Published : 06 May 2019 11:12 AM
Last Updated : 06 May 2019 11:12 AM

நமக்கான அஜெண்டாவை தீர்மானிப்பது யார்?

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருக்கிறது. தேர்தல், முடிவுக்கு வந்ததை சொல்கிறேன். இன்னும் சில ஊர்களில் மெஷினை அழுத்தி கையில் மை தடவ வேண்டியிருந்தாலும் தமிழகத்துக்கு வந்த கோரப் புயல் கரை கடந்துவிட்டது. ரிசல்ட் வரும் போதுதான் அடுத்த புயல் கரையை கடக்கும். அதுவரை வேறு சில விஷயங்களைப் பேசுவோம்.

யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்கமாட்டேன். போட்டு பல நாள் ஆகிவிட்டது, சரியாக நினைவில்லை என்பீர்கள். தேர்தலில் யாரை ஆதரிப்பது, யாருக்கு ஓட்டு போடுவது என்று எப்படி தீர்மானிக்கிறோம்? நாங்கள் குடும்

பத்தோடு பல காலமாக ஒரு கட்சிக்கு தான் ஓட்டு போடுகிறோம் என்று கூறுபவர் நீங்கள் எனில் அடுத்தப் பக்கத்திற்கு தாவுவது உசிதம். உங்களிடம் பேசிப் பயனில்லை. மற்றவர்கள் சற்றே திரும்பிப் பார்த்து தெரிந்துகொள்ள முயல்வோம்.

படித்தவர் போல் நடந்துகொள்கிறோமோ இல்லையோ, தினம் பேப்பர் படிக்கிறோம். புரிகிறதோ இல்லையோ, அரசியல் செய்திகளை தேடிப் படிக்கிறோம். டீவியில் டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரஃபிக் போன்ற அறிவை வளர்க்கும் சேனல்களை பார்க்கவில்லை என்றாலும் செய்தி சேனல்களை வாயைப் பிளந்து ரசிக்கிறோம்.

அரசியல் அறிவை வளர்க்கிறோமோ இல்லையோ, அரசியல் கட்சிகள் மீது நம் அபிப்ராயத்தை ஓரளவேனும் மீடியா சொல்வதை பார்த்து வளர்த்துக் கொள்கிறோம்.  நாம் எதை, எப்படி நினைக்க வேண்டும் என்பதை மீடியா சரியாக சொல்கிறதா என்பதை விடுங்கள்.

நாம் என்ன நினைக்கவேண்டும் என்று மீடியாவால் நிர்ணயிக்க முடியுமா? நம் agenda வை மீடியா முடிவு செய்ய முடியுமா? மீடியா எப்படி பொதுக் கருத்தை பாதித்து எவ்வாறு நாட்டின் நிகழ்ச்சி நிரலை அமைக்கிறது என்பது பற்றி பல காலமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

பத்திரிகைளில் வரும் படங்கள் மூலம் மீடியா மக்கள் கருத்தை பாதிக்கிறது என்று 1922-ல் முதலில் திரி கிள்ளிப் போட்டார்  ‘வால்டர் லிப்மன்’ என்ற அமெரிக்க கட்டுரையாளர். உலகம் பற்றி அதிகம் அறிந்திராத அக்கால மக்கள் பற்றி அவர் கூறியது காலப் போக்கில் வளர்ந்து இன்று நாட்டின் நிகழ்ச்சி நிரல் அமைத்தல் கோட்பாடு (agenda-setting theory) என்று பெயரிட்டு அழைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

புதிய தகவல் தந்து மக்களின் மனதை முழுவதும் மாற்ற முயல்வதல்ல இக்கோட்பாடு. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டுமே பிரதானப்படுத்தி மற்ற செய்திகளை பின்னுக்குத் தள்ளுவதைப் பற்றியது. மீடியா முன்னிறுத்தி மையப்படுத்தும் செய்தி மட்டுமே மக்களின் மனதின் மொத்த கவனத்தையும் ஈர்க்கிறது. ஒரு விஷயம் மட்டுமே முன்னிறுத்தப்படுவதால், மற்ற பிரச்சினைகள் செய்திகளில் கிட்டத்தட்ட இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. முதலில் மீடியாவில்; அதனால், அதன்பின் மக்கள் மனதில்.

 ‘மேக்ஸ்வெல் மெக்காம்ப்ஸ்’ மற்றும் ‘டொனால்ட் ஷா’ என்ற ‘நார்த் காரோலினா’ பல்கலைக்கழக ஜர்னலிஸம் துறை பேராசிரியர்கள்தான் இக்கோட்பாட்டை முதலில் ஆராய்ந்து அளித்தார்கள். ஒரு செய்தி மீடியாவில் முன்னிறுத்தப்படும் போது அது மட்டுமே முக்கியம்; அதைச்சார்ந்துதான் நம் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்ற பொது கருத்து உருவாகிறது என்றார்கள்.

மீடியா ஒரு விஷயத்தை மட்டும் முன்னிறுத்தும் போது அந்த விஷயத்தை கையிலெடுத்திருக்கும் கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. மீடியா அதிகம் பிரதானப்படுத்தும் விஷயம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பாதகமாய் அமைந்தால் அக்கட்சி மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது. தேர்தல் நேரங்களில் அக்கட்சிக்கு ஓட்டு குறைகிறது!

1984-ல் எத்தியோப்பியாவில் வரலாறு காணாத பஞ்சம். லட்சக்கணக்கில் மக்கள் அவதிப்பட்ட நேரம். அமெரிக்க டீவிகளில் பசியால் வாடும் குழந்தைகளின் படங்கள் பிரதானமாக ஒளிபரப்பப்பட, அக்குழந்தைகளின் பசியும் வலியும் அமெரிக்க மக்களின் கவனத்தை ஈர்க்க பல காலம் மீடியாவில் எங்கு திரும்பினாலும் எத்தியோப்பிய பஞ்சம் தான் தலைப்புச் செய்தி, கவர் ஸ்டோரி, பிரைம்டைம் நியூஸ்.

அந்த அதீத சத்தத்தில் அமெரிக்கர்கள் உதவிக்கரம் நீட்ட, சர்வதேச அமைப்புகள் கோடி கோடியாக பணம் அளிக்க, அமெரிக்க இசைக் கலைஞர்களும் இந்த ஜோதியில் ஐக்கியமாகி ஒன்று சேர்ந்து இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டு, பல மில்லியன் டாலர் உதவி தொகை வழங்க, அந்த நேரம் எத்தியோப்பியா கிட்டத்தட்ட அமெரிக்காவின் ஐம்பத்தோறாவது மாநிலமானது!

நல்ல விஷயம்தானே, இதிலென்ன தப்பு என்று உங்களுக்குத் தோன்றும். ஒரு தப்புமில்லை. என்ன, எத்தியோப்பியா ஏகபோக செய்தியானதால் மற்ற நாடுகளும், ஏனைய விஷயங்களும் அமெரிக்க மீடியாவால் ஒதுக்கி வைக்கப்பட்டன.

எத்தியோப்பியாவில் பஞ்சம் இருந்த அதேசமயம், பிரேசில் நாட்டில் கடும் வறட்சி. இருந்தும் அமெரிக்காவில் எவருக்கும் இது தெரியவில்லை. ஏன்? மீடியாக்கள் அனைத்தும் எத்தியோப்பியாவை மட்டுமே கட்டிக்கொண்டு அழுதன.

உலகில் வேறு நாடுகள் இருக்கும், அங்கும் செய்திகள் உண்டு என்பதை பல சமயங்களில் மீடியாக்கள் மறந்துவிடுகின்றன. அதனால் செய்திகள் மட்டுமல்ல பலதரப்பு மக்களும் மறக்கடிக்கப்பட்டார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், எத்தியோப்பியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே மருத்துவ முகாம்கள் நிறுவப்பட்டிருந்தன. அங்குதான் பட்டினியால் பல குழந்தைகள் இறந்துகொண்டிருந்தார்கள். ஒரு சில இடங்களே என்பதால் மீடியாக்கள் அங்கேயே டேரா போட்டு அக்காட்சிகளை எளிதாக படம் பிடித்துக்கொண்டிருந்தன.

பிரேசில் நாட்டிலோ பல்வேறு இடங்களில் உணவு பொட்டலங்கள் தருவது, உதவி செயல்கள் வழங்கும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்ததால் அனைத்து இடங்களிலும் மீடியாவால் சென்று கவர் செய்ய முடியவில்லை; செய்யத் தோன்றவில்லை என்றும் சொல்லலாம்.

அழும் குழந்தைகள், ஓலமிடும் மக்கள்,  சோக மியூசிக் பிஜிஎம் என்று எத்தியோப்பிய கதை அமெரிக்க மக்கள் மனதை தொட, டீவி சீரியல் தோற்கும் அளவிற்கு அமெரிக்க மீடியாக்கள் ஒரு பிழி பிழிந்துவிட்டார்கள்.

‘மக்கள் என்ன சிந்திக்க வேண்டும் என்பதை மீடியாக்களால் செயல்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் எதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடிகிறது’ என்றார் ‘பெர்னர்ட் கோஹென்’ என்ற அமெரிக்க அரசியல்வாதி. அவர் சொன்னது புரிகிறதா? யோசியுங்கள் புரியும். புரிய வேண்டும்!

இது என்னவோ அமெரிக்காவில் மட்டும் அரங்கேறும் அவலம் அல்ல. உலகமயமான கோட்பாடு இது. இந்தியாவில் உண்டா என்று கேட்காதீர்கள். பேஷாய் உண்டு. பாலோட்டிலிருந்து பிளேன்கள் வரை பரபரப்புக்கு பஞ்சமா இந்த புண்ணிய பூமியில்!

நிகழ்ச்சி நிரல் அமைத்தல் கோட்பாட்டின் பாதிப்பை அலசி ஆராய்ந்த பல ஆய்வாளர்கள், குறிப்பாக டீவி செய்திகளின் காட்சி யதார்த்தம் (visual realism) மற்றும் உள்ளபடியே அதன் உணர்ச்சியை தூண்டும் விதம் மக்களை எளிதில் பாதிக்கின்றன என்கிறார்கள்.

அதுவும் அழகான கவர்ச்சியான டீவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றால் ஏகோபித்த யதார்த்தமாம். இன்னும் செய்தி சேனல்களில், கிரிக்கெட் ஒளிபரப்புகளில் அரைகுறை ஆடைகளோடு அலப்பரை செய்யும் அழகிகள் வராததுதான் மிச்சம்.

நிலைமையைப் பார்த்தால் அதுவும் நடக்கும் போலிருக்கிறது. ‘இந்த கர்மத்துக்குத் தான் சதா நியூஸ் பார்க்கறீங்களா’ என்று மனைவிகள் வய்யும் காலம் வெகு தூரம் இல்லை!

இக்கோட்பாட்டின் உளவியல் ரீதியான விளக்கத்தை ‘Persuasion’ என்ற புத்தகத்தில் விளக்குகிறார் ‘அரிஸோனா பல்கலைக்கழக’ உளவியல் மற்றும் மார்க்கெட்டிங் பேராசிரியர் ‘ராபர்ட் சியால்டினி’. நோபல் பரிசு பெற்ற ‘டேனியல் கான்மென்’ படைத்த ‘ஃபோகசிங் இல்யூஷன்’ என்னும் தத்துவத்தை தன் புத்தகத்தில் மேற்கோள் காட்டுகிறார்.

ஒரு விஷயத்தின் மீது நம் கவனம் விழும் போது அந்த விஷயத்திற்கு தேவையோ இல்லையோ அதீத முக்கியத்துவம் தருகிறோம். இதுவே ஃபோகசிங் இல்யூஷன். ஒன்றும் வேண்டாம், இரண்டு குழந்தைகளை பெற்றவர்களுக்கு நான் சொல்லப் போவது புரியும். ஒரு ரூமில் நிறைய பொம்மைகள் கொடுத்து  விளையாடச் சொல்லியிருப்பீர்கள்.

முதல் குழந்தை விளையாடி கீழே போட்ட பொம்மையை இரண்டாவது குழந்தை எடுத்து விளையாடத் துவங்கும் போது முதல் குழந்தை அந்த பொம்மை என்னுது, எனக்குத் தா என்று கேட்க இரண்டாவது குழந்தை மாட்டேன் என்று அலற அங்கு மூன்றாம் உலக யுத்தம் துவங்கியிருக்கும். ஞாபகத்திற்கு வருகிறதா?

என்ன தான் முதல் குழந்தை வேண்டாம் என்று போட்டாலும் இரண்டாவது குழந்தை அதை எடுக்கும் போது கீழே எறிந்த அதே பொம்மை முதல் குழந்தைக்கு முக்கியமாகப்படுகிறது. முதல் குழந்தைக்கு முக்கியமாகப் படுவதாலோ என்னவோ இரண்டாவது குழந்தைக்கும் அதே பொம்மை அத்தியாவசியப் பொருளாகிறது.

அந்த இடத்தில் மற்ற பொம்மைகள் அனைத்துமே மறக்கப்படுகின்றன. இதில் தமாஷ் என்னவென்றால் அடுத்த நாள் சண்டை போட்டுக்கொண்ட அதே பொம்மையை சட்டை கூட செய்யாது இரண்டு குழந்தைகளும்.

‘அந்த சமயம் என்ன நினைக்கிறீர்களோ அதைவிட முக்கியமான விஷயம் உங்கள் வாழ்க்கையில் வேறேதும் இல்லை’ என்று ஃபோகசிங் இல்யூஷனை மிக அழகாக விளக்குகிறார் டேனியல் கான்மென்!

‘மனதில் கவலை இருந்தால் அதை மறக்க சிறந்த வழி இறுக்கமான செருப்பை அணிவது’ என்று ஒரு ஆங்கில வாசகம் உண்டு. அப்படி அணியும் போது அந்நேரம் எப்பேற்பட்ட கவலையும் மறந்துவிடும்.

நம் கவனம் முழுவதும் கடுக்கும் நம் கால்கள் மீதுதான் இருக்கும். மீடியாக்கள் நமக்கான அஜெண்டாவை செட் செய்வதும் ஏறக்குறைய இப்படித்தான்!

 

satheeshkrishnamurthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x