Last Updated : 20 May, 2019 11:31 AM

 

Published : 20 May 2019 11:31 AM
Last Updated : 20 May 2019 11:31 AM

பிரமிக்க வைக்கும் பிஎம்டபிள்யு எக்ஸ் 5

ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி செக்மன்ட்டில் பிஎம்டபிள்யு எக்ஸ் வரிசை மாடல்கள் சந்தையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களுடன் அட்டகாசமான செயல்திறன், ஸ்டைலான டிசைன், பிரமிக்க வைக்கும் டிரைவிங் அனுபவத்துடன் விளங்குகின்றன.

இந்த வரிசையில் இதுவரை எக்ஸ் 1, எக்ஸ் 3, எக்ஸ் 4, எக்ஸ் 5, எக்ஸ் 6 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் எக்ஸ் 5 மாடல் தற்போது பல்வேறு புதிய அம்சங்களுடனும், நவீன தொழில்நுட்பங்களுடனும் சந்தைக்கு வந்திருக்கிறது. இது நான்காம் தலைமுறை மாடல் ஆகும். கடந்த வாரம் மும்பையில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இதனை அறிமுகம் செய்துவைத்தார். 

இந்த ஆல் நியூ பிஎம்டபிள்யு எக்ஸ் 5 எல்லா வகையிலும் முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும் மேம்பட்டு விளங்குகிறது. இது கிளஸ்டர் ஆர்க்கி டெக்சர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலைக் காட்டிலும் அளவில் பெரிதாக உள்ளது. இதனால், வெளிப்புற டிசைனிலும், உட்புற கேபின் டிசைனிலும் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்களைப் புகுத்த முடிந்திருக்கிறது. வெளிப்புற டிசைனைப் பொறுத்தவரை முன்புற கிட்னி வடிவ கிரில் பெரிதாக்கப்பட்டு சற்று ஹெக்சாகன் வடிவில் உள்ளது கம்பீரத்தைத் தருகிறது.

அதோடு பம்பர், லேசர் ஹெட்லைட்டுகள், பகலில் ஒளிரும் விளக்குகள் என அனைத்தும் அசத்துகின்றன. அதேபோல் பின்புறத்திலும் டெயில் லைட்முப்பரிமாண வடிவம் கொடுக்கப்பட்டு சற்று அகலமாக்கப்பட்டிருப்பது காருக்கு சிறப்பான தோற்றத்தை கொடுக்கிறது.

வாகனத்தின் அளவு பெரிதாக்கப்பட்டிருப்பதால் உட்புறத்தில் தாரளமான இடவசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, டேஷ்போர்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடிந்திருக்கிறது. டேஷ்போர்டில் இரண்டு 12.3 அங்குல தொடுதிரைகள் உள்ளன.

இவற்றில் ஒரு தொடுதிரை உதவியால் டிரைவிங் அனுபவத்தை மிக எளிமையாக்கும் விதத்தில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் முழுக்க முழுக்க அனாலாக்கிலிருந்து டிஜிட்டலாக மாற்றப்பட்டுள்ளது. மற்றொரு தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வசதிக்காக உள்ளது.

முன்பக்கத்தில் டிரைவருக்கும், உடன் அமர்பவருக்கும் இடவசதியில் எந்தக் குறையும் இல்லாத அளவுக்குப் புத்தம் புதிய வகையில் கியர் பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்க இருக்கைகளை மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் சாதாரணமாக 650 லிட்டராக இருக்கும் பூட் ஸ்பேஸ் 1870 லிட்டர் அளவுக்குக் கிடைக்கிறது. பொருட்களை ஏற்ற இறக்க வசதியாக முழுவதுமாகத் திறக்கும் வகையில் ஸ்பிளிட் டெயில்கேட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய எக்ஸ் 5 தற்போது 30டி ஸ்போர்ட், 30 டி எக்ஸ் லைன், 40ஐ எம் ஸ்போர்ட் ஆகிய மூன்று வேரியன்ட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் முதல் இரண்டும் டீசல் வகை. இவை தற்போது சந்தையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. மூன்றாம் வேரியன்ட்டான எம் ஸ்போர்ட் பெட்ரோல் வகையாகும். இது இந்த வருட இறுதிக்குள் விற்பனைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

இன்ஜினைப் பொருத்தவரை இந்த செக்மன்ட்டில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தும் வகையில் 6 சிலிண்டர், 3 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்  8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது. இது 265 ஹெச்பி பவர் மற்றும் 620 என் எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இது 6.5 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன்கொண்டது. பெட்ரோல் வேரியன்ட்டில் பொருத்தப்பட உள்ள 3 லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜின் 340 ஹெச்பி பவர் மற்றும் 450 என் எம் டார்க்கை வெளிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது 5.5 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன்கொண்டது. மேலும் இது பிஎஸ் 6 தரத்துடன் உருவாக்கப்பட உள்ளது.

சமீபத்திய சில பிரீமியம் பிராண்டுகளில் புகுத்தப்பட்டுவரும், நவீன தொழில்நுட்பங்களான, ரிவர்ஸ் டிரைவ் அசிஸ்ட் மற்றும் செல்ஃப் பார்க்கிங் வசதிகள் இதில் உள்ளன. தானியங்கி முறையில் டிரைவரின் முயற்சி தேவையில்லாமலேயே ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் பிரச்சினைகளைச் சரிசெய்துகொள்கிறது இந்த ஆல் நியூ எக்ஸ் 5. பேரலல் பார்க்கிங்கை கூட மிகக் கச்சிதமாக செய்கிறது இதன் பார்க்கிங் அசிஸ்ட் வசதி.

மேலும் இதிலுள்ள அடாப்டிவ் சஸ்பென்ஷன் சாலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஃப் ரோடு டிரைவிங் அனுபவத்தை இதன் எக்ஸ் டிரைவ் ஆல் வீல் டிரைவிங் சிஸ்டம் உறுதி செய்கிறது.

இப்படி பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட செயல்திறன், அட்டகாசமான தோற்றம், டைனமிக் டிரைவிங் அனுபவம், ஆஃப் ரோடு, ஆன் ரோடு என்ன எல்லா சூழலிலும் தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன் என எல்லா வகையிலும் வேற லெவலில் உள்ளது எக்ஸ் 5. 

இது மினரல் ஒயிட், பைடோனிக் ப்ளூ, சபையர் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். உட்புறத்தில் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஐவரி ஒயிட், பிளாக் அண்ட் காஃபி, பிளாக் அண்ட் காக்னக், பிளாக் அண்ட் பிளாக் ஆகிய வண்ணக் கலவைகளில் கிடைக்கின்றன. இவற்றின் எக்ஸ் ஷோரும்  விலை ரூ.72.90 லட்சம் - ரூ.82.40 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- saravanan.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x