லாரி பாடி கட்டுமானத் தொழில் பாதிக்கும் அபாயம் அரசு உதவிக்கரம் நீட்டுமா?

லாரி பாடி கட்டுமானத் தொழில் பாதிக்கும் அபாயம் அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Updated on
3 min read

மோட்டார் வாகனங்கள் 2020 ஏப்ரல் 1 முதல் புகை விதி 6 தரத்துடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்தப் புதிய தரச்சான்றிதழ் கொள்கையால் லாரி பாடி கட்டுமானத் தொழில் பாதிப்புக் குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தத் தொழிலில் ஈடுபடுவோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை சரக்கு வாகனப் போக்குவரத்து.

சாலை மார்க்கமாக இயக்கப்படும் லாரிகள், பல லட்சக்கணக்கான டன் எடை கொண்ட சரக்குகளை பல்வேறு பயன்பாடுகளுக்காக நாள்தோறும் கொண்டு சென்று வருகின்றன. இதன்மூலம் நாடு முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இத்தகைய சரக்கு வாகனங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது லாரி பாடி கட்டுமானம். அதிக எடையிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு, கரடுமுரடான சாலைகளில் எல்லாம் பயணிக்கும் வகையில் லாரி பாடி கட்டுமானம் அமையவேண்டும். இந்த லாரி பாடி கட்டுமானத்தில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டீகர், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

5 ஆயிரம் பட்டறைகள்

தமிழகத்தை பொறுத்தவரை நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் லாரி கட்டுமானத் தொழில் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில் சிறியது, பெரியது என ஏறத்தாழ 5 ஆயிரம் லாரி பாடி கட்டுமான கூடங்கள் உள்ளன.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 500-க்கும் அதிகமான லாரி பாடி கட்டும் நிறுவனங்கள் இயங்குகின்றன. பிற மாநிலங்களில் லாரி பாடி கட்டுமானம் மேற்கொண்டபோதிலும், நேர்த்தியாகவும், தரமான முறையில் லாரி பாடி கட்டுவதற்கும் நாமக்கல் பெயர் போனது.

எனவே, நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர் நாமக்கல்லுக்கு லாரிகளை பாடி கட்டுவதற்காக கொண்டு வருகின்றனர். டாரஸ், டேங்கர்  மற்றம் டிரெய்லர் என அனைத்து வகையான லாரிகளுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலைகளில் பாடி கட்டப்படுகின்றன. லாரி பாடி கட்டுமானம் என்பது பெயின்டிங், எலக்ட்ரிக்கல், வெல்டிங் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியது.

அந்த வகையில் லாரி பாடி கட்டுமானத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கடுமையான விதிமுறைகள்

மத்திய அரசின் புகைவிதி 6 தர நிர்ணய முறைப்படி லாரி பாடி கட்டுமானத் தொழிலில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய வாகனப் பதிவு மையத்தில், ஒவ்வொரு லாரி பாடி கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோரும் தங்களது நிறுவனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்வதற்கு 12 ஆயிரம் சதுர அடி இடத்தில் லாரி பாடி கட்டும் பட்டறை அமைய வேண்டும். மேலும் இனி மரத்தால் லாரிகளுக்கு பாடி கட்டக்கூடாது. இரும்பினால் மட்டுமே பாடி கட்ட வேண்டும்.

இதற்கு தேவையான உபகரணங்கள் பட்டறையில் இருக்க வேண்டும். இவை இருந்தால் மட்டுமே வாகனப் பதிவு மையத்தில் நிறுவனத்தை பதிவு செய்ய முடியும். மேலும், பதிவு பெற்ற  நிறுவனத்தில் மட்டுமே லாரிகளுக்கு பாடி கட்ட வேண்டும்.

அங்கு பாடி கட்டப்படும் லாரிகளுக்கே, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் வழங்கப்படும் என்பன உள்ளிட்டவை மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய தரச்சான்று கொள்கையில் உள்ள விதிமுறைகளாகும்.

தொழில் பாதிக்கும் அபாயம்

ஆனால், இந்த லாரி பாடி கட்டும் தொழிலில் பெரும்பாலான நிறுவனங்கள் முறைசாராதவை. இதனால் ஏற்கெனவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பல சிக்கல்களைச் சந்தித்துவருகின்றன.

தற்போது புகை விதி 6 தரச்சான்றுக்கு ஏற்ப லாரி பாடிகளின் தரமும் பாதுகாப்பும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மஹிந்திரா, டெய்ம்லர் உள்ளிட்ட நிறுவனங்கள் பாடி கட்டுவது முதற் கொண்டு தங்களின் வாகனங்களை ஆலையிலேயே முழுமையாக உருவாக்கி சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் பாடி கட்டும் தொழிலிலும் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் புதியதரச் சான்றுக்கு ஏற்ப தொழில்களை மாற்றுவதில் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் நிதி சவால்களைச் சந்திக்க நேரிடுவதாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து நாமக்கல் லாரி பாடி கட்டும் பட்டறை உரிமையாளர் சங்கத்  தலைவர் எம்.புகழேந்திரன் கூறியதாவது:

எந்த வகை லாரியாக இருந்தாலும்  லாரி பாடி கட்ட குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் வரை செலவு ஆகும். இந்நிலையில் மத்திய அரசு  கொண்டுவந்துள்ள புதிய விதிமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்படி இனி மரத்தால் லாரிகளுக்கு பாடி கட்ட இயலாது. இரும்பினால் மட்டுமே பாடி கட்ட முடியும்.

மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் லாரி பாடி கட்டுவதற்கான மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இறக்குமதி செலவு ஓரளவு குறையும் என்றபோதிலும் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற இரும்பினால் மட்டுமே பாடி கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேயில் உள்ள இந்திய வாகனப் பதிவு மையம் நிர்ணயிக்கும் அளவுகளில்தான் லாரி பாடி கட்ட வேண்டும். ஏற்கெனவே இந்தத் தொழில் ஜிஎஸ்டியால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வந்தது.

தற்போது மெல்ல அதில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் சூழலில் இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த விதிமுறைகளை பின்பற்ற குறைந்தபட்சம் 2 ஆண்டு காலம் பிடிக்கும்.

இது வரை மரத்தில் பாடி கட்டி வந்த நிலையில் இனி இரும்பில் கட்ட வேண்டுமென்றால் அதற்கேற்ப உட்கட்டமைப்புக்கு மாற வேண்டும். அதற்கு அதிக முதலீடு வேண்டும். முதலீடு செய்ய நிதி ஆதாரம் இல்லாத நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகலாம்” என்றார். 

இந்தப் புதிய விதிமுறைகளால் கணிசமான அளவில் தொழில் வாய்ப்புகள் குறையும் அதே நேரம், புதிய விதிமுறைகளை பின்பற்றாத லாரிபாடி கட்டும் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் பாதுகாப்பு, தரம் உள்ளிட்ட விஷயங்களில் மேம்பட வேண்டியது மிகவும் அவசியம். அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது. அதேசமயம், ஆண்டாண்டுகளாய் நடத்திவந்த தொழிலில் திடீர் மாற்றங்களைக் கொண்டுவரும்போது, அரசு தரப்பிலிருந்து நிதி உதவியும், கால அவகாசமும் தர வேண்டியது அவசியம். இதன்மூலம் பல நிறுவனங்கள் மூடப்படுவதும், அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பறிபோவதும் தடுக்கப்படும். அரசு உதவிக்கரம் நீட்டுமா?

-parthiban.k@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in