அதி நவீனமாக வருகிறது டிஸ்கவரி ஸ்போர்ட்

அதி நவீனமாக வருகிறது டிஸ்கவரி ஸ்போர்ட்
Updated on
1 min read

பிரீமியம் எஸ்யுவி பிராண்டான லேண்ட் ரோவர் தயாரிப்புகளில் அனைவருக்கும் பிடித்த மிகப் பிரபலமான மாடல் டிஸ்கவரி ஸ்போர்ட். முதன்முதலில் 2014-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் இதன் செக்மன்ட்டில் இன்று வரை விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. கடந்த வருடம் வரை 1,00,000 கார்கள் உலக அளவில் விற்பனை ஆகியிருக்கிறது.

இது மொத்த பிரிட்டிஷ் பிராண்ட் கார்களின் விற்பனையில் கால் பங்கு ஆகும். ஆனால், இந்தக் காரின் விற்பனை வால்வோ எக்ஸ்சி 60, ஆடி க்யூ5 போன்ற கார்களின் வருகையால் குறையத் தொடங்கியது. தனக்கான சந்தையை மீண்டும் தக்கவைக்க  தற்போது இந்த டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சந்தையில் களம் இறக்கியுள்ளது லேண்ட் ரோவர்.

இதன் பேஸ் வேரியன்ட் 150 ஹெச்பி பவரையும் மற்றும் 380 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உடையது. இதன் மேம்பட்ட டாப் வேரியன்ட் 250 ஹெச்பி பவரையும் 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த 7.1 செகண்டில் 96 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடிய திறன் கொண்டது. மேம்படுத்தப்பட்ட இம்மாடலின் மிக முக்கிய சிறப்பம்சம் இதன் எலக்ட்ரிக் இன்ஜின்தான். தவிர்த்து, இதன் உட்புற வடிவமைப்பும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. 

காரின் அளவைப் பொருத்தவரை முந்தைய மாடலின் அதே அளவில்தான் இந்தப் புதிய மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன் ரோடு மட்டுமல்லாமல், ஆஃப் ரோடிலும் பயணம் செய்யும் வகையில் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் இன்டீரியர் மிகவும் நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. 10.25 அங்குல தொடுதிரை டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. 8 யுஎஸ்பி போர்ட், வயர்லஸ் சார்ஜர் போன்ற சிறு சிறு அம்சங்களும் இதில் ஆப்ஷனாக வருகிறது. இருக்கைகள் கூடுதலான சவுகரியத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

டிரைவர் அசிஸ்ட்டன்ஸ் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தரைப் பகுதிகளை தெளிவாக பார்க்கும் வண்ணம் க்ளியர் சைட் கிரவுண்ட் வியூ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

முன்பகுதி கிரில் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, வண்டி சிக்கலான தெருக்களிலோ அல்லது ஆஃப் ரோட்டிலோ பயணிக்கும் போது, ஓட்டுநரால் கவனிக்க முடியாத தரைப்பகுதியைத் தெளிவாகக் காண்பிக்கும்.

அதன் மூலம் காருக்கு அடிப்பகுதி தரையில் இருப்பதையும் ஓட்டுநரால் துல்லியமாக பார்க்க முடியும். கூடவே ‘ஸ்மார்ட் ரியர் வியூ மிரர்’ காரின் பின்புறத்தில் உள்ள காட்சிகளை ஓட்டுநருக்கு முன் இருக்கும் திரையில் காட்டும்.

50 டிகிரி அளவிற்கு இது காட்சிகளை பதிவு செய்யும். தவிர பார்க்கிங் அசிஸ்டண்ட், எமர்ஜென்ஸி பிரேக்கிங் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களும் இதில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in