Published : 29 Apr 2019 12:32 PM
Last Updated : 29 Apr 2019 12:32 PM

சிறு சேமிப்புகளில் முதலீடு செய்ய இது சரியான நேரம்!

சிறு சேமிப்பு திட்டங்களில் பாதுகாப்பானதும், ஓரளவு அதிக வட்டி அளிக்கக் கூடியதாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன.

அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை. மேலும் இதில் வட்டி குறையுமோ, முதலீடு முழுவதுமாக போய்விடுமோ என்ற அச்சம் கிடையாது. அந்த வகையில் சில சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டித் தொகை வழக்கமான வட்டியை விட அதிகமாகவே உள்ளன.

அத்துடன் சிலவற்றுக்கு வரிச் சலுகையும் இருப்பதோடு, வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகிறது. குறிப்பாக பொது சேமநல நிதி (பிபிஎப்), தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), சுகன்ய சம்ருதியோஜனா (எஸ்எஸ்ஒய்) மேலும் 5 ஆண்டு நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு 80 சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது. பிபிஎப் திட்டம், சுகன்ய சம்ருதி யோஜனா திட்டங்களில் முதிர்வின்போது கிடைக்கும் வட்டிக்கு முழுமையான வரி விலக்கு உண்டு. தேசிய சேமிப்பு பத்திரம் மூலம் கிடைக்கும் வட்டி தொகை மீண்டும் முதலீடு செய்யப்பட்டால் அதற்கு 80 சி பிரிவின் கீழ் விலக்கு பெற முடியும்.

சிறு சேமிப்பு திட்டங்களில் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் இப்போது அதிக வட்டி அளிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இவை குறையலாம். எனவே இப்போதே முதலீடு செய்வது சிறந்தது. 2016-ம் ஆண்டு ஏப்ரலிலிருந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி நிர்ணயம் ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அரசு கடன் பத்திரங்களுக்கு ஏற்ப வட்டி விகிதம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி அரசு கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயரும்போது அல்லது குறையும் போது அதற்கேற்ப சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். இதனால் ஒவ்வொரு காலாண்டிலும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. வங்கி சேமிப்புகளுக்கு இணையாக வட்டி விகிதம் இருப்பதால் சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான ஈர்ப்பு குறைந்தது.

இருந்தாலும் காலாண்டுக்கு ஒரு முறை வட்டியை நிர்ணயிக்கும் முறை எப்போதும் பயன்படுத்தப்படுவதில்லை. அரசு கடன் பத்திரங்கள் மீதான வட்டி குறையும்போது மட்டும் மாற்றப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வட்டி குறைப்பு நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசு வட்டி குறைப்பை அடிக்கடி மேற்கொள்வதில்லை. மேலும் தற்போது தேர்தல் காலமாக இருப்பதால் வட்டி குறைப்பு செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது 10 ஆண்டுகளில் முதிர்வடையும் அரசு கடன் பத்திரங்களுக்கு அதிகபட்சமாக 8.2 சதவீத வட்டி அளிக்கப்பட்டுள்ளது.

2018 அக்டோபருக்கு முன்பு வரை இந்நிலை இருந்தது. அதன் பிறகுதான் படிப்படியாக குறைந்து தற்போது 7.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018 அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 30 புள்ளிகள் முதல் 40 புள்ளிகள் (0.3 முதல் 0.4 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக (ஜனவரி முதல் மார்ச் 2019 மற்றும் ஏப்ரல் முதல்  ஜூன் 2019 வரை) பெரும்பாலான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. அரசு பத்திரங்கள் மீதானவட்டி குறைக்கப்பட்ட போதிலும் இவற்றுக்கான வட்டி குறைக்கப்படவில்லை.

குறிப்பாக சொல்ல வேண்டுமாயின் மூத்த குடிமக்களுக்கான வட்டிவிகிதம் 8.7 சதவீதமாகவும், சுகன்ய சம்ருதி யோஜனா திட்டத்துக்கு 8.5 சதவீதமாகவும் தொடர்ந்தது. அதேபோல பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்கள் மமீதான வட்டி விகிதம் 8 சதவீதமாக நீடித்தது. அதேசமயம் வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் திட்டத்தின்படி ஜனவரி முதல் மார்ச் 2019 வரையான காலத்தில் வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்காவது மாற்றியிருக்க வேண்டும்.

ஆனால் தேர்தல் காரணமாக மத்திய அரசு இவற்றின் மீது கைவைக்கவில்லை. இருப்பினும் அடுத்து வரும் ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் இது தொடர வாய்ப்பில்லை. ஏனெனில் அப்போது புதிய அரசு பதவி ஏற்றிருக்கும். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்புகளைப் பார்க்கும்போது இனி வரும் காலங்களிலும் வட்டி குறைக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. இது அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதத்திலும் எதிரொலிக்கும். 

ஒருவேளை பணவீக்கம் அதிகரித்து ரிசர்வ் வங்கி அடுத்துவரும் நிதிக் கொள்கை கூட்டங்களில் வட்டிக் குறைப்பை மேற்கொள்ளாவிட்டாலும், சிறுசேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தை மத்திய அரசு நிச்சயம் மாற்றியமைக்கும். எனவே இப்போது உயர் வட்டி விகிதம் இருக்கும்போதே முதலீடுகளை மேற்கொள்வது சிறந்தது.உயரும் என காத்திருந்து பிறகு குறைந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்வதை விட இப்போது முதலீடு செய்வது சரியானதாயிருக்கும்

நிரந்தர சேமிப்பில் முதலீடு செய்யுங்கள்

நிரந்தர சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், அதன் முதிர்வுக் காலம் வரை இப்போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி நிச்சயம் கிடைக்கும். சிறு சேமிப்பு திட்டங்களான பிபிஎப் மற்றும் எஸ்எஸ்ஒய் ஆகிய திட்டங்களில் வட்டி விகிதம் மாறுபடலாம். எனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அவசரம் காட்ட வேண்டியதில்லை.

பொதுவாக என்எஸ்சி, எஸ்சிஎஸ்எஸ், கேவிபி, தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான வட்டி விகிதம் சேரும்போது எந்த அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டதோ அந்த அளவுக்கு அளிக்கப்படும். காலாண்டுக்கு ஒருமுறை மாறினாலும், முதலீடு செய்யும் சமயத்தில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி அதன் முதிர்வுக் காலம் வரை இருக்கும். எனவே இப்போது அதிக வட்டி விகிதம் உள்ளதால் இவற்றில் முதலீடு செய்வது சிறந்ததாயிருக்கும்.

-anand.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x