காப்பீடு மூலம் கடன் வாங்கலாம்

காப்பீடு மூலம் கடன் வாங்கலாம்
Updated on
2 min read

ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டை பயன்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா? எப்போதும் அப்படி நினைக்கத் தேவையில்லை. நிதி சிக்கல் ஏற்படும் சமயத்தில் காப்பீட்டை அடமானமாக வைத்து பணத்தை பெற முடியும். ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், ஆதித்யா பிர்லா பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் காப்பீட்டை அடமானமாக வைத்து கடன் வழங்குகின்றன.

சரண்டர் மதிப்பு இருக்கும் பாலிசிகளை மட்டுமே அடமானமாக வைக்க முடியும். அதாவது எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் பாலிசிகளை மட்டுமே அடமானம் வைக்க முடியும். ஆனால் டேர்ம் பாலிசி உள்ளிட்ட சில பாலிசிகளை அடமானமாக வைக்க முடியாது. உங்களது பாலிசிகளில் உள்ள சரண்டர் மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் வரை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். பாலிசி காலம் அதிகரிக்கும் பட்சத்தில் சரண்டர் மதிப்பும் அதிகரிக்கும். அதனால் பாலிசியின் இறுதி காலத்தில் அடமானம் வைக்கும்போது அதிக தொகை கிடைக்கும்.

தனிநபர் கடனுக்கான வட்டியை விட பாலிசியை அடமானம் வைத்து வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் குறைவு. உதாரணத்துக்கு ஆக்ஸிஸ் வங்கியில் தனிநபர் கடனுக்கு 15.5 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் பாலிசி அடமான கடனுக்கு 10.5 சதவீதம் முதல் 12.5 சதவீத வட்டிதான் வசூலிக்கப்படுகிறது. இதேபோல ஐசிஐசிஐ வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.99 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை உள்ளது. ஆனால் பாலிசி அடமான கடனுக்கு 8.15 சதவீதம் முதல் 11.75 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது.

இந்த கடனில் இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டுமே முக்கியமான ஆவணம் ஆகும். இதனை அடிப்படையாக வைத்தே வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்த கடனிலும் பரிசீலனை கட்டணம் இருக்கிறது. ஆனால் மற்ற தனிநபர் கடன்களை விட இந்த கடனில் பரிசீலனை கட்டணம் குறைவு. உதாரணத்துக்கு ஹெச்டிஎப்சி வங்கியில் வாங்கும் கடனில் ஒரு சதவீதம் அல்லது குறைந்தபட்சமாக 5,000 ரூபாய் பரிசீலனை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனிநபர் கடனுக்கு 2.5 சதவீதம் வரை இந்த வங்கி வசூலிக்கிறது. குறைந்தபட்சம் ரூ.1999 முதல் அதிகபட்சம் ரூ. 25,000 வரை தனிநபர் கடனுக்கு இந்த வங்கி வசூலிக்கிறது.

ஆக்ஸிஸ் வங்கியில் கடன் வாங்கும் தொகையில் 0.15 சதவீதம் அல்லது ரூ.1,000. இதில் எந்த தொகை அதிகமோ அந்த தொகையை பரிசீலனை கட்டணமாக வசூலிக்கிறது. ஆனால் தனிநபர் கடனுக்கு 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை பரிசீலனை கட்டணமாக இந்த வங்கி வசூலிக்கிறது.

வங்கிகளை பொறுத்தவரை இது பாதுகாப்பான கடன் என்பதால் பரிசீலனை கட்டணம், வட்டி விகிதம் உள்ளிட்டவை குறைவு. தவிர பாலிசி எடுக்கும் போது உங்களை பற்றிய முழுமையான தகவல்களை (கேஒய்சி) அளித்திருப்பதால், இந்த கடனில் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறைவு. இது அடமான கடன் என்பதால் கடன் வாங்குபவரின் சிபில் மதிப்பெண் குறித்த கவலை தேவையில்லை. குறைவான சிபில் மதிப்பெண் இருந்தாலும் கடன் கிடைக்கும்.

தங்கத்தை அடமானம் வைப்பது அல்லது பங்குகளை அடமானமாக வைப்பதை விட இன்ஷூரன்ஸ் பாலிசியை அடமானமாக வைக்கலாம். தங்கம் மற்றும் பங்குகளின் சந்தை விலைகள் மாறக்கூடும். ஆனால் பாலிசியின் சரண்டர் மதிப்பு என்பது மாறாதது.

மேலும் உங்களது கடன் அளவை உயர்த்துவதற்கு காப்பீடு பயன்படும். உதாரணத்துக்கு வீட்டுக்கடன் வாங்கும் போது, பாலிசியை அடமானமாக வைக்கும் பட்சத்தில் குறைந்த வட்டியில் கூடுதல் தொகை கடனாக கிடைக்கும் என லோன் டேப் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அமித் திவாரி குறிப்பிட்டுள்ளார்.

பாலிசியை அடமானமாக வைத்து கடன் வாங்கும் பட்சத்தில் கடன் வழங்கும் நிறுவனத்துக்கு அனைத்து அதிகாரமும் உண்டு. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் கிளைம் தொகை நேரடியாக நாமினிக்கு செல்லாது. கடன் கொடுத்த நிறுவனம், கடனுக்கான தொகையை எடுத்துக்கொண்டு மீதி தொகையைத்தான் நாமினிக்கு வழங்கும். அதனால் குறுகிய கால தேவைகளுக்கு மட்டும் காப்பீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கலாம்.

-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in