

சில நாட்களுக்கு முன் டாக்டர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தினார்கள். ஆனால் அதற்கான காரணம் பலருக்கும் தெரியவில்லை. பொதுவாக வேலை நிறுத்தம் என்றாலே, ஊதிய உயர்வு கேட்டு நடத்தப்படும் போராட்டம் போலத்தான் இது என்றே பாமர மக்கள் பலரும் கருதினர். நோயினால் அவதிப்பட்டோர் பலரும் டாக்டர்களை அன்றைய தினம் சபித்தனர்.
கொல்கத்தாவில் கடந்த ஜூன் 10-ம் தேதி ஒரு இளம் டாக்டர் சிலரால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டார். இதற்குக் காரணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உறவினர் ஒருவர் இறந்துவிட்டதுதான். நோயில் படுத்து, உயிருக்கு போராடுபவர்களை மீட்டு வந்தவுடன் டாக்டர்கள் பலருக்கும் தெய்வமாக தெரிகின்றனர். ஆனால், நோய் முற்றிய நிலையில் ஒருவர் இறந்தால், அதற்கு டாக்டர்களைப் பொறுப்பாளியாக்கியதன் விளைவுதான் இது.
கடைசி வரை உயிரைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குத்தான் இங்கே பாதுகாப்பு என்பது இருக்கிறது. யாருக்கு எப்போது என்ன நடக்குமோ என்ற நிலையில் நாடு இருக்கும் நிலையில், மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸாரின் எண்ணிக்கை உலக அளவில் மிகவும் குறைவாக இருப்பது இந்தியாவில்தான் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது. காவல் பணி என்பது அந்தந்த மாநில அரசுகள் சார்ந்த விஷயம் என்பதால், போலீஸாரின் எண்ணிக்கை ஒரு சில மாநிலங்களில் அதிகமாகவும், ஒருசில பகுதிகளில் குறைவாகவும் உள்ளது என்கிறது. ஒரு லட்சம் பேருக்கு 222 போலீஸார் இருக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட அளவீடு.
ஆனால் இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 144 போலீஸார்தான் உள்ளனர். இதிலும் உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் ஒரு லட்சம் பேருக்கு முறையே 65 பேர் மற்றும் 89 போலீஸார்தான் உள்ளனராம். இந்த நிலையில் நாடு முழுவதும் தினசரி, ஏதாவது ஒரு பிரச்சினை என ஆங்காங்கே போராட்டம், பேரணி நடந்துகொண்டிருக்கிறது.
சில இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் வெடித்துவிடுகிறது. இதுபோன்ற தருணங்களில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, ஏன் போலீசாருக்கும் பாதுகாப்பில்லை. இங்கு போலீஸ்காரர்களின் எண்ணிக்கைக்கும் பொருளாதாரத்துக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்ற கேள்வி எழலாம். தொடர்பு இருக்கிறது.
ஒரு மாநிலம் அமைதி தவழும் மாநிலமாக இருந்தால் மட்டுமே அதாவது சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இருந்தால்தான், வெளிநாடுகளிலிருந்து தொழில் தொடங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். நாட்டு மக்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவினால், பிறகு எங்கிருந்து அந்நிய முதலீடுகள் வரும்.
ஆனால், பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் கேள்விக் குறியாகிக்கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல், முன்பெல்லாம், நிலத்துக்கடியில் பெட்ரோல், டீசல் எடுப்பதாக இருந்தால் அதற்கு பொதுமக்களே ஆதரவு தருவர்.
காரணம் வேலை வாய்ப்பு பெருகும், தங்கள் பகுதி வளம் பெறும் என்பதால்தான். ஆனால், இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பை கிளப்பி போராட ஆரம்பித்துவிடுகின்றனர். செயல்படுத்தப்படும் திட்டம் நல்லதா, கெட்டதா என்று தெரியாமலேயே.
பாதுகாப்பை வழங்கவேண்டியது ஆட்சியாளர்கள் பொறுப்பு என்பது ஒருபுறம் என்றால், அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டியதும் மக்களுடைய பொறுப்பு என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இதுகுறித்து இருதரப்பும் சிந்தித்தால் நல்லது. அமைதி, வளம், வளர்ச்சி என்பது சாத்தியமாகும்.