பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிள் ரிவோல்ட் அறிமுகம்

பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிள் ரிவோல்ட் அறிமுகம்
Updated on
1 min read

இந்தியாவில் தயாராகும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் முன்னணியில் உள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவின் புதிய தொழில் சிந்தனையில் உருவானதுதான் பேட்டரி மோட்டார் சைக்கிள். ரிவோல்ட் என்ற பெயரில் இவர் தொடங்கிய நிறுவனம் பேட்டரியில் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்டமான அறிமுக விழாவில் அனைவரையும் ஈர்த்தது இந்நிறுவன பேட்டரி மோட்டார் சைக்கிள். இதுவரையில் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்கள் மட்டுமே வந்த நிலையில் தற்போது பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிள் வந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வர்த்தக ரீதியிலான விற்பனை நாளை (ஜூன் 25) தொடங்குகிறது. இந்த மோட்டார் சைக்கிளை வாங்க விரும்புவோர் நிறுவன இணையதளம் அல்லது அமேசானில் இந்த மோட்டார் சைக்கிளுக்கு ரூ.1,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முதலில் டெல்லியிலும் பின்னர் என்சிஆர், பூனா, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்படியாக பேட்டரி மோட்டார் சைக்கிளை விற்க முடிவு செய்துள்ளதாக ராகுல் சர்மா தெரிவித்தார். ஜூலை முதல் வாரத்தில் முன்பதிவு

செய்தவர்களுக்கு வாகனங்கள் டெலிவரி செய்யப்படும். ரிவோல்ட் ஆர்வி-400 என்ற பெயரில் வந்துள்ள இந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் டிஜிட்டல் மயமானது. எல்இடி விளக்கு, 4 ஜி இணைப்பு உள்ளிட்ட வசதிகள் கொண்டது.

 இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 156 கி.மீ தூரம் வரை ஓடும் என்று நிறுவனம் உறுதிபட தெரிவிக்கிறது. இது நகர்ப்புற போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றதாகும். கடந்த ஏப்ரலில்தான் பேட்டரி வாகன உருவாக்கம் தொடர்பான ஆராய்ச்சியில் தங்கள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக சர்மா தெரிவித்தார்.

பேட்டரி வாகன உற்பத்திக்காக ஹரியாணா மாநிலம் மானேசரில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆலை அமைத்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 1.20 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக வளர்ந்துள்ளது. இங்கு தயாரான பேட்டரி மோட்டார் சைக்கிளைத்தான் சர்மா கடந்த வாரம் டெல்லியில் நிகழ்ந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தினார்.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரி இறக்குமதி செய்யப்பட்டதாகும். அதேசமயம்  எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் நிறுவனம் தயாரித்ததாகும். இந்த மோட்டார் சைக்கிள் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இதை சார்ஜ் செய்வதற்கு வழக்கமான 15 ஆம்பியர் பிளக் இருந்தால் போதுமானது.

இது தவிர மோட்டார் சைக்கிளுக்கான பேட்டரியை மாற்றும் (ஸ்வாப்) வசதியையும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. எந்தெந்த இடங்களில் இத்தகைய மையங்கள் உள்ளன என்ற விவரமும் நிறுவனம் உருவாக்கியுள்ள செயலியில் தெரியும். உடனே அங்கு சென்று பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.

சார்ஜிங் மையங்கள் இன்னமும் பெருமளவில் உருவாகாத நிலையில் பேட்டரியை மாற்றும் வசதிகொண்ட விற்பனையகங்களை நிறுவனம் அதிகரித்து வருவது இத்தகைய மோட்டார் சைக்கிள் விற்பனை உயர வழிவகுக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in