

அனில் அம்பானி சிறை செல்வதிலிருந்து அவர் சகோதரர் காப்பாற்றிவிட்டார். கடன் சுமையைக் குறைக்க அவர் வெளியிட்ட திட்டங்களால் ரிலையன்ஸ் பங்கு விலைகள் மேலும் சரியாமல் நின்றுள்ளன.
அதேபோல், ஜெட் ஏர்வேஸின் நெருக்கடியிலிருந்து எஸ்பிஐ வங்கி மீட்டுவிட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயல் விலகிவிட்டார். இதனால் இந்நிறுவன பங்குகளின் தொடர் சரிவு நிறுத்தப்பட்டுவிட்டது.
இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. ஆம் 1991-ம் ஆண்டு இந்தியாவில் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்டபோது முதலில் தனியாருக்கு திறந்துவிடப்பட்டவை இவ்விரண்டு துறைகளும்தான். அதேசமயம், இன்று மிக மோசமான நிலையில் இருப்பதும் இவ்விரு துறைகள்தான்.
தொலைத் தொடர்புத் துறையில் தனியார் அனுமதிக்கப்பட்ட பிறகு எத்தனை நிறுவனங்கள் வந்தன. பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவையும் தனியாருடன் போட்டியிட வேண்டும் என்று இவற்றுக்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகைகள் அளிக்கப்பட்டன.
இவை தவிர ஆர்பிஜி, எம்டிஎஸ், பிபிஎல், டெலிநார், யுனிநார், டாடா, ரிலையன்ஸ் ஆகியவற்றோடு அடுத்தடுத்து இன்னும் பல நிறுவனங்கள் தொலைத் தொடர்பில் களமிறங்கின.
ஆனால், இன்று மூன்று நிறுவனங்கள்தான் களத்தில் இருக்கின்றன. மற்றவற்றின் கதி குறிப்பாக தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஏர்செல் நிறுவனம் என்னவாயிற்று? தொலைத்தொடர்பு சந்தையில் உலகிலேயே இரண்டாவது பெரிய வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே நிலைத்திருப்பது எதை உணர்த்துகிறது?
ஆரம்ப காலங்களில் நிறுவனங்கள் நிர்ணயித்ததே கட்டணமாக இருந்தது. பிறகு தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ள நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு சலுகைகளைத் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்த ஆரோக்கியமற்ற போட்டி அந்தத் துறைக்கே எதிராக மாறியது. தாக்குப்பிடிக்க முடியாத நிறுவனங்கள் கடையை மூடின.
விமான போக்குவரத்து துறையும் இப்படித்தான். அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் அதை காப்பாற்ற அரசு முதலீடுகளை தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கும்.
ஆனால், ரூ. 999-க்கு விமான சேவை என ஏர் டெக்கான் அறிவித்து அதிரடி சலுகையை ஆரம்பத்தது. அப்போதிலிருந்து இத் துறை சரிவுப் பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு விமானப் போக்குவரத்தில் எத்தனை நிறுவனங்கள் தோன்றின.
ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ், ஏர் சஹாரா, பாரமவுன்ட், என்இபிசி, கிங்ஃபிஷர் எனப் பட்டியல் நீளும். ஆனால் இன்று இருக்கும் நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மிஞ்சி இருக்கும் நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. நிதி ஆண்டு முடிவில் இத்துறை எதிர்நோக்கும் நஷ்டம் மட்டும் 170 கோடி டாலர்.
ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸால் சிரமத்தை எதிர் கொண்டது. ஏர் சஹாராவை வாங்கியதால் ஜெட் ஏர்வேஸுக்கு போறாத காலம் ஆரம்பமானது.
அனில் அம்பானியின் ஆர்காம் சிரமத்தில் இருந்தபோது அந்நிறுவன பங்குகள் ரூ. 3.95 என்ற அளவுக்கு சரிந்தன. இதேபோல ஜெட் ஏர்வேஸின் பங்குகளால் 65 சதவீத அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு நேர்ந்தது.
இவ்விரு துறைகளின் சரிவு வங்கிகளின் வாராக் கடன் சுமையை அதிகரிக்க காரணமாக அமைந்தது. இவ்வளவு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்கியிருக்கும் இந்தத் துறைகள் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராக உள்ளன. இந்திய விமானத் துறை அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் அடுத்த கட்டமாக 5-ஜி வர உள்ளது. இப்போது, பிரச்சினைகளின் தீவிரத்தை ஆராய்ந்து உரிய தீர்வுகளை சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆர்காம், ஜெட் ஏர்வேஸ் பிரச்சினை முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது.