

அதிகரித்து வரும் மாசுபாட்டினால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கான தேவை அதிகரித்து வருகிறது. காற்றை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன. பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆய்வு மற்றும் உற்பத்தியை முயற்சிக்க யோசிக்கும் நிலையில், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக ஆர்வமுடன் இருக்கின்றன.
ஏதர் எனர்ஜி, அல்ட்ராவயலெட் ஆட்டோமோட்டிவ், டார்க் மோட்டார்ஸ், கிகாடைன் எனர்ஜி மற்றும் லாக் நயன் போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான பேட்டரி, மோட்டார் போன்றவற்றில் புதுப்புது ஆராய்ச்சிகளை முயற்சித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் முதலீடுகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.
ஹீரோ மோட்டார்ஸ் ஏதர் எனர்ஜியில் 32.31 சதவீத பங்கு வகிக்கிறது. அல்ட்ரவயலெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் டிவிஎஸ் 25.76 சதவீத பங்கு வகிக்கிறது. இதுபோக பஜாஜ், மஹிந்திரா உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனைக்காக துணை நிறுவனங்களை அல்லது பிராண்டுகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளன.
ஏற்கெனவே சந்தையில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றை வாங்குவதற்கு பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இப்போதைக்கு எலெக்ட்ரிக் வாகன சந்தை மந்தமாகவே உள்ளது. ஆனால், விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை உருவாகும் என்பதும், அது சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.
எவ்வளவு விரைவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இந்தியா இறங்குகிறதோ அதைப் பொறுத்து சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்தலாம். இல்லையெனில் வழக்கம்போல வெளிநாட்டு தயாரிப்புகள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் நிலைதான் உண்டாகும்.