

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அல்லது வேலை உருவாக்கம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த புள்ளி விவரங்கள் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன.
இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் தேசிய புள்ளியியல் ஆணையம் (என்எஸ்சி) வெளியிட்ட அறிக்கை பெரிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. அதுமட்டுமல்ல அதன் மீதான நம்பகத்தன்மை தற்போது சர்வதேச அளவில் தரம்தாழ்ந்து போயுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில்தான் என்எஸ்சி குறித்த தகவல் பரபரப்பாக வெளியானது. ஆணையத்தின் உறுப்பினர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தவுடன் பிரச்சினை தேசியத்தைத் தாண்டி சர்வதேச செய்தியானது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) வேலை உருவாக்கம் குறித்து வெளியிட்ட புள்ளி விவர அறிக்கை தொடர்பாக இரண்டு இயக்குநர்களும் ராஜினாமா செய்தது பிரச்சினையை பூதாகரமாக்கியது.
இப்போது என்எஸ்சி ஒரு முடங்கிய அமைப்பாகிவிட்டது. அதற்கு புதிய உறுப்பினர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. குறைந்தது 5 பேர் இருந்தால் மட்டுமே என்எஸ்சி செயல்படும் என்ற நிலை உள்ளது.
வேலை உருவாக்கம் குறித்த அறிக்கை தவறானது என்ற விவகாரம் இப்போது வெடித்திருந்தாலும், என்எஸ்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்ட 2006-ம் ஆண்டிலிருந்தே இதுபோன்ற தவறான தகவல்களை இது வெளியிட்டு வந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
இந்திய புள்ளியியல் துறை தலைவருக்கும் (சிஎஸ்ஐ) தேசிய புள்ளியியல் ஆணையத்துக்கும் இடையே எப்போதுமே அதிகார போட்டி. இவ்விரு துறைத் தலைவர்களுமே எப்போதும் அடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தினரே தவிர, உண்மையான விவரத்தை தயாரித்து அளிக்கத் தவறியுள்ளனர்.
இதன் காரணமாகவே புள்ளியியல் துறையில் நவீன தொழில்நுட்ப முறை, வெளிப்படைத் தன்மை, தாமாகவே தகவல் திரட்டும் அமைப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் இத்துறைக்குள் நுழையவே இல்லை.
சர்வதேச அளவில் வழக்கொழிந்து போன கணக்கீடு முறையைத்தான் என்எஸ்சி இப்போதும் கடைப்பிடிக்கிறது என்பதிலிருந்தே அது ஒரு நூற்றாண்டு பின்தங்கியிருப்பது கண்கூடு. கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) புள்ளிவிவரங்கள் குறித்து கேள்வி யெழுப்பி வருகின்றனர்.
நிறுவனங்கள் குறித்த தகவல் அடிப்படையில் அறிக்கை தயாரிப்பது சரியல்ல என்றும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில் தகவல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் பலவும் வெறுமனே காகிதத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் அவை உண்மையில் செயல்படுவது கிடை
யாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் ஜிடிபி கணக்கீட்டிற்கு 2015-ம் ஆண்டிலிருந்து புதிய முறையை பின்பற்றத் தொடங்கியதிலிருந்தே சந்தேகம் ஆரம்பமாகிவிட்டது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு நடத்திய ஆய்வில் அரசு குறிப்பிடும் பெரும்பாலான நிறுவனங்களில் பலவற்றை கண்டேபிடிக்க முடியவில்லை என்று 2016-ல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சி, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறித்த விவரங்கள் தவறாக இருந்தால் அது நாட்டின் மீதே தவறான பிம்பத்தை உருவாக்கிவிடும்.
சில துறைகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும்போதுதான் உண்மையான வளர்ச்சி என்ன என்பது தெரியவரும்.
அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும். ஆனால், அரசே உருவகப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களை உண்மையென வெளியிடுவது சரியான செயலாக இருக்காது.