ்டார்ம் மாடலின் விலை சற்று அதிகம். எஸ் ஆர் 125–ல் டிஸ்க் பிரேக் உண்டு. ஸ்டார்ம் மாடலில் டிஸ்க் பிரேக்கிற்கு பதிலாக டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
எஸ் ஆர் 125 மாடலின் வீல் சைஸ் 14 அங்குலம், ஸ்டார்ம் மாடலின் வீல் சைஸ் 12 அங்குலம். மேலும் ஆப் ரோட் பயணத்துக்கு ஏற்ற வகையில் ஸ்டார்ம் மாடலின் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இவை தவிர்த்து ஸ்டார்ம் மாடலுக்கும் எஸ் ஆர் 125 மாடலுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
ஆர் 125 மாடலில் உள்ள 9.5 ஹெச்பி பவரை 7,250 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தக்கூடிய இன்ஜின்தான் ஸ்டார்ம் மாடலிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் ஸ்கூட்டர்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இந்த மாடலுக்கு நிகரான அம்சங்களுடன் டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் ஹோண்டா க்ரேஸியா போன்ற மாடல்கள் தற்போது சந்தையில் உள்ளன. இவற்றிற்கு போட்டியாகக் களமிறங்குவதால்தான் அப்ரிலியா ஸ்டார்ம் 125 மாடலின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அப்ரிலியா ஸ்டார்ம் சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம்.